தூத்துக்குடியில் அகில இந்திய அளவிலான கல்லூரிகளுக்கு இடையேயான கூடைப்பந்து போட்டி நேற்று தொடங்கியது. மகளிருக்கான முதலாவது ஆட்டத்தில் கேரளா அணி வெற்றிபெற்றது.
தூத்துக்குடி மாவட்ட கூடைப்பந்து கழகம், வ.உ.சி. துறைமுக ஆணையம், தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி ஆகியவை இணைந்து தூத்துக்குடியில் 15-வது அகில இந்திய அளவிலான கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான கூடைப்பந்து போட்டியை நடத்துகிறது. இந்த போட்டியில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 6 ஆண்கள் அணியும், 6 பெண்கள் அணியும் பங்கேற்று உள்ளன.
இந்த போட்டி தொடக்க நிகழ்ச்சி நேற்று மாலை தூத்துக்குடி ஜிம்கானா கிளப் மைதானத்தில் நடந்தது. நிகழ்ச்சிக்கு மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி தலைமை தாங்கி போட்டிகளை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாவட்ட கூடை பந்தாட்ட கழக தலைவர் பிரம்மானந்தம், செயலாளர் சாகுல் சிராஜூதீன், பொருளாளர் ராஜ்குமார், தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி மண்டல துணைத்தலைவர் ஆர்.கவுதமன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து பெண்கள் பிரிவு போட்டிகள் தொட ங்கின. முதல் போட்டியில் பெங்களூரு ஜெயின் பல்கலைக்கழக அணியும், கேரளா திருஇருதய கல்லூரி அணியும் விளையாடின. இரு அணியினரும் தொடக்கம் முதல் ஆக்ரோஷமாக விளையாடினர். இதில் கேரளா அணி 49-36 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் ஜெயின் பல்கலைக்கழக அணி வீராங்கனை சுஸ்மிதா, கேரளா அணி வீராங்கனை அலினா அந்தோணி ஆகியோர் சிறந்த வீராங்கனைகளாக தேர்வு செய்யப்பட்டனர்.
போட்டியில் வெற்றி பெறும் அணிகளுக்கு கோப்பைகளும், சுமார் ரூ.3 லட்சம் மதிப்பிலான ரொக்கபரிசுகளும் வழங்கப்பட உள்ளன. போட்டி முடிவில் வ.உ.சி. துறைமுக ஆணைய தலைவர் சுஷாந்தகுமார் புரோகித், துணைத் தலைவர் ராஜேஷ் சவுந்தரராஜன் ஆகியோர் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு வழங்க உள்ளனர்.


