திருசெந்தூர் ரயில் கடந்த 17 ந்தேதி பெய்த தீடீர் மழையால் ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டது. இதில் 800 பயணிகள் மிகவும் கஷ்டப்பட்டனர். இந்த பயணிகளுக்கு மேலப்புதுக்குடி மக்கள் உணவு வழங்கிய வகைக்கு அந்த ஊர் மக்களுக்கு பாராட்டு குவிந்த வண்ணம் உள்ளது. அது போலவே ரயில் தண்டவாளம் வழியாக நடந்து வந்த மக்கள் தாதன்குளத்துக்கு வந்து சேர்ந்தனர். அந்த பயணிகளை தாதன்குளம் மக்கள் உபசரித்து உணவு வழங்கி பராமரித்து பின் செய்துங்கநல்லூருக்கு வாகனம் மூலம் அனுப்பி வைத்தார்கள். இதனால் பயணிகள் தாதன்குளம் மக்களை பாராட்டி சென்றனர். தற்போது பயணிகளுக்கு உணவு வழங்கிய தாதன்குளம் மக்களுக்கு ரயில்வே நிர்வாகம் பரிசு தொகையை வழங்கியுள்ளது. இதற்காக ரயில்வே நிர்வாகத்தினை சேர்ந்த அதிகாரிகள் வணிக ஆய்வாளர் அரவிந்த், வணிக அலுவலர்கள் காந்தி மதிநாதன், ரோகினி ஆகியோர் தாதன்குளம் வருகை தந்தனர். நிதியை பாலகிருஷ்ணன், சுந்தர், மரியராஜ், செல்வி மற்றும் ஊர் பொதுமக்கள் வாங்கி கொண்டனர். அரசு தரும் நிதிக்காக, பேருக்காக நாங்கள் உதவி செய்யவில்லை. முழுக்க முழுக்க மனிதாபிமானம் தான் காரணம். எங்கள் மக்களுக்கு ஏதாவது உதவ வேண்டும் என்றால் தாதன்குளத்தில் பாலக்காடு ரயிலை நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும், ரயில் நிலையத்தினை புதுப்பித்து நீளத்தினை நீட்டிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். ரயில்வே அதிகாரி ஆவண செய்வதாக வாக்களித்துள்ளனர்.
இந்த நிவாரண தொகை யை முதல்வர் நிவாரண நிதியாக கனிமொழி எம்.பியிடம் வழங்க ஊர் மக்கள் முடிவு செய்துள்ளனர்.


