திருநெல்வேலியில் இருந்து தூத்துக்குடி வரை 47 கி.மீ தூரத்திற்கு நான்கு வழிச்சாலை பணிகள் நிறைவடைந்து 20.11.2012 அன்று போக்குவரத்து துவங்கியது. இந்த சாலையை பொறுத்தவரை, தினந்தோறும் ஆயிரக்கணக்கான கனரக வாகனங்கள் துறைமுகத்திற்கும், துறைமுகத்தில் இருந்து வெளிமாநிலங்களுக்கு செல்லும். அதே போல் தூத்துக்குடி விமான நிலையங்களுக்கு செல்லும் வாகனங்கள் என ஏராளமான வாகனங்கள் இந்த வழியாக செல்லும். மேலும் தூத்துக்குடியில் ஏராளமான தொழிற்சாலைகள் உள்ளது. அங்கு செல்லும் வாகனங்களும் இந்த வழியாகத்தான் சென்று வரும்.
இந்த நான்கு வழிச்சாலை பணிகளில் வல்லநாடு அருகே தாமிரபரணி ஆற்றில் பிரம்மாண்டமான பாலம் அமைக்கப்பட்டது. ஓராண்டுகள் கூட நிறைவடைவதற்கு முன்பு பாலத்தில் விரிசல் ஏற்பட்ட ஆரம்பித்தது. இதனால் பாலத்தில் இரண்டு பகுதிகளிலும் மாறி மாறி ஓட்டை ஏற்பட்டது. இப்படி தொடர்ந்து பாலத்தில் 8 முறை ஓட்டை விழுந்துள்ளது.
இதையடுத்து கடந்த 3 மாதங்களுக்கு முன்பு பாலத்தை சீரமைக்க சுமார் 14 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடந்து வந்தது. முதற்கட்டமாக பாலத்தின் மேல் முழுமையாக சீரமைக்கப்பட்டு போக்குவரத்து தொடங்கப்பட்டது.
பாலத்தில் போக்குவரத்து தொடங்கப்பட்ட 6 மாத காலம் கூட ஆகாத நிலையில் தூத்துக்குடியில் இருந்து திருநெல்வேலி செல்லும் சாலையில் தாமிரபரணி ஆற்றுப்பாலத்தின் நடுவே கனரக வாகனங்கள் சென்றபோது சேதம் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து தகவல் அறிந்தவுடன் நெடுஞ்சாலைத்துறை பணியாளர்கள் சேதமடைந்த இடத்தை தடுப்பு வேலிகள் வைத்து அடைத்து வைத்துள்ளனர்.
ஏற்கனவே பலமுறை இந்த பாலம் சேதமடைந்த நிலையில் தற்போது மீண்டும் பாலம் சேதமடைந்துள்ள சம்பவம் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.