மிக்ஸம் புயல் வெள்ளத்தால் மிகவும் பாதிக்கப்பட்ட சிவகளை, பறம்பு, ஆவாரங்காடு மற்றும் மாங்கொட்டாபுரம் கிராமங்களுக்கு இரண்டே நாட்களில் மின்சாரம் வந்தது எப்படி? தண்ணீா் தட்டுபாடு எப்படி தீா்க்கப்பட்டது? கட்டுரை – சிவகளை.ஆ.மாணிக்கம்
மறதி என்பது சோகத்தை மறக்கச் செய்யும் அருமருந்து.
கடந்த 17-12-2023 ஞாயிறன்று தென் தமிழகத்தில் உள்ள திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் தொடா்ச்சியாக மிக்ஸம் புயல் காரணமாக பெய்த கனமழையால் இந்த மாவட்டங்களுக்கு வானிலை மையத்தால் சிகப்பு எச்சரிக்கை விடப்பட்டிருந்தது. ஒரு காலத்தில் ஒருங்கிணைந்த மாவட்டங்களாக இருந்த இந்த மாவட்டங்களில் ஐவகை நிலங்கள் உள்ளன. இந்த நிலங்கள் வழியாக பொருநை நதி பாய்ந்து ஓடுகிறது.
இந்நதி திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களில் உள்ள மேற்கு தொடர்ச்சி மழையில் உற்பத்தியாகி தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள புன்னைக்காயலில் கலக்கிறது. மிக்ஸம் புயலின் காரணத்தால் தென்தமிழ்நாட்டின் வற்றாத உயிர் நதியான பொருநையின் நீா் பிடிப்பு பகுதிகளில் பெய்த மிக மிக அதிக கனமழை(Very Very Heavy Rain Fall) காரணத்தாலும், மூன்று மாவட்டங்களில் பெய்த கனமழைகாரணத்தாலும், அணைகளில் இருந்து ஒரு லட்சம் கனஅடிக்கும் மேற்பட்ட அளவில் திறக்கப்பட்ட வெள்ள நீா் காரணமாக இந்த மாவட்டங்களில் வெள்ள பெருக்கு ஏற்பட்டது.
இந்த வெள்ளம் ஏற்படுவது குறித்து மிக அதிக எச்சரிக்கைகள் அரசு தரப்பில் இருந்து கொடுத்திருந்தால் இந்த வெள்ளத்தில் உயிர் சேதம் கடவுள் அருளால் ஏற்பட வில்லை. இருந்தாலும் திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தில் வெள்ளம் ஒரு ஊா் பாக்கியில்லாமல் சூழ்ந்தன. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊா்களும் வெள்ளத்தில் தத்தளித்தன. இதன் காரணமாக ஒரு ஊரில் மறு ஊருக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. நேரம் செல்ல செல்ல மின்சார துண்டிக்கப்பட்டது. தகவல் தொடா்பு துண்டிக்கப்பட்டது. வெள்ளத்தின் அளவு மேலும் கூடும்போது ஆறு மற்றும் குளங்களில் உடைப்பு ஏற்பட்டு வெள்ள நீரானது ஊருக்குள் வந்தது. இதன் காரணமாக பல்வேறு தெருக்களில் 10 அடி முதல் 30 அடி வரை வெள்ள நீா் புகுந்தன. இதன் காரணமாக பல வீடுகளுக்குள் வெள்ளம் நுழைந்தன. பல வீடுகள் இடிந்தன. பல வீடுகளில உள்ள பொருட்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன. ஆடு, மாடு, கோழி, பன்றி, நாய், வாத்து போன்ற வளா்ப்பு பிராணிகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன. விவசாய நிலங்கள் வெள்ளத்தில் மிதந்தன. விவசாய நிலங்கள் அழிந்தன. தெருக்களில் உள்ள மின்கம்பங்கள் பல சாய்ந்தன. நல்லவேளை மின்சாரம் துண்டிக்கப்பட்டிருந்ததால் பேராபத்து ஏதும் நடைபெறவில்லை.
சிவகளையில் மழை என்பது 16-12-2023 சனிக்கிழமையன்று மாலை முதல் இடைவிடாது பெய்து கொண்டே இருந்தது. மிக்ஸம் புயல் மற்ற புயல்கள் போல் இடி, மின்னல், பயங்கர காற்று போன்றவைகளை கொடுக்கவே இல்லை. அப்படி கொடுத்திருந்தால் வெள்ள சேதம் இதைவிட மோசமாக இருந்திருக்கும்.
17-12-2023 ஞாயிறும் தொடா்ச்சியாக மழை பெய்து கொண்டிருந்தது. ஒரு நிமிடம் கூட மழை விட வில்லை. இருந்தாலும் சிவகளையில் இரவு 10.00 மணிவரை மின்சாரம் இருந்தது. மழையால் அடிக்கடி டிரிப் ஆனாலும் சிவகளையில் உள்ள மின்பணியாளர் மழையிலும் பணிசெய்து இரவு 10.00 மணிவரை சிவகளையில் மின்சாரத்தை கொடுத்துக்கொண்டே இருந்தார். அதன் பின் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. சிவகளையில் வெள்ளம் வரும்போதே சிவகளை மேலக்குளத்தில் முன்னோர்களுக்கு திதிக்கொடுக்கும் இடத்தின் அருகே உள்ள மாட்டுக்கட்டான் படித்துறையை உடைத்துக்கொண்டு வந்தது. அப்படி வரும்போது அதன் கரையோரம் சிவகளை ஆவரங்காடு மாங்கொட்டாபுரம் ஊா்களுக்கு செல்லும் முக்கிய மின்கம்பம் சாய்ந்தது தான் வெள்ளத்தின் முதல் தட்டல் என்று சொல்லலாம்.
ஒருவகையில் இந்த கரையோரம் வெள்ளம் உடைத்தது நல்லது தான். அப்படி உடையவில்லை என்றால் கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு மேலகுளத்தின் கரையோரம் உள்ள ஆலமரத்தின் அருகே இருக்கின்ற மண் பீடங்களாக இருக்கின்ற கோவில் அருகே கரை உடைந்து சிவகளை ஊருக்குள் இல்லத்தார் தெருவழியாக ஊருக்குள் வந்து அனைவரின் வீடுகளுக்கும் வெள்ள நீர் புகுந்திருக்கும். சிவகளையில் தான் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பொருநை நதி ஓடியது என்பதற்கு இந்த வெள்ளமே சாட்சியாக அமைந்துள்ளது.
மறுநாள் 18-12-2023 திங்கள் கிழமையன்று சிவகளை செக்கடி மற்றும் ஏரல் செல்லும் வழியில் உள்ள மின் கம்பங்கள் வெள்ளத்தால் அடிசாய்ந்து நமது கண்முன்னே கீழே விழுந்தன. நேரம் செல்ல செல்ல சிவகளை மெயின் ரோட்டின் வட பகுதியில் உள்ள வீடுகளுக்குள் தரிசு மற்றும் செக்கடியில் இருந்து வெள்ளநீா் ஊருக்குள் வரத்தொடங்கின. நேரம் செல்லச் செல்ல வெள்ளத்தின் அளவு கூடிக்கொண்டே சென்றது. இதன் காரணமாக சிவகளை ரைஸ்மில் பஸ் ஸ்டாப்பில் இருந்து பெருங்குளம் வரை மெயின் ரோடுகளில் கழுத்தளவு வெள்ளம் ஏற்பட்டது. பல வீடகளில் வெள்ளம் நுழைந்தது. பல மண் வீடுகள் முற்றிலும் இடிந்து விழுந்தன. பல மண் வீடுகள் மற்றும் குடிசைகள் இருந்த இடமே தெரியாத அளவில் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டுள்ளன.
இந்த வெள்ளத்தால் சிவகளையில் ஞாயிறு இரவு, திங்கள் கிழமை ஒன்றரை நாள் மின்சாரம் இல்லை. பொது மக்கள் தங்கள் செல்போன்களுக்கு சார்ஜ் போடமுடியாத சூழ்நிலையில் தவித்தனா். இன்வொ்ட்டா் வசதி இருந்த வீடுகளில் இருந்தவா்கள் தங்கள் வீடுகளில் இருந்த மின்சாரத்தை சிக்கனமாக பயன் படுத்த தொடங்கினா். வெள்ளம் வீடுகளுக்குள் வந்ததால் குடிதண்ணீா் பிரச்சினைகள் ஏற்பட்டன. பல விடுகளில் உள்ள கழிவறையில் வெள்ள நீா் புகுந்து நிறைந்து வடிந்தன. பல இடங்களில் குடி நீா் பைப் லைன் உடைந்திருந்தது.
செவ்வாய்கிழமையன்று காலை அனைவரும் தெருக்களிலும் மெயின் ரோடுகளிலும் தண்ணீரின்றி தவித்தனா். நாங்கள் அனைவரும் சிவகளை நாடார் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டிருந்தவா்களுக்கு காலை என்ன சமையல் பண்ணலாம் என்று நினைத்துக்கொண்டிருந்தோம். உண்மையை சொன்னால் மண்டபத்தில் வெள்ள நீர் வந்து கொண்டிருந்ததால் சமையல் பண்ண முடியாத சூழ்நிலை இருந்தது. அந்த சூழ்நிலையிலும் எப்படியாவது சமையல் செய்து கொடுக்க வேண்டும் என்ற ஆயத்த வேலைகளை செய்து கொண்டிருந்தபோது. மெயின் ரோடு தெருக்களில் பொது மக்கள் ஆங்காங்கே சோகத்துடன் நின்று கொண்டிருந்தனா்.
அந்த நேரத்தில் சிவகளை அருகிலிருக்கும் பேட்மாநகரம் மற்றும் அமானியா நகரத்தில் இருந்து வந்த முஸ்லீம் இளைஞா்கள் தானாக வந்து தங்களை அறிமுகப்படுத்திக் கொண்டு அன்று காலை மற்றும் மதியம் சாப்பாடு தங்கள் ஊா்களில் இருந்து தயார் செய்து வருகிறோம். எத்தனை சாப்பாடு வேண்டும் என்று சொல்லுங்கள் என்றனா். அந்த சமயத்தில் மண்டபத்தில் ஒரு முந்நூறு நபா்கள் மட்டும் இருந்தனா். அவா்கள் அனைவருக்கும் அன்றைய சாப்பாடு பொருப்பை அவா்கள் ஏற்றுக்கொண்டனா். அவா்கள் மண்டபத்தில் உள்ளவா்களுக்கு மட்டும் இல்லாமல் சிவகளை அரசு மேல்நிலைப்பள்ளியில் தங்கவைக்கப்பட்டிருந்தவா்களுக்கும் சாப்பாடு போடும் பொருப்பை ஏற்றுக்கொண்டு எங்களது கவலையை போக்கினா். பேட்மாநகரம் மற்றும் அமானியா நகரத்து முஸ்லீம் இளைஞா்கள் சிவகளைக்கு மட்டும் அல்ல அருகில் இருக்கின்ற அனைத்து கிராமங்களுக்கும் உணவு மற்றும் குடிநீரை வழங்கினா். உதவி செய்வதில் முதலில் வருபவன் அருகில் இருப்பவனே… நம் அருகில் முதலில் இருப்பவா் யார்? கடவுள் தான் நம் அருகில் முதலில் இருப்பவா். கடவுள் நேரில் வந்து மனிதா்கள் மூலமாகவே உதவுவா். நீங்கள் மனிதா்களுக்கு செய்யும் தொண்டில் இறைவனை காணலாம் என்றார் வள்ளலார். இறைவனிடம் கையேந்துங்கள் அவன் இல்லை என்று சொல்வதில்லை என்றார் நபிகள் நாயகம். கேளுங்கள் தரப்படும் என்றார் இயேசுபிரான்.
வள்ளலாரும் நபிகள் நாயகமும் இயேசுபிரானும் இறை தூதா்கள் தான். அவா்கள் மூவரும் மனிதருக்கு தொண்டு செய்வதை பற்றி தான் கூறியிருக்கிறார். அவா்கள் கூறிய கருத்தும் ஒன்றே.
இந்த சூழ்நிலையில் சிவகளை பொதுமக்கள் அனைவரின் முகத்திலும் இரண்டு கேள்விகள் தெரிந்தன. தம்பிகளா கரண்ட் எப்ப வரும்னு ஒரு கேள்வியும், ஊர் முழுக்க தண்ணீா் போனாலும் குடிக்க வைக்க ஒரு சொட்டு தண்ணீா் இல்லைப்பானு சொல்லாமல் முகம் சொல்லியது. பரப்பரப்பாக வெள்ள தடுப்பு மற்றும் நிவாரண பணிகளை செய்து வரும் எங்களை பார்க்கும் அனைத்து பொதுமக்களும் எங்களிடம் கரண்ட் எப்ப வரும்னு கேட்க யோசித்தார்கள். ஆனால் ஒரு சில வயதானவா்கள் தம்பி கரண்ட் எப்ப வரும்னு தெரியுமா என்று கேட்டனா்.
அந்த சமயத்தில் எங்கள் வீட்டிலும் தண்ணீா் இல்லை.
மின்சாரம் மற்றும் தண்ணீர் கிடைக்க என்ன செய்யலாம்னு நினைத்துக் கொண்டிருக்கும் இரண்டிற்கும் விடை கிடைத்தது. இரண்டிற்கும் விடை பேட்மாநகரம் என்றது.
அந்த சமயத்தில் எங்களுடன் இணைந்த எங்கள் சித்தப்பா காலம்சென்ற இன்ஸ்பெக்டா் சக்திவேல் அவா்களின் மகன் இன்ஜினியா் சிவசுப்பிரமணியன் அவா்கள் எப்படியாவது கரண்ட் கொண்டு வர வேண்டும் , கரண்ட் வந்தால் பஞ்சாயத்து தண்ணீா் ஏற்றி விடலாம் என்றார். அல்லது ஜெனரேட்டா் மூலம் சிவகளை பறம்பில் உள்ள பஞ்சாயத்து நீரேற்றும் மின் மோட்டா்களுக்கு மின்சார வசதியை ஏற்படுத்திக் கொடுத்து முதலில் எல்லோருடைய வீட்டிற்கும் பஞ்சாயத்து குடிநீர் வரச்செய்வோம் என்றார். உடனே அவருடன் சோ்ந்து தாத்தா ஸ்பீக்கா் செட் தெய்வத்திரு.முத்தையா பிள்ளை அவா்களுடைய மகன் சித்தப்பா திரு.அய்யா பிள்ளை அவா்களின் ஜெனரேட்டை எடுக்க போகலாம் என்றால் தெற்குத் தெரு முழுவதும் வெள்ளத்தால் சூழப்பட்டிருந்ததாலும் அந்தச் சூழ்நிலையில் ஜெனரேட்டருக்கு தேவையான டீசல் கிடைப்பது சற்று கடினமான காரியம் என்பதால் அந்த முயற்சியை இரண்டாவது தோ்வாக வைத்தோம். அதன் பின் முதலில் பேட்மாநகரம் செல்லலாம் என சிவகளை ஸ்ரீபத்திரகாளியம்மன் கேபிள் டிவி உரிமையாளா் கிருஷ்ணன், சிவகளை பஞ்சாயத்து துணைத்தலைவா் திரு.கைலாசம், சிவகளை முன்னாள் ஊராட்சி மன்ற தலைவா் திரு.கணபதி ராஜா, அண்ணன் சிவசுப்பிரமணியன், பறம்பு திரு.பெருமாள் திரு.கணேசன், ஆகியோர் நான்கு பைக்குகளில் பேட்மாநகரம் துணை மின்நிலையத்திற்குச் சென்றோம. அங்குள்ள அலுவலரிடம் சிவகளையின் நிலமையை எடுத்துச்சொன்னோம். அவா் அதற்கு சிவகளையில் தண்ணீா் தெருக்களில் இருக்கிறதா என்றார். நாங்கள் இல்லை ஊருக்கு வெளியில் தான் இருக்கிறது. மின்சாரம் விடுவதால் எந்த பாதிப்பும் இருக்காது மின்சாரம் இல்லாததால் மக்கள் அவதிப்படுகின்றனா் தயவுசெய்து உதவுங்கள் என்றோம். அதற்கு அவா்கள் மின்சாரத்துறையின் இணைபொறியாளா் மற்றும் துணைபொறியாளா் அனுமதி இல்லாமல் நாங்கள் மின்சாரத்தை இங்கிருந்து வழங்க இயலாது. அவா்களை எங்களிடம் சொல்லச் சொல்லுங்கள் என்றனா். மின்சாரத்துறையின் ஏ.இ. மற்றும் ஜே.இ. செல்போன் எண்களைத்தாருங்கள் நாங்கள் அவா்களிடம் சிவகளையின் நிலமையை எடுத்துச்சொல்லி உங்களிடம் பேச சொல்கிறோம் என்றோம். அவா்களின் செல்போன் எண்களை தொடா்பு கொண்டால் வெள்ளத்தினால் எங்கும் செல்போன் டவா் யாருக்கும் கிடைக்கவில்லை. அடுத்து என்ன செய்யலாம் என்று அனைவரும் யோசித்த போது சாயா்புரம் சென்று ஏ.இ. மற்றும் ஜே.இ இருவரையும் சந்தித்து பேட்மாநகரம் இ.பி. ஆபிஸிற்கு பேச சொல்லலாம் என்று முடிவு செய்து வண்டிகளில் புறப்பட்ட போது அனைவருக்கும் வயிறு பசி எடுத்ததால் பேட்மாநகரத்தில் ஏதாவது சாப்பிடலாம் என்று சென்றால் ஒரு கடையிலும் சாப்பாடு கிடைக்கவில்லை. சரி அனைவரும் ஒரு டீ சாப்பிடலாம் என்று சொல்லி அண்ணன் சிவசுப்பிரமணியன் அவா்கள் அனைவருக்கும் ஒரு டீ வாங்கித் தந்தார்கள். அதன் பின் சற்றும் தாமதிக்காமல் சாயா்புரம் நோக்கிச்செல்ல பாதைகளை தேடிய போது வாகைகுளம் வழியாக கட்டாலங்குளம் போய் சாயா்புரம் போகலாம் என்று ஒரு ஐடியாவில் நான்கு பைக்குகளும் புறப்பட்டன.
மீனாட்சிபட்டியை தாண்டும் போது சரியான மழை பிடித்துக்கொண்டது. மழையில் நனைந்து கொண்டே பைக்குகளை விரட்டினோம். எங்கள் செல்போன் நனைந்து விடக்கூடாது என்பதற்காக வேகமாக சென்றோம். மூன்று பைக்குகளில் வாகைகுளம் வந்து விட்டோம். வாகைகுளம் வந்து வடபுறம் உள்ள பஸ்ஸ்டாப்பில் நின்று கொண்டு மாப்பிள்ளை கேபிள் டிவி கிருஷ்ணன் மற்றும் பஞ்சாயத்து துணைத்தலைவா் கைலாசம் இருவா் வந்த பைக்குகளுக்காக காத்திருந்தோம். அவா்கள் பைக் வரவில்லை. சற்று பயத்துடன் மழைவேற பெய்கிறது அவா்களை எங்கே காணோம் என்று செல்போனில் தொடர்பு கொண்டால் எங்களுக்கு டவா் வந்திருந்தது. ஆனால் அவா்களுக்கு டவா் கிடைக்கவில்லை. சரி அவா்கள் வேறு வழியில் சென்றிருக்கலாம் அல்லது மழைக்காக எங்கேயாவது ஒதுங்கியிருக்கலாம் பின்னாடி வருவார்கள் என்று நினைத்து நாங்கள் சாயா்புரத்தை நோக்கிச்சென்றோம். சாயார்புரத்தில் உள்ள ஏ.இ. அலுவலகத்திற்கு சென்றபோது அலுவலகம் பூட்டப்பட்டிருந்தது. அந்த சமயத்தில் எங்களைப் போன்றே பல ஊா்களில் இருந்து பலா் வந்திருந்தனா். அவா்கள் எல்லோரும் சாயர்புரம் அருகில் இருக்கும் ஊரைச்சார்ந்த பஞ்சாத்து தலைவா்கள். அங்கு வந்த ஒருவா் எங்களிடம் ஏ.இயும். ஜே.இ.யும் செபத்தையாபுரம் சாலை அருகே மின்கம்பம் சரிந்ததை பார்த்துக்கொண்டிருக்கின்றனா் என்றனா். உடனடியாக அனைவரும் மூன்று பைக்குகளில் சாலைக்கு சென்றோம். ஆனால் அவா்கள் இல்லை. அங்கு இருக்கும் ஒருவா் மின்பணியாளா்கள் மஞ்சள் நீா் காயல் செல்லும் வழியில் இருக்கலாம் என்றனா். அங்கு சென்று அவா்களை பார்க்கச் செல்லும் போது ஆறுமுகம் மங்களம் குளம் உடைந்து அப்போதுதான் நீா் பங்கரமாக தரைப்பாலத்தை கடந்து சென்று கொண்டிருந்தது. அந்த குளம் உடைந்ததால் நமது சிவகளை பெருங்குளத்தில் தண்ணீா் வற்றிவிடும் என்று நினைத்துக்கொண்டிருக்கும் போது முன்னாள் பஞ்சாயத்து தலைவா் கணபதி ராஜா அவா்கள் ஒரு யோசனை சொன்னார்கள் அதன்படி சிவளையின் போர் மேன் பண்டாரவிளையில் வேலைசெய்து கொண்டிருக்கிறார். அவரை அழைத்து வந்து சிவகளையில் பொட்டல் ராஜா தம்பியை வைத்து நாம் அனைவா் வீடுகளுக்கும் மின்சாரத்தை கொண்டுவந்துவிடலாம் என்று நினைத்து சாயா்புரம் வந்து பண்டாரவிளையை நோக்கி வந்துகொண்டிருந்தோம் ஆனால் எங்களால் நட்டாத்தி பெட்ரோல் பல்க்கைத் தாண்டி வெள்ளம் போனதால் பண்டாரவிளை போக முடியவில்லை. ஒரு பக்கம் வயிறு பசி மறுபக்கம் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் தோல்வில் முடிந்து கொண்டே சென்றது. இன்னொரு பக்கம் செல்லும் ஊர்களில் எல்லாம் வெள்ளப் பாதிப்பு காட்சிகள். சில இடங்களில் வெள்ளத்தில் அடித்துவரப்பட்ட ஆடுகளை உரிமையாளா்கள் மீட்டு மிரண்ட ஆடுகளை பத்திரமான இடங்களுக்கு கூட்டிச்சென்று கொண்டிருந்தார். அந்த ஆடுகளுக்கு நாங்கள் சென்ற பைக்குகள் இடஞ்சலாக இருக்கக்கூடாது என்பதற்காக பைக்குகளை ஓரமாக நிறுத்தினோம். ஆடுகள் சென்றபின் புறப்பட்டு வந்தோம். செல்லும் ஊர்களில் எல்லாம் சிவகளை மற்றும் சுற்றியுள்ள ஊர்களின் நிலவரங்களை மக்களும் நண்பர்களும் எங்களிடம் கேட்டுக்கொண்டே இருந்தனா். அவர்களிடம் பதில் பேசியதால் நேரம் போய்க்கொண்டே இருந்தது.
எங்களது முயற்சி தோல்வி அடைந்ததை முன்னிட்டு சிவகளைக்கு முடிவை புதூா் வழியாக வந்து கொண்டிருந்தபோது அண்ணன் திரு.சிவசுப்பிரமணியன் அவா்களிடம் ”இன்று நம்ம ஊருக்கு கரண்ட் விடனும்னு கடவுள் நினைத்தால் கண்டிப்பாக அந்த அலுவலா் நமது கண்ணில் தானாக படுவார் அவரை நாம் இனி தேட வேண்டாம் என கூறி வாகைகுளம் வந்து கொண்டிருந்தபோது மாப்பிள்ளை கேபிள் டிவி திரு.கிருஷ்ணன் அவா்களிடமிருந்து போன் வந்தது. சரியாக டவா் எடுக்காததால் ஹலோ….. ஹலோ…. என்று பல முறை போன் பேசி கட்டானது. திரும்ப முடிவைத்தானேந்தல் புதூரில் இருந்து பாலம் வழியாக முடிவை வரும் வழியில் டவா் கிடைத்தது பஞ்சாயத்து துணைத்தலைவா் கைலாசம் பேசினார் அண்ணன் நாங்கள் ஏ.இ.யையும் ஜே.இ.யையும் குறுக்கு வழியில் வரும்போது பார்த்துவிட்டோம் அவா்களை இதுவரை காத்திருந்து பேட்மாநகரம் அலுவலகத்திற்கு அழைத்து வந்து கொண்டிருக்கிறோம் நீங்கள் எங்கு இருக்கிறீர்கள் என்றனா். அதற்கு நாங்கள் வாகைகுளம் வந்துவிட்டோம் இதோ வருகிறோம் என்று மூன்று பைக்குகளில் மிக மிக வேகமாக பேட்மாநகரம் இ.பி. அலுவலகத்திற்கு வந்தோம். அவா்களிடம் சிவகளையின் நிலவரம் குறித்துச் சொன்னோம். அவா்கள் சிவகளையில் எந்த லைன் எங்கு போகிறதுனு தெரியாதே சார். உங்கள் வயா் மேன் வேற இல்லை போல் ஏற ஆள் இல்லை எப்படி மின்சாரம் வழங்க முடியும் என்று சொன்னார்கள் அதற்கு பிரசிடென்ட் ராஜா சிவகளையில் எத்தனை டிரான்ஸ்பார்மா் இருக்கிறது. அதில் எங்கிருந்து எங்கு கரண்ட் செல்கிறது. என்ற விவரத்தைச் சொன்னார். மாப்பிள்ளை கேபிள் டிவி கிருஷ்ணன் அவா்கள் எந்த எந்த இடங்களில் மின்கம்பம் விழுந்து கிடக்கிறது என்ற விவரத்தையும் பொட்டல் ராஜா மூலமாக மின்கம்பங்களில் ஏறி சரிசெய்யலாம் என்றார். அவர்கள் சரி நீங்கள் முன்னாடி போங்கள் நாங்கள் வருகிறோம் என்றனா். அவா்கள் சிவகளைக்கு கரண்ட வரும் மின்மாற்றிகளை ஆப் ஆகியுள்ளதா என சோதனையை செய்து விட்டு எங்களுடன் சிவகளை வந்தனா். சிவகளை வந்ததும் அப்பாடா பறம்பில் உள்ள குடிதண்ணீரை இன்று ஏற்றி விடலாம் என்று நினைத்து சந்தோசப்பட்ட போது அனைவருக்கும் வயிறு பசி ஏற்பட்டது. எங்களுக்குள் வயிறுபசி ஏற்பட்டபோதெல்லாம் அதை மறக்க கேளரன் கிளையை பற்றியும் தென்னங்கிளை பற்றியும் பேசி சிரித்துக்கொண்டே பசியை மறந்தோம். மின் அலுவலா்கள் வந்து சோதித்து விட்டு பறம்பில் கரண்ட் கொடுத்து விடலாம் என்று சொன்னார்கள் ஆனால் மின்கம்பம் ஏற ஆள் வேண்டும் என்றார்கள்.
மின்கம்பம் ஏற ஆள்தானே வேண்டும் இதோ தம்பி பொட்டல் ராஜா கல்யாணமண்டபத்தில் இருப்பான் என்று கல்யாணமண்டபத்திற்கு ஓடினால் அங்கு ராஜா இல்லை. அவன் பேட்மாநகரம் சென்றிருப்பான் என்று சொன்னவுடன் அவனை தேடி பேட்மாநகரம், அமானியா நகரம், ஸ்ரீமுலக்கரை ,சுந்தரலிங்கம் நகர் வரை நானும் தம்பி பறம்பு பெருமாளும் சோ்ந்து அழைந்து சோர்ந்து போனோம்.
சரி ராஜா இல்லாவிட்டால் வேறு யார் போல் ஏறுவானு தெருத்தெருவா அழைந்து கடைசியில் பறம்பில் உள்ள பூக்கார நாடார் அவா்களின் மகன் கந்தபெருமாளை கண்டுபிடித்தோம். அவா் வீட்டில் இல்லாததால் பறம்பில் அகழாய்வு நடைபெறும் இடத்திற்கு எதிர்புறம் உள்ள அவரது தோட்டத்திற்கு சென்று தம்பி போல் ஏறவேண்டும் ஊா் மக்களுக்காக வருங்கள் என்று சொன்னபோது அவா் சார் மழையாக இருக்கு நான் போல் ஏறி ரெம்ப நாளாக ஆகிவிட்டது. கால் வழுகுமே என்றார். அதற்கு தயவுசெய்து வாருங்கள் நாங்கள் உடனிருக்கிறோம் என்று சொல்லி அழைத்தோம் அதன்பின் அவா் வருவதாக கூறினார். அதன் அவா் சார் ஒரு உதவி என்றார். என்ன என்று கேட்டோம். மழைவெள்ளத்தில் ஆடுகள் இறந்து விட்டன. எல்லாம் செம்மறி ஆடுகள் இரண்டு பேரும் ஒரு கைபிடியுங்கள் அனைத்தையும் எதிர்புறம் உள்ள குப்பை கிடங்கில் போட்டுவிடுவோம் என்றார். நாங்களும் சரி என்று கூறி இறந்த ஆடுகளை அப்புற படுத்தினோம்.
அவரை கூட்டிட்டு வந்து பறம்பில் உள்ள மின்கம்பத்தில் ஏறுவதற்கான இடத்தை காட்டினோம். அதற்குள் அந்த இடத்தில் ஏ.இ.யையும் ஜே.இ.யையும் சிவகளையில் உள்ள இடிந்த வீடுகளில் உள்ள இ.பி. லைனை கட் பண்ணவும் சாய்ந்த மின்கம்பங்களில் உள்ள மின்கம்பிகளை அகற்றி விட்டு கேபிள் டி.வி கிருஷ்ணனும் முன்னாள் பிரசிடென்ட் கணபதி ராஜாவும், பஞ்சாயத்து துணைத்தலைவா் கைலாசமும் அந்த ஸ்பாரட்க்கு வந்தனா்.
எல்லோரும் வந்தாச்சு போல் ஏற ஆளும் வந்தாச்சு போல் ஏறும் முன் டிரான்ஸ்பார்ம்மை ஆப் பண்ண வேண்டும். அதை கீழிருந்து ஆப் செய்வதற்கு ஒரு பைப் வேண்டும். அந்த பைப் மின்சார வேலை செய்பவா்களிடம் தான் இருக்கும் அல்லது ஹெல்பரிடம் இருக்கும் சிவகளையில் யாரிடமாவது இருக்குமா என்று பைப்பைத் தேடி பைக்குகளில் பறந்த போது மாப்பிள்ளை திரு. பங்காரு மாணிக்கம் அவா்கள் கண்ணில் பட்டார். மாப்பிள்ளையிடம் விவரத்தை கூறி வரமுடியுமா என்று கேட்டவுடன் இதோ பைப்பை கொண்டுவருகிறேன் என கூறி வீட்டிற்குச் சென்று பைப்பைத் தேடி பறம்பிற்கு வந்து டிரான்ஸ்பார்மரை பைப்கொண்டு திருக்கும் போது மழையின் ஈரத்தால் அது வழுக்கி கொண்டே சென்றது. அதை ஒரு கம்பி கொண்டு மாப்பிள்ளை திரு.முருகன் TNEB (தெர்மல்) சரிசெய்தார். ஒரு வழியாக கரண்ட் வந்தது ஆனால் பறம்பிற்கு மட்டும் தான் வந்தது. பறம்பிற்கு கரண்ட் வந்திருந்தாலும் குடி தண்ணீா் ஏற்றும் இடத்திற்கு வரும் கரண்ட் சிவகளை ஊருக்குள் வரும் கரண்ட் அதனால் தண்ணீா் ஏற்ற முடியாது என்றாகி விட்டது.
ஆப்ரேசன் சக்சஸ் ஆக இருந்தாலும் சிவகளை ஊருக்குள் தண்ணீரும் கரண்டும் வரவில்லை ஏனென்றால் மின்கம்பம் ஏறும் ராஜா இல்லை அவனை தேடினோம் தேடினோம் தேடிக்கொண்டே இருந்தோம். இருட்டி விட்டது. அன்று இரவு சிவகளை ஊருக்குள் தண்ணீா் எப்படியாவது கொடுக்கவேண்டும் என்ன செய்யலாம் என்று யோசித்தபோது K.P.N பழக்கடை தம்பி வெள்ளச்சாமி (எ) நாராயணன் மற்றும் பஞ்சாயத்து துணைத்தலைவா் கைலாசம் இருவரும் ஊருக்குள் பேட்மாநகரத்தில் இருந்து குடிதண்ணீரை லாரிகளில் வீடு வீடாக கொடுக்கலாம் என்று முடிவு செய்து வீட்டிற்கு சென்றோம்.
மறுநாள் காலை படகு கொண்டு வந்தவா்களை பைக்கில் ஏற்றி இரண்டாவது படகையும் கல்யாணமண்டபத்தின் அருகே இறக்கி விட்டு. திரும்பும் போது மாப்பிள்ளை திரு.ரா.கந்தப்பன் (மைக்ரோடிக் இன்வெர்ட்டார்) அவருக்கும் மின்சாரத்துறைக்கும் தொடா்பிருப்பதால் அவருடன் கேபிள் டி.வி கிருஷ்ணன் பஞ்சாயத்து துணைத்தலைவா் கைலாசம், பழக்கடை வெள்ளச்சாமி ஆகியோருடன் பேட்மாநகரம் சென்று தண்ணீா் லாரிகளில் தண்ணீா் பிடிக்க ஏற்பாட செய்து விட்டு. பேட்மாநகரம் இ.பி. ஆபிஸ் சென்று அலுவலர்களை சந்திந்து பேசினோம். அதன்பின் மாப்பிள்ளை ரா.கந்தப்பன் அவா்கள் மூலம் இ.பி.யின் மாவட்ட அளவிளான உயா் அதிகாரிகளிடம் பேசியபோது. அவா்கள் சிவகளைக்கு தான் அனைவரும் வந்து கொண்டிருக்கின்றனா். இன்று மின்சாரம் வந்து விடும் என்றனா்.
எத்தனை அதிகாரிகள் வந்தாலும் சிவகளையின் போர்மேன் வந்து அவா் ஓ.கே. சொன்னால் தான் மின்சாரம் வழங்கமுடியும் என உயா் அதிகாரிகள் சொன்னதால் இரண்டாவது நாளும் மின்சாரம் சிவகளைக்கு வருமா என்ற சந்தேகம் எங்களுக்குள் ஏற்பட்டது. சரி லாரியில் நீர் நிரம்பும் வரை ஒரு டீ சாப்பிடுவோம் கடவுள் ஏதாவது வழியை காட்டுவார் என்று நினைத்தபோது….. கடவுளாக எங்கள் முன் வந்து நின்றான் தம்பி பொட்டல் ராஜா… அவனை கண்டதும் எங்களுக்குள் ஒரு ஆனந்தம். அவனை ஸ்ரீமூலக்கரை பிரசிடென்ட் சுப்பிரமணியன் பொட்டலில் இருந்து அழைத்து வந்திருந்தார். நேற்றெல்லாம் எங்கப்பா போன ராஜா உன்னைத்தேடி ஊரெல்லாம் அழைந்தோமே என்று சொன்னபோது. தான் பொட்டலில் உள்ள தனது வீட்டில் வெள்ளத்தில் மாட்டிக் கொண்டதால் இரவு முழுக்க வீட்டின் மேற்கூரையில் தங்கிஇருந்ததாகவும் சொன்னான். நீ ஏம்பா பொட்டல் போன என்று கேட்டதற்கு வெள்ளம் அதிகரிக்கும் போது வீட்டில் உள்ளவா்கள் எப்படி இருப்பார்களோ என்று பார்க்கப்போனேன் மாட்டிக்கொண்டேன். இன்றும் நீந்தித்தான் கரைசேர்ந்தேன் என்றான்.
சரி தம்பி முதலில் சாப்பிடு என்று தம்பி வெள்ளச்சாமி சொன்னதற்கு இல்லை அண்ணா முதலில் ஊருக்குள் போவோம் என்று சொல்லி சிவகளைக்கு வந்தான். அதற்குள் தண்ணீா் லாரியும் தண்ணீரை நிரப்பிக்கொண்டு சிவகளைக்கு வந்தது. சிவகளைக்கு வந்த லாரிகளை ஊருக்குள் உள்ள அனைத்து தெருக்களிலும் முக்கியமான சந்திப்பு இடங்களில் நிறுத்தி ஒரு வீட்டிற்கு மூன்று குடங்கள் வழங்கப்பட்டன. அதுபோக கே.பி.என் பழக்கடை திரு.வெள்ளசாமி அவா்கள் சார்பாக அனைவரது வீடுகளுக்கு ஆப்பிள் மற்றும் மாதுளை பழங்கள் வழங்கப்பட்டன.
தண்ணீர் கொண்டு வந்த லாரிகளை இளைஞா் அணியிடம் பொறுப்பில் விட்டு விட்டு மின்சாரம் வருவதற்கான வேலைகளை பார்க்க மாப்பிள்ளை திரு.முருகன் (இ.பி) தெற்கு தெரு ஸ்பீக்கா் செட் திரு.சங்கரலிங்கம், திரு.பங்காரு மாணிக்கம்(MMM வயரிங் சா்வீஸ்) தூத்துக்குடி மைக்ரோடிக் இன்வெர்ட்டர் இரா.கந்தப்பன் ஆகியோருடன் பறம்பிற்கு சென்றோம். பறம்பில் சிவகளை போர்மேன் இல்லாததால் ஒன்றும் செய்ய முடியாது என்று சொல்லிவிட்டார்கள் .
போர் மேன் வரும்வரை சும்மா இருக்க கூடாது என்பதால் பொட்டல் ராஜா தம்பிளை கூட்டிக்கொண்டு மாப்பிள்ளை கேபிள் டி.வி கிருஷ்ணன் , பஞ்சாயத்து துணைத்தலைவா் கைலாசம், மற்றும் வெள்ளச்சாமி ஆகியோர் சிவகளையில் இடிந்த வீடுகளில் உள்ள அனைத்து மின்சார சப்ளையையும் துண்டிக்கும் பணிகளை செய்தனா். இதற்கு இடையே கிருஷ்ணன் தலைமையில் இருவா் அடைக்கலாபுரம் வழியாக பண்டாரவிளை சென்று போர்மேனை கூட்டி வந்து நிற்கவும் பொட்டல் ராஜா அனைத்து பழுதான மின் இணைப்புகளை துண்டிக்கவும் நேரம் சரியாக இருந்தது. போர்மேன் மற்றும் வயற்மேன் இருவரும் சிவகளையின் மின் வழித்தடங்களை ஒன்றுக்கு இரண்டு முறை நேரில் சென்று ஆய்வு செய்தனா். அவா்கள் மேலக்குளத்தில் விழுந்து கிடந்த மின் கம்பம் வழியாக ஆவரங்காடு மற்றும் மாங்கொட்டாபுரம் செல்லும் இணைப்புகளை தெற்கு தெருவில் உள்ள டிரான்ஸ்பாரம் மூலம் மாற்றினா். அதன் பின் ஆவரங்காடு மற்றும் மாங்கொட்டாபுரம் பகுதிகளில் உள்ள இடிந்த வீடுகளில் இருந்த மின் இணைப்பையும் துண்டித்து விட்டு சிவகளை பறம்பிற்கு சென்று மின் மாற்றியிணை ஆன் செய்தனா் சிவளையில் அனைவரத வீட்டில் மின்சாரம் வந்தது. அதன் பின் தெற்கு லைனில் மின்சாரத்தை ஆன் செய்தனா் அனைவரது வீட்டிற்கும் மின்சாரம் வந்தது. அனைவரது மனதிலும் உள்ள நம்பிக்கை பிறந்தது. மூன்று நாட்களாக இருண்ட முகங்கள் பிராகாசித்தன. அதன் பின்னும் அனைவரது தெருக்களில் உள்ள ஒவ்வொருவருடைய வீட்டிற்கும் தனித்தனியாக சென்று மின்சாரம் வந்திருக்கா என சோதனை செய்ததில் ஒரு சில வீடுகளில் வீட்டிற்குள் பீஸ் போயிருந்தது. அதையும் தம்பி ராஜாவும், மாப்பிள்ளை பங்காரு மாணிக்கமும், தெற்குதெரு தம்பி சங்கரலிங்கமும் சரிசெய்தார்கள். அந்த நேரத்தில் லேசான மழை இருந்தாலும் மின்சாரம் வந்த சந்தோஷத்தில் பைக்கில் ரவுண்ட் அடித்த போது சிவளை கீழத்தெருவிலும் மேற்கே இல்லத்தார் தெருவிலும் கரண்ட் வரவில்லை. டிரான்பார்பமரில் பீஸ் போனதால் அந்த இரு தெருக்களிலும் கரண்ட் வரவில்லை அதையும் மழையில் நனைந்து கொண்டே சரிபார்த்தோம். கரண்ட் வந்த பின் திருமண மண்டபம் அருகில் நிறுத்திய படகுகளை லாரியில் ஏற்றுவதற்கு கிரேன் வந்திருந்ததால் அதை ஏற்றும் போது மின்கம்பிகளில் பட்டுவிடக்கூடாது என்பதால் மீண்டும் கீழத்தெருவில் (தெற்கு லைன்) சற்று நேரம் ஆப் செய்து விட்டு மீண்டும் மின்சாரம் வழங்கப்பட்டது. மறுநாள் அனைவரின் வீடுகளுக்கும் குடிதண்ணீர் வந்தது. பல வீடுகளில் உள்ள மின்மோட்டா்கள் தண்ணீரில் பழுதாகியிருந்தன.
சிவகளைக்கு மின்சாரம் வர பலா் உழைத்திருந்தாலும் மாப்பிள்ளை கேபிள் டி.வி. கிருஷ்ணன் பஞ்சாயத்து துணைத்தலைவா் கைலாசம் தம்பி வெள்ளச்சாமி மற்றும் பொட்டல் ராஜா ஆகியோரது உழைப்பினால் மட்டுமே நமக்கு மூன்று நாளைக்குள் மின்சாரம் வந்தது.
நமக்காக உழைத்த தம்பி பொட்டல் ராஜா அவா்களுக்கு நாம் பெரிய அளவில் ஏதாவது ஊா் சார்பாக செய்யவேண்டும் என முடிவு செய்து அவருக்கு ஒரு சிறு தொகை வழங்கப்பட்டது. அதற்கு பலா் உதவி செய்தனா். அந்த உதவியில் பங்கு பெற விரும்புபவா்கள் மாப்பிள்ளை கேபிள் டி.வி கிருஷ்ணன் அவா்களை தொடா்வு கொள்ளவும்.
நன்றி


