கருங்குளம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தபால் ஓட்டுகள் வேண்டி சத்துணவு ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
தமிழகம் முழுவதும் ஊரக உள்ளாட்சித்தேர்தல் இரண்டு கட்டமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அரசு ஊழியர்களான சத்துணவு ஊழியர்களுக்கு 23, 24, 25 ஆகிய மூன்று தேதிகளில் நடைபெற்றது.
ஆனால் தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள கருங்குளம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட சத்துணவு ஊழியர்களுக்கு தபால் ஓட்டுகள் வழங்கவில்லை என்று கூறி செய்துங்கநல்லூரில் உள்ள கருங்குளம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு சத்துணவு ஊழியர்கள் 100 க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் எங்களுக்கு தபால் ஓட்டுகள் வழங்க வேண்டும் என்று கோஷமிட்டனர். சுமார் 3 மணி அளவில் நடந்த இந்த போராட்டம் 5 மணி வரை தொடர்ந்தது. அதன்பின்னர் அவர்கள் அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் செய்துங்கநல்லூர் போலிசார் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனாலும் அது முடிவு பெறவில்லை. அதன்பின்னர் ஸ்ரீவைகுண்டம் வட்டாச்சியர் சந்திரன் அவர்களிடம் வந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.
இதுகுறித்து சத்துணவு ஊழியர்கள் கூறும்போது, எங்களுக்கு தபால் ஓட்டு வேண்டும் என்று கேட்ட போது அதிகாரிகள் நீங்கள் பணிக்கு செல்லும் ஆணையின் நகலை தந்தால் மட்டுமே தபால் ஓட்டுகள் தர முடியும் என்று கூறிவிட்டனர். அதன்பின்னர் தொடர்ந்து தேர்தல் பணிகள் இருந்ததால் எங்களால் வாக்கு போட முடியவில்லை. எனவே இன்று தபால் ஓட்டுகளுக்கான படிவத்தை கேட்டோம். ஆனால் கருங்குளம் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் தர மறுத்து விட்டார். அதனால் நாங்கள் போராட்டம் செய்து வருகிறோம். எங்களுக்கு வாக்கு தரும் வரை இந்த போராட்டம் தொடரும் என அவர்கள் தெரிவித்தார்கள்.


