தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தில் அரசு போக்குவரத்து கழகம் சார்பில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு கோடி ரூபாய் செலவில் பணிமனை அமைக்கப்பட்டது. மெயின் ரோட்டில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தூரம் காட்டுப்பகுதியில் பணிமனை அமைக்கப்பட்டதால் பணிமனைக்குச் செல்ல சாத்தான்குளம் ஊராட்சி ஒன்றியம் சார்பில் 25 லட்சம் செலவில் சாலை அமைக்கப்பட்டது. அதற்காக சாலை அமைக்கும் இடத்தினை தனிநபரிடமிருந்து தானமாக வாங்கப்பட்டது. அதன்பின்னர் அந்த சாலை அமைக்கப்பட்டது.
ஒன்றிய நிதியில் இருந்து சாலை அமைக்கப்பட வேண்டுமானால் சம்பந்தப்பட்ட ரோடு ஒன்றிய நிர்வாகத்தின் கீழ் வர வேண்டும். ஆனால் இது தனியாருடைய விவசாய நிலம் அரசு போக்குவரத்து கழகத்திற்கு இலவசமாக எழுதிக்கொடுத்ததாக கூறப்படுகிறது.
அரசு போக்குவரத்து கழகத்திற்கு சொந்தமாக எழுதிக்கொடுத்த இடத்தில் ஒன்றிய நிதியில் இருந்து எப்படி சாலை அமைக்கலாம் என தலைமை கணக்காயர் கண்டனம் தெரிவித்து அந்த பணத்தை திரும்ப கட்டுமாறு சாத்தான்குளம் ஒன்றிய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருப்பதாக கூறப்படுகிறது.
பணிமனை செல்லும் சாலை அமைக்க அனுமதித்து விட்டு தற்போது ஆடிட்டர் பணத்தை திரும்ப கட்ட வலியுறுத்தியுள்ளதால் அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்து திணறி வருகின்றனர்.
இதுகுறித்து போக்குவரத்து கழக பணிமனை நிர்வாகத்திடம் பணம் வாங்க முடியுமா எனவும் ஆலோசித்து வருவதாகவும் கூறப்படுகிறது.
இதுகுறித்து சமூக ஆர்வலர் ஒருவர் கூறுகையில், சாத்தான்குளத்தில் அரசு போக்குவரத்து கழக பணிமனை அமைக்கப்பட்டு ஒரு ஆண்டுகள் ஆகியும் இதுவரை எந்தவித முன்னேற்றமும் இல்லை. அரசு பஸ் மற்றும் பணியாளர்கள் முறையாக நியமிக்கப்படவில்லை. பணிமனையே பெயரளவில் தான் செயல்பட்டு வருகிறது. தற்போது பணிமனைக்கு சாலை அமைத்த பணத்தை திரும்ப கேட்டுள்ளதால் பணிமனை சாத்தான்குளத்தில் முழுமையாக செயல்படுமா? என்ற அச்சமும் மக்களிடம் எழுந்துள்ளது. சாத்தான்குளம் பணிமனைக்கு அனைத்து அடிப்படை வசதிகள் செய்து கொடுப்பதுடன் கூடுதல் பஸ் பணியாளர்கள் நியமிக்க வேண்டும் என தெரிவித்தார்.
இதற்கிடையில் ஸ்ரீவைகுண்டத்தில் செயல்பட்டு வரும் அரசு போக்குவரத்து கழக பணிமனையில் இருந்து தான் சாத்தான்குளம் பணிமனை திறந்த போது 4 பேருந்துகள் வழங்கப்பட்டது. தற்போது வரை சாத்தான்குளம் பணிமனையில் அதே 4 பேருந்துகள் மட்டுமே இயங்கி வருகிறது. இந்த பணிமனையில் செயல்பட்டுக்கொண்டிருக்கும் பேருந்துகளை நிறுத்திவிட்டு ஸ்ரீவைகுண்டம் பணிமனையில் பேருந்துகளுக்கு டயர் செய்யும் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. அந்த தொழிற்சாலையை சாத்தான்குளம் பணிமனையில் செயல்படுத்த அரசு போக்குவரத்து கழகம் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில இன்று சாத்தான்குளத்தில் அனைத்துக்கட்சி கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் திமுக, காங்கிரஸ், தமிழ்மாநில காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகள் என அனைத்து கட்சியினரும் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் சாத்தான்குளத்தில் செயல்பட்டு வரும் பணிமனையில் கூடுதல் பேருந்து இயக்கவும், ஸ்ரீவைகுண்டம் பணிமனையில் செயல்பட்டு வரும் டயர் உற்பத்தி செய்யும் தொழிற்சாலையை இங்கு அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக 21ம் தேதி சாத்தான்குளத்தில் அனைத்துக்கட்சிகள் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது-.