தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம அருகே உள்ள தாதன்குளத்தில் மாரியப்பன் என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் ஆடுகள் வளர்க்கப்படுகின்றன. இந்நிலையில் நேற்று அதிகாலை அந்த தோட்டத்திற்குள் புகுந்த மர்ம நபர்கள் தோட்டத்தின் காவலாளிகளான கருங்குளம் மாதங்கோவில் தெருவை சேர்ந்த செல்லையா மகன் பேச்சிமுத்து மற்றும் தாதன்குளம் ஆர்.சி கோவில் தெருவை சேர்ந்த முத்தையா மகன் அருணாச்சலம் ஆகிய இருவரையும் அரிவாளால் தாக்கி அந்த தோட்டத்தில் இருந்த 37 ஆடுகளை திருடிச் சென்றுள்ளனர்.
இதுகுறித்து காவலாளி பேச்சிமுத்து என்பவர் அளித்த புகாரின் பேரில் சேரகுளம் காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இச்சம்பவம் தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் பாலாஜி சரவணன் ஸ்ரீவைகுண்டம் காவல் துணை கண்காணிப்பாளர் மாயவன் மேற்பார்வையில் சேரகுளம் காவல் நிலைய (பொறுப்பு) ஆய்வாளர் அன்னராஜ், சிறப்பு உதவி ஆய்வாளர் குணசேகரன் தலைமையிலான ஸ்ரீவைகுண்டம் உட்கோட்ட தனிப்படை போலீசார் மற்றும் சிறப்பு உதவி ஆய்வாளர் பிரெட்ரிக் ராஜன் தலைமையிலான போலீசார் ஆகியோர் அடங்கிய தனிப்படை அமைத்து சம்பந்தப்பட்ட எதிரிகளை கைது செய்ய உத்தரவிட்டார்.
மேற்படி உத்தரவின் பேரில் தனிப்படை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டதில் ஸ்ரீவைகுண்டம் தெற்கு மாடத்தெருவை சேர்ந்த பூல்பாண்டி மகன் முத்து சங்கர், அம்பலச்சேரி பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த கிருஷ்ணன் மகன் சுடலை கண்ணன் மற்றும் கருங்குளம் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த சொரிமுத்து மகன் உச்சினிமாகாளி ஆகியோர் சேர்ந்து சரக்கு வாகனத்தில் இந்த ஆடுகளை திருடியது தெரியவந்தது.
இதனையடுத்து போலீசார் முத்து சங்கர், சுடலை கண்ணன் மற்றும் உச்சினிமாகாளி ஆகிய 3 பேரையும் கைது செய்து அவர்களிடமிருந்த 26 ஆடுகள் மற்றும் திருடுவதற்கு பயன்படுத்தப்பட்ட சரக்கு வாகனத்தையும் பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து சேரகுளம் காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


