செல்வியை கட்டிப்பிடித்தப்படியே காளியும் அழுதான்.
“என்னங்க உண்மையை சொல்லுங்க. நான் மலடியாகிட்டேனா”
“ஆமாம் செல்வி. உன்னோட கர்ப்ப பையை எடுத்தாச்சி. எடுத்தாத்தான் நீ உயிர் பிழைப்பேன்னு டாக்டர் சொன்னாரு. அதனால எடுக்க சொல்லிட்டேன்”.
“ஏங்க அப்போ நான் இனிமே குழந்தை பெத்துக்க முடியாதா?”.
அமைதியாக இருந்தான் காளி.
“என்னங்க நான் கேட்கிறேன்னுல பதில் சொல்லுங்க”.
தலையை அசைத்தான் காளி.
கதறி அழுதாள். ஒரு கன்னி. அதுவும் திருமணமாகி கன்னியே கழியாமல் இருந்தவள். இப்போது குழந்தை பேறு இல்லாத நிலைக்கு சென்று விட்டாள்.
சிறிது நேரம் அவள் அழுது தீர்க்கட்டும் என அமைதியாக இருந்தான் காளி.
தாத்தாவும் அவர்களுக்கு எப்படி ஆறுதல் சொல்ல என தெரியாமல் தவித்துக்கொண்டிருந்தார்.
காளி சொன்னான்.
“செல்வி நமக்கு குழந்தை தாமிரபரணி தான். தாமிரபரணி என்றைக்கு தலை நிமிர்ந்து நிற்குதோ அன்னைக்குதான் நமக்கு குழந்தை என்றாயே. உனக்கு நினைவு இருக்கிறதா?. இப்போதும் சொல்கிறேன். நமக்கு குழந்தை பேறு முக்கியமல்ல. தாமிரபரணி காப்பாற்ற பட வேண்டும். அதற்காகத்தான் இந்த பிறவி எடுத்து இருக்கிறோம். தாமிரபரணி தாய்தான் நமக்கு முக்கியம். இது முக்கியமல்ல”.
அழுத விழிகளோடு அவனை பார்த்தாள். இவன் சொன்னது எதுவும் அவள் காதில் விழவில்லை. “நான் உங்களை நான் ஏமாத்திட்டேங்க”. அவனை கட்டி அணைத்தப்படியே கதறினாள்.
“இல்லை செல்வி”.
“இல்லைங்க. திருமணமாகி இத்தனை நாள். நாம் நம்முடைய சுகத்தையெல்லாம் மூட்டை கட்டி வைத்து விட்டோம்”.
“அதெற்கென்ன செல்வி. அமைதியாக இரு. எதுவும் பிரச்சனை இல்லை. நான் அமைதியாக இருக்கிறேன். நமக்கு தாமிரபரணி தான் முக்கியம்”.
தாத்தாவுக்கு என்ன சொல்லவென்றே தெரியவில்லை. யோசித்தார். இந்த இளவயதில் இருவருக்கும் எவ்வளவு பெரிய பெருந்தன்மை. தன் சுகத்தினை இழந்து நதிக்காக யோசிக்கிறார்கள்.
யோசித்தார். இருவரும் அவர் மனக்கண்ணில் மிகப்பெரிய ஞானியாக தெரிந்தார்கள். அன்று அழுத இரு விழிகள். கண்ணீர் வற்றும் வரை அழுது தீர்ந்தது.
காலங்கள் கடந்தது. மூன்று மாதம் ஆஸ்பத்திரியிலேயே அவர்கள் ஜீவனாம்சம் கழிந்தது. அதன் பின்பும் இருவரும் ஊருக்கு வர இயலவில்லை. அந்த அளவுக்கு இவர்கள் பெயரை ஊரில் கெடுத்து வைத்திருந்தார்கள்.
ஊரில் இவர்கள் மீது மாரியப்பன் ஏற்படுத்திய புகார் அப்படியே மககள் மனதில் இருந்தது. இவர்கள் இருவரும் பணம் வாங்கி விட்டார்கள் என்றே ஊர்மக்கள் நம்பியிருந்தார்கள். ஆகவே தான் உடல் சரியில்லாத செல்வியை பார்க்க யாருமே ஆஸ்பத்திரிக்கு வரவே இல்லை.
செல்வியும் காளியும் ஒரு முடிவு செய்தார்கள்.
இனி ஊருக்குபோய் எந்த பிரயோசனமும் இல்லை. எனவே நாம் பாளையங் கோட்டையில் ஒரு வீட்டை வாடகை எடுத்து அங்கே தங்குவோம் என வீரமாணிக்கப்புரம் வந்தார்கள். அங்கு ஒரு சிறிய வீடு. இருவருக்கும் போதுமானதுதான். தாமிரபரணியின் மத்தியப்பகுதித்தான் இது. இங்கிருந்து தலைப்பகுதிக்கும் சென்று விடலாம். கடை பகுதிக்கும் சென்று விடலாம்.
நெல்லை கொக்கிரகுளத்தில் உள்ள கலெக்டர் அலுவலகத்திற்கு உடனே சென்று விடலாம் . ஆகவே தான் இந்த இடத்தினை தேர்வு செய்தார்கள். தாத்தாவும் கிட்டத் தட்ட இவர்களோடு குடியேறிவிட்டார். இவர்கள் உடன் சேர்ந்து தாமிரபரணியை காப்பாற்ற அலைய ஆரம்பித்தார். அவர் ஊருக்கு போக வேண்டும் என்றால் கிட்டத்தட்ட தினமும் 30 கிலோ மீட்டர் பயணிக்க வேண்டும். எனவே இங்கேயே தங்கி இவர்கள் உடன் சாப்பிட ஆரம்பித்து விட்டார்.
அடுத்த இரண்டு மாதங்களில் தாமிரபரணியை காப்பாற்றும் வேலையை செய்ய ஆரம்பித்தனர். தொடர்ந்து தாமிரபரணியில் ஆற்று மணல் திருட்டு வேறு மாதிரியாக ஆரம்பித்தது. மக்கள்தலைச்சுமையாக சுமந்து கரையில் சேர்த்து வைத்து , அதன் பின் லாரிகளில் மணலை ஏற்றி அதன் மீது செங்கல்களை அடுக்கி வைத்து டவுணுக்குள் கொண்டு வந்து விற்பனை செய்தனர். காரணம் ஆற்றுக்குள் வாகனங்கள் இறங்க முடியாமல் கடுமையான சட்டம் இருந்தது. இருந்தாலும் சில இடங்களில் மணல் குவாரி அமைக்க அரசு ஏற்பாடு செய்து கொண்டிருந்தது. அரசு மணல் குவாரி அமைத்தால் சட்டத்தோடு இணைந்து சமூக விரோதிகள் அளவுக்கு அதிகமாக மணலை அள்ளி விடுவார்கள். மீண்டும் தாமிரபரணியை கூறுபோட்டு விடுவார்கள். இதற்கு எதிர்ப்பை காட்ட வேண்டும் என்று நினைத்தார்கள் காளியும் செல்வியும்.
இதற்கிடையில் தாத்தா ஒரு திட்டம் வகுத்து கொடுத்தார். அதன் படி கலெக்டர் அலுவலகம் முன்பு பெண்களை திரட்டி பெரிய ஆர்ப்பாட்டம் நடத்துவது என முடிவு செய்தார் . பெண்களை எங்கே இருந்து திரட்டுவது. ஏற்கனவே தொண்டு நிறுவனத்தில் வேலை செய்த காரணத்தினால் நிறைய மகளிர் குழு தலைவிகள் காளிக்கும் செல்விக்கும் பழக்கம்.
இந்த பழக்கம் மூலமாக பெண்களை திரட்ட திட்டமிட்டனர். ஒவ்வொரு குழு தலைவியையும் நேரில் போய் பார்த்தனர். தாமிரபரணியில் மணல் பறிபோய் விட்டால் என்னனென்ன பிரச்சனை வரும் என்பதை விரிவாக எடுத்து சொன்னார்கள். சாக்கடை கலக்கும் தண்ணீர் ஆற்று மணல் இல்லை யென்றால் கூவம் ஆகி விடும். வெங்காய தாமரை நதியில் உள்ள முக்கிய இடங்களை அடைத்து குடிக்கும் தண்ணீர் நமக்கு சுத்தமில்லாத தண்ணீராக மாறிவிடும். மீன் இனங்கள் அழிந்து விடும். எனவே தயவு செய்து மணல் அள்ள விடக்கூடாது என அவர்களுக்கு எடுத்துச்சொன்னார்கள்.
மகளிர் குழுவினர் அனைவரும் ஆயத்தனமானர்கள். சுமார் 200 பெண்கள் கூடுவதற்கு ஆயத்தமானர்கள். ஒரு திங்கள் கிழமை காலை 9 மணிக்கு கலெக்டர் அலுவலகம் முன்பு இவர்கள் மூவரும் காத்து நின்றார்கள். எப்படியும் 9.30க்குள் அனைவரும் வந்துவிடுவார்கள். அதற்காக கோஷம் தயார் நிலையில் இருந்தது. விளம்பர பதாகை கையில் பிடிக்கும் அளவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
சாலையை எட்டி எட்டி பார்த்துக்கொண்டிருந்தார்கள். மூவரும். ஆனால் இதுவரைக்கும் யாரும் வரவில்லை. எல்லா ஊரில் இருந்து 9மணிக்கு பஸ் வந்திருக்குமே. ஏன் இவர்கள் வரவில்லை.
நேரம் 10 மணி ஆகி விட்டது யாரும் வரவில்லை.
இவர்கள் மூன்று பேரும் யோசித்துக்கொண்டிருந்தார்கள். தாத்தா சொன்னார். “போரட்டம் போராட்டம் தான். மகளிர் குழு போராட்டம் தனி நபர் பேராட்டமாகட்டும். நான் உண்ணாவிரதம் இருக்கிறேன். நீங்கள் என் பின்னால் மட்டும் நில்லுங்கள்” என்றார்.
உண்மைத்தான் கூட்டம் சேர்த்து போராட்டம் நடத்துவது ஒரு வகையென்றால். இதுவொரு தனி வகை. தனிநபர் சத்தியாகிரகம் தான் எபபோதுமே ஜெயிக்கும். கூட்டம் சேர்ந்தால் அதில் யாராவது ஒருவர் மாற்று கருத்துடன் பேசினால் அந்த கூட்டமே எதற்காக கூடியது என்பது தெரியாமல் மறைந்து விடும். ஆனால் தனிநபர் போராட்டம் அப்படியல்ல. எப்படியும் வெற்றி அடைந்து விடும்.
மறுநிமிடமே கலெக்டர் அலுவலகம் முன்பு தாத்தா தர்ணா போராட்டமாக அமர்ந்தார். இவர்கள் ஏற்கவே எற்பாடு செய்த பாதகையெல்லாம் அவரை சுற்றி வைக்கப்பட்டது. வரும் பத்திரிக்கையாளர்களிடம் செல்வியும் காளியும் பேச ஆயத்தமானர்கள்.
“அனுமதிக்காதே அனுமதிக்காதே
மணல்கோரியை அனுமதிக்காதே”.
“கெடுக்காதே கெடுக்காதே
தாமிரபரணி அழகை கெடுக்காதே”
“கலக்காதே கலக்காதே
சாக்கடையை நதியில் கலக்காதே”
“திருடாதே திருடாதே
ஆற்று மணலை திருடாதே”
“போடாதே போடாதே
குப்பைகளை ஆற்றில் போடாதே”
“கொல்லாதே கொல்லாதே
மீன்களை கொல்லாதே”
“உறிஞ்சாதே உறிஞ்சாதே
ஆற்று தண்ணீரை உறிஞ்சாதே”
“விரட்டாதே விரட்டாதே
போராட்ட காரர்களை விரட்டாதே”
“கடத்தாதே கடத்தாதே
நடவடிக்கை எடுக்க நேரத்தை கடத்தாதே”
“வளர விடாதே வளர விடாதே
நீர்கருவை செடியை வளர விடாதே”
“வேடிக்கை பார்க்காதே வேடிக்கை பார்க்காதே
ஆக்கிரமிக்க விட்டு வேடிக்கை பார்க்காதே”
“அள்ள விடாதே அள்ளவிடாத
செங்கல் சூளைக்கு மண்ணை அள்ள விடாதே”
“தேங்க விடாதே தேங்க விடாதே
வெங்காய தாமரை செடியை அணையில் தேங்க விடாதே”
என விளம்பரம் தாங்கி பாதகை அ-ங்கே இருந்தது.
தனிமனிதர் போராட்டம் என எல்லாரும் முதலில் அமைதியாக இருந்தார்கள்.
ஆனால் தாத்தாவின் வெள்ளை வேஷ்டி, வெள்ளை சட்டை, அதுவும் கதர் சட்டை, அவரின் தாடி, எதையோ இழந்தது போன்ற கண்கள் அனைவரையும் கவர்ந்தது. ஊடகங்கள் அவரிடம் வந்து மைக்கை நீட்டியது.
அவர் தாமிரபரணி அழிவுகளை மடைதிறந்த வெள்ளம் போல பேச ஆரம்பித்தார். இதில் சில டிவிக்கள் லைவ் போட்டு காண்பிக்க ஆரம்பித்தனர்.
இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
“தாமிரபரணியில் கடந்த 10 வருடங்களுக்கு முன்பு கூட மூன்று போகம் விளைந்தது. தற்போது தொழிற்சாலைக்கு தண்ணீர் கொடுத்த காரணத்தினால் இரண்டு போகம் தான் விளைகிறது. தொடர்ந்து தனியார் கம்பேனிக்கு தண்ணீரை விற்கிறது அரசு. இது எந்த விதத்தில் நியாயம். நதியில் நான்கு மாவட்டத்துக் கும் குடிதண்ணீர் கொடுக்க தாமிரபரணியில் தான் குடிதண்ணீர் பைப் போட்டு இருக்கிறார்கள். இப்போது ஆற்று மணலை அள்ளி விற்றுவிட்டால் அவ்வளவு தான். தாமிரபரணி தண்ணீரை இயற்கையாக சுத்திகரிக்க இயலாது. தண்ணீரில் திருநெல்வேலி சாக்கடையெல்லாம் கலந்து விடும். இந்த நீர் சுத்திரிக்கப்பட வில்லையென்றால் நதியே சாக்கடையாகி விடும். இந்த சாக்கடை கழிவு நீர் தான் குடிதண்ணீராக போய் சேரும். அப்படியென்றால் நாலு மாவட்ட மக்களும் நோயால் படாத பாடு பட வேண்டியிருக்கும். எனவே ஆற்று மணலை இதுவரை விற்றது போதும். இனிமேல் புதிய மணல் குவாரி அமைக்க கூடாது” என்று பேசினார்.
மறுநாள் காலையில் அனைத்து பத்திரிக்கையிலும் இதுதான் தலைப்பு செய்தி.
தாமிரபரணியை எல்லா மக்களும் உற்று நோக்க ஆரம்பித்தார்கள்.
உண்மைதானே.
பூனைக்கு யார் மணிகட்டுவது என்று இருந்தார்கள். இப்போது தாமிரபரணியை காக்க ஒரு படை திரண்டு உள்ளது. எனவே தாத்தா பின்னால் அந்த படைகள் திரள ஆரம்பித்தது.
ஆனால் காளிக்கும் செல்விக்கும் மனவேதனையாக இருந்தது. நம்மோடு நம்மாக இருந்த மகளிர் குழுவினர் எங்கே போனார்கள்.
முதலில் ஒரு குழு தலைவியை போய் சந்தித்தனர் இவரும். அவள் இவர்கள் இருவரையும் வீட்டுக்குள் அழைத்தாள்.
“யக்கா. நேற்று போராட்டத்துக்கு ஏன் வரவில்லை”.
“இல்லை எனக்கு கொஞ்சம் வேலை இருந்துச்சு”.
“முதலில் சொல்லியிருந்தா நான் வேறே ஆளை கூப்பிட்டுட்டு போயிருப்பேன்லா”.
“இல்லை. நான் சொல்லணுமுன்னுதான் நினைச்சேன்”.
அப்போது வெளியே ஒரு பெண் சத்தம் கேட்டது.
“யக்கா குருவம்மக்கா. நீ கொடுத்த காசுபோதாதுன்னு மூலை வீட்டுக்காரி சண்டைக்கு வாரா?”
அவரசமாக எழுந்தாள் . “ஏடி நீ போயிட்டு பொறவு வா”.
“எக்கா நான் வேலைக்கு போனும். நீ சொன்ன மாரி ஒவ்வொருவருக்கும் 200 ருபாய் கொடுத்து போராட்டத்துக்கு வரவேண்டாமுன்னு சொன்னேன். எல்லோரும் கேட்டுக்கிட்டாவ. ஆனா மூலை வீட்டுக்காரித்தான் வாங்க மாட்டுக்கா. நீ நிறைய காசு அடிச்சிருக்கியாம். அவளுக்கு கொஞ்சம் கூட்டி கொடுக்கணுமாம்”.
பல்லைக் கடித்துக்கொண்டு நின்றாள் குருவம்மக்காள்.
செல்விக்கும் காளிக்கும் புரிந்தது.
நாம் கூட்டம் சேர்க்க படாத பாடு பட்டோம். ஆனால் அந்த கூட்டத்தினை கலைக்க ஏதோ ஒரு ஏற்பாடு நடந்துள்ளது.
எதுவும் தெரியாதது போல இருந்தனர்.
குருவம்மாள் உள்ளே வந்தாள்.
“இல்லை. களை பறிக்க பணம் கொடுத்து இருந்தேன். மூலை வீட்டுக்காரி பைசா காணாதுன்னு சொன்னாலாம். அதனாலத்தான் என்ன செய்யன்னு தெரியவில்லை”.
என கூறிவிட்டு உள்ளே வந்தாள்.
சிரித்தாள் செல்வி.
“யக்கா. நான் சொல்லுதேன்னு தப்பா நினைக்காதே. நீ யாருக்கிட்டேயோ பணம் வாங்கிட்டு எல்லோருக்கும் பிரிச்சி கொடுத்து போராட்டத்துக்கு வரக்கூடாதுன்னு ஏற்பாடு பண்ணியிருக்க”.
அமைதியாக இருந்தாள்.
“யக்கா. நம்ம ஆறு. நம்ம மணல். இதை இழந்தா. இன்னும் 50 வருசத்துல நம்ம ஊரு பாலை வனமா மாறிடும். குடிக்க தண்ணீ இல்லாம சென்னை கூவம் நதி போல நம்ம நதி மாறிடும். இதை காப்பாற்றத்தானே நாங்க வந்தோம். இப்போ எதுக்கு பணம் வாங்கிறதுன்னே தெரியாம பணம் வாங்க ஆரம்பிச்சிட்டீயளே”.
குருவம்மா சொன்னா. “கையில வந்து ஒருத்தன் பணம் தந்தா வாங்காம இருக்க முடியுமா?”
காளி பேசினான்.
“அக்கா. நம்ம உரிமையையெல்லாம் பணத்துக்காக விட்டு கொடுத்துகிட்டு இருக்கோம். மணலை அள்ள பணம் கொடுக்காங்க வாங்கி கிடுதோம். எலக்சனுல நின்னா காசு தாராங்க வாங்கி கிடுதோம். அதுக்கப்புறம் அவங்க கிட்ட என்ன எதிர்பார்க்க முடியும்”.
செல்வி தொடர்ந்து பேசினாள்.
பாரதியார் கண்ட கனவுன்னுதான் நாம மகளிர் குழுவை உருவாக்கினோம். மகளிர் குழு, மகளிர் மானத்தை நிலைநாட்டவும், மகளிர் உரிமைகளை பாதுகாக்கவும் தான் ஏற்படுத்தப் பட்டது. வீட்டுக்குள்ளே பூட்டி கிடந்த மகளிரை வெளி உலகத்துக்கு கொண்டு வர உருவாக்கப்பட்டது. கந்து வட்டிக்கு கடன் வாங்கி கஷ்டப்படக்கூடாதுன்னு குறைஞ்ச வட்டிக்கு கடன் தர மகளிர் குழுவை உருவாக்குனாங்க. மக்களுக்கு நல்லது கெட்டது தெரியணுமுன்னா பெண்கள் வழியாக சொன்னால் தான் புரியுமுன்னு மகளிர் குழுவை உருவாக்கி அதுல நல்ல நல்ல திட்டங்களை சொன்னோம்”.
குருவம்மாள் திருட்டு முழி முழித்தப்படியே நின்றாள்.
காளி தொடர்ந்தான்.
“மகளிர் உரிமை, மகளிர் நல்வாழ்வு, குடிகார புருசனிடம் இருந்து தப்பிக்க, குழந்தைகளுக்கு நல்ல கல்வி கொடுக்க, சுற்றுபுறத்தை சுகாதாரமாக வச்சிகிட, கத்து வட்டிகாரன்கிட்ட இருந்து தப்பிக்கன்னு உருவாக்கப்பட்ட மகளிர் குழுவுக்கா இது. இப்போ அரசியல் கட்சி கூட்டத்துக்கு பணம் வாங்கிட்டு போறது. பணம் வாங்கிட்டு வாக்களிக்கிறது. பணம் வாங்கிட்டு கனிம வளத்தை திருட விடுவதுன்னு எல்லா கெட்ட காரியத்துக்கும் இந்த மகளிர் குழுபயன்பட ஆரம்பிச்சிட்டே. இது நியாயமா குருவம்மா அக்கா”.
செல்வி தொடர்ந்து பேசினாள்.
“அரசு உங்க மூலமாத்தான் திட்டங்களை ஊருக்குள்ள கொண்டு வந்தாங்க. ஆனால் அரசுக்கிட்ட சில விசயங்களை போராட்டமாக சொல்லவேண்டிய நீங்களே இப்படி ஆகிட்டீங்களே”.
தலை கவிழந்தாள் குருவம்மா.
“அக்கா. தப்பா நினைக்காதீங்க. உங்களுக்கு காசு கொடுத்தது யாரு. சொல்லுங்கக்கா”.
குருவம்மா சொன்ன அந்த பதில் அவர்களை வேதனையடைய வைத்தது.
( நதி தொடர்ந்து பயணிக்கும்)


