நான் மதுரையில் படித்துக் கொண்டு இருந்தபோது, விடுதி மூடி விட்டதால், இரவில் மீனாட்சியம்மன் கோவில் அருகில் உள்ள கடையில் உறவினர்களுடன் சாப்பிடச் சென்றேன்.
அந்த உணவகத்தில் சாப்பிடுபவர்களும் உணவக ஆட்களும் மல்லிகைப்பூ, மல்லிகைப்பூ என பேசிக் கொண்டார்கள். இரவு நேரமாயிற்றே. அதிலும் உணவகத்தில் ஏன் மல்லிகை பூவைப் பற்றி எல்லோரும் பேசுகிறார்கள் என புரியாமல் நானும் விழித்துக் கொண்டிருந்தேன். எனது உறவினர்களுக்கு இது நன்றாகத் தெரிந்திருந்ததால் அவர்கள் சாதாரணமாக இருந்தார்கள். சாப்பிட அமர்ந்ததும் நீங்கள் மல்லிகைப்பூ சாப்பிடுகிறீர்களா என்றதும் எனக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை. என் உறவினர் ஒருவர் இங்கு இட்லி மிக அருமையாக இருக்கும். மல்லிகைப் பூ போல் பஞ்சு பஞ்சாக ரொம்ப மிருதுவாக இருக்கும். அதனால் தான் இட்லி என்பதற்கு பதிலாக மல்லிகைப்பூ என்று சொல்கிறார்கள் என்றார்.அப்புறம் என்ன சாப்பிட்ட பின் அவர்கள் சொன்னது நூற்றுக்கு நூறு உண்மை என்று எனக்கும் புரிய, ஆச்சரியத்தில் அசந்தே போய் விட்டேன்.


