திருநெல்வேலி திருவள்ளுவர் பேரவையின் ஆறாம் ஆண்டு தொடக்க விழா நெல்லை நகரம் கூலக்கடை வீதி திருவள்ளுவர் அரங்கில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட நெல்லை மேயர் கிட்டு என்ற ராமகிருஷ்ணன் தாமிரபரணியை சுத்தப்படுத்த அனைத்து நடவடிக்கையும் எடுக்கப்படும். என்ற உறுதியளித்து பேசினார்.
இந்த நிகழ்ச்சிக்கு மேனாள் துணை ஆட்சியர் தியாகராஜன் தலைமை தாங்கினார். மருத்துவக் கல்லூரி மாணிக்கவாசகம் முன்னிலை வகித்தார். அமைப்பின் நிறுவனர் கவிஞர் ஜெயபாலன் அனைவரையும் வரவேற்றுப் பேசினார். கூட்டத்தில் திருநெல்வேலி மாநகர மேயர் கிட்டு என்ற ராமகிருஷ்ணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறந்த இலக்கிய அமைப்புகளுக்கும் சான்றோர்களுக்கும் விருதுகள் வழங்கி சிறப்புரையாற்றினார். அவரிடம் எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு தாமிரபரணி ஆற்றில் சாக்கடை கலக்காமல் இருக்க தாங்கள் இதுவரை பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகீறீர்கள். மேலும் நிரந்தரமாக திருநெல்வேலி மாநகராட்சி சாக்கடை தாமிரபரணியில் கலக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். அதற்கு பதிலளித்த நெல்லை மநாகர மேயர் கிட்டு என்ற ராமகிருஷ்ணன் தாமிரபரணியை நிரந்தரமாக காக்கவும், நெல்லை மாநகர சாக்கடை நதியில் கலக்காமல் இருக்கவும் உலக வங்கி நிதி உதவியுடன் பிரமாண்டமான திட்டம் தயாராகி உள்ளது. விரைவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பை வெளியிடுவார் என்று கூறினார். இந்த அறிவிப்புக்கு கூட்டத்துக்கு வந்திருந்த அறிஞர்கள் கைதட்டி உற்சாகமாக பாராட்டினர்.
இந்த நிகழ்ச்சியில் பொருநை இலக்கிய வட்டத்திற்கு ‘இலக்கிய பீடம்’ விருதும் சமூகத்தொண்டாற்றி வரும் லிட்டில் பிளவர் கல்விக் குழுமங்களின் தாளாளர் மரிய சூசைக்கு ‘அன்னை தெரேசா’ விருதும் தமிழறிஞர் கவிஞர் வீரை முத்தையாவுக்கு ‘மறைமலை அடிகள்’ விருதும் கலை பதிப்பசு ஆசிரியர் கவிஞர் பாப்பாக்குடி இரா. செல்வமணிக்கு குறள் நெறி பரவுவார்’ விருதும் வழங்கப்பட்டன.
தொடர்ந்து நெல்லை சித்த மருத்துவக் கல்லூரி கோபால், பால கிருஷ்ணன், பேரா நீச்சல் போட்டியில் மாநில அளவில் பதக்கம் பெற்றதை பாராட்டி ‘தளவாய் ராமசாமி சாதனையாளர் விருதும் மேடைப் பேச்சிற்காக முனைவர் சொர்ணவல்லிக்கு ‘நாவுக்கரசி விருது’ம் திறனாய்வாளர்களுக்காக கவிஞர்கள் சிவ.ராமச்சந்திரன் சக்தி வேலாயுதம், காந்திமதி வேலன். வள்ளி சேர்மலிங்கம் ஆகியோருக்கு ‘தி.க.சி. விருதும் ஆசிரியர் சிவ. செல்வமாரிமுத்து, கவிஞர்கள் முத்துசாமி. புன்னைச் செழியன். பூங்கோதை கணேசன், மணிமாலா சிவராமன் ஆகியோருக்கு ‘கபிலர்’ விருதும் வழங்கி சிறப்பிக்கப்பட்டது.
விழாவில் எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு, பட்டிமன்ற நடுவர் புத்தனேரி செல்லப்பா, பேராசிரியர் மகாலட்சுமி தேசிய வாசிப்பு இயக்கத் தலைவர் தம்பான். முனைவர் சரவணகுமார் ஆகியோர் கருத்துரையாற்றினார்கள். மாமன்ற உறுப்பினர் அ. ரவீந்தர், சுத்தமல்லி திருவள்ளுவர் கழகத் தலைவர் சொக்கலிங்கம், முனைவர் கணபதி சுப்ரமணியன், நாட்டுப்புறப் பாடகி சந்திர புஷ்பம், மூக்குப்பேரி தேவதாசன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
முன்னதாக கவிஞர் பாப்பாக்குடி செல்வமணி தலைமையில் சிறப்புக் கவியரங்கமும் தாமிரபரணி நாட்டிய சபை மாணவிகளின் பரதநாட்டியமும் நடைபெற்றது.
ஆண்டுவிழாவை முன்னிட்டு நடத்தப்பட்ட துளிப்பா, மரபுக்கவிதை, சிறுகதைப் போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்றவர்களுக்கு விருதுகளும் ரொக்கப் பரிசுகளும் வழங்கி சிறப்பிக்கப்பட்டது. துளிப்பா போட்டியில் சுத்தமல்லி ஜனனி, மரபுக் கவிதை போட்டியில் தருமபுரி ராஜகுமாரன், சிறுகதைப் போட்டியில் சக்தி வேலாயுதம் ஆகியோர் முதலிடம் பெற்றனர்.
கவிஞர் ஸ்ரீராம் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். நிழல் இலக்கியத்தளம் பிரபு நன்றி கூறினார். கூட்டத்தில் தமிழறிஞர்கள் பொதுமக்கள் மாணவமாணவிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


