தூத்துக்குடி மக்களுக்கு சுகாதாரமான குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது என்று மாநகராட்சி கூட்டத்தில் மேயர் ஜெகன் பெரியசாமி தெரிவித்தார்.
தூத்துக்குடி மாநகராட்சி சாதாரண கூட்டம் மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் இன்று காலை நடந்தது. மாநகராட்சி ஆணையர் மதுபாலன், துணை மேயர் ஜெனிட்டா செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வைத்தனர். கூட்டத்தை தொடங்கி வைத்து மேயர் பேசியதாவது “தமிழக துணை முதல்வராக பதவி ஏற்றுள்ள உதயநிதி ஸ்டாலினுக்கு இந்த மாமன்றம் வாழ்த்துக்களையும் நன்றியையும் தெரிவித்துக் காெள்கிறது.
தூத்துக்குடியில் பல்வேறு இடங்களில் பாதாள சாக்கடை அமைக்கும் பணிகள் முடிவடையும் நிலையில் உள்ளது. பருவ மழையை முன்னிட்டு கொண்டு மழைநீர் தேங்காத அளவிற்கு சாக்கடையில் தண்ணீர் செல்வதற்கு அனைத்து ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. பக்கிள் ஓடை முழுவதும் சீரமைக்கப்பட்டு மழைநீர் செல்வதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது.
கூட்டத்தில் அதிமுக கொறடா வழக்கறிஞர் மந்திரமூர்த்தி பேசும் போது “தாமிரபரணி ஆற்றில் கழிவுநீர் கலப்பதால் தூத்துக்குடிக்கு வரும் குடிநீரில் சாக்கடை நீரும் கலந்து வருகிறது. இதனால் வல்லநாட்டில் தண்ணீரை சுத்தப்படுத்தி சுகாதாரமாக தண்ணீர் சப்ளை செய்ய வேண்டும் என்றார்.
இதற்கு பதில் அளித்த மேயர் “தாமிரபரணி ஆற்றில் கழிவு நீர் கலக்கவில்லை. இது வெறும் வதந்தி தான். தூத்துக்குடிக்கு சுத்தமான சுகாதாரமான குடிதண்ணீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது என்றார்.
அதிமுக கவுன்சிலர் மந்திரமூர்த்தி “தூத்துக்குடி தெப்பக்குளத்தில் மீன்கள் அதிகளவில் இறந்து கிடக்கிறது. இதனால் சுகாதார சூர்கேடு ஏற்படுவதாக தெரிவித்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக கவுன்சிலர் சுரேஷ்குமார் இவர்களே செத்த மீன்களை தெப்பகுளத்தில் போட்டு விட்டு இங்கு நாடகம் ஆடுகிறார்கள் என்றார். இதைத் தொடர்ந்து அதிமுக கொறடா மந்திரமூர்த்திக்கும் திமுக கவுன்சிலர் சுரேஷ்குமார் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
இதனால் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இதைத்தொடர் மேயர் இருவரையும் சமாதானப்படுத்தி அமர வைத்தார். மேலும் அவர் பேசும்போது தெப்பக்குளம் தற்போது சுத்தமாக உள்ளது. மீன்கள் மிகவும் பாதுகாக்கப்பட்டு வருகிறது என்று கூறி பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
அப்போது புதிதாக போடப்பட்ட ரோடுகளில் மீண்டும் தோண்டி குழாய் பதிக்கிறோம் என்று குடிநீர் குழாய்களை உடைத்து விடுகிறார்கள் இதனால் குடிநீர் வழங்குவதில் பாதிப்பு ஏற்படுகிறது. தூத்துக்குடி முழுவதும் சுமார் 20-க்கும் மேற்பட்ட இடங்களில் குடிநீர் குழாய் உழைப்பு ஏற்பட்டு உள்ளது. இதை உடனடியாக சரி செய்ய வேண்டும் என்று என்று கவுன்சிலர்கள் கோரிக்கை விடுத்தனர்
இதற்கு பதில் அளித்த மேயர் ஜெகன் பெரியசாமி “எந்த எந்த பகுதியில் குடிநீர் குழாய் உடைக்கப்பட்டு இருக்கிறது அந்தப் பகுதியில் வேலைகள் நடந்து வருகிறது இதனால் சீரான குடிநீர் வழங்கப்படும் என்று தெரிவித்தார். இதைத் தொடர்ந்து ஒவ்வொரு கவுன்சிலர்களும் தங்களது வார்டுகளில் உள்ள குறைகளை தெரிவித்தனர். தொடர்ந்து கூட்டத்தில் 17 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் மாநகராட்சி துணை ஆணையர் ராஜாராம், துணை மாநகரப் பொறியாளர் சரவணன், நகர் அலுவலர் டாக்டர் தினேஷ் ராஜா, மண்டல ஆணையர்கள் சொர்ணலதா, சுரேஷ்குமார், கல்யாணசுந்தரம், மகேந்திரன், மாநகராட்சி மண்டல தலைவர்கள் கலைச்செல்வி திலகராஜ், அன்னலட்சுமி, கோட்டுராஜா, பாலகுருசாமி, நிர்மல்ராஜ், மாநகராட்சி கவுன்சிலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


