விளாத்திகுளம் அருகேயுள்ள குளத்தூர் பகுதியை, சேர்ந்த சுதந்திர போராட்ட வீரர் பெரியசாமி (101). இந்திய சுதந்திர போராட்டத்தின் போது, ஆங்கிலேயர்களை எதிர்த்து பல முறை போராட்டங்களை நடத்தி சிறைக்கு சென்றவர்.சுதந்திரத்திற்கு பின்னர் காங்கிரஸ் கட்சியில் தன்னை இணைத்து பணியாற்றினார். மேலும் மறைந்த முன்னாள் முதல்வர் காமராஜரின் நெருங்கிய நண்பரும் ஆவார். தினந்தோறும் நாளிதழ்களை வாங்கி மக்களுக்கு நாளிதளில் உள்ள செய்திகள் மற்றும் தலைப்பு செய்திகள் குறித்து எடுத்துரைத்த காரணத்தினால் சுதந்திர போராட்ட வீரர் பெரியசாமியை அப்பகுதி மக்கள் தலைப்பு செய்தி பெரியசாமி என்று புனைப்பெயருடன் அன்புடன் அழைத்து வந்தது குறிப்பிடத்தக்கது.இவருடைய சொந்த ஊர் திருச்செந்தூர் அருகேயுள்ள ஆறுமுகநேரி என்றாலும், வயது முதிர்வு காரணமாக குளத்தூரில் உள்ள தனது மகள் செந்தூர்கனியின் வீட்டில் வசித்து வந்தார். தமிழக அரசு சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு வழங்கிய ஓய்வுதிய தொகையையும் இவர் வாங்க மறுத்துவிட்டு நேற்று உடல்நலகுறைவு காரணமாக காலமானார். இதுகுறித்த தகவல் கிடைத்ததும் குளத்தூர் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் உள்ள மக்கள் சுதந்திர போராட்ட வீரர் பெரியசாமி உடலுக்கு அஞ்சலி செலுத்திய பின்னர் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.


