கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோவிலில் கந்த சஷ்டி திருவிழாவின் முக்கிய நிகழ்வான சுப்பிரமணிய சுவாமி திருக்கல்யாணம் நேற்று கோலாகலமாக நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் உடனுறை பூவன நாதசுவாமி கோவிலில் கந்த சஷ்டி திருவிழா கடந்த 22-ஆம் தேதி தொடங்கியது. விழா நாட்களில் தினமும் சுப்பிரமணிய சுவாமி மற்றும் வள்ளி, தெய்வானைக்கு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்தது. விழாவில் முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாணத்தையொட்டி நேற்று காலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. தொடர்ந்து திருவனந்தல் மற்றும் திருப்பள்ளி எழுச்சி பூஜை நடைபெற்றது.
மாலை 6 மணிக்கு கோவில் மண்டபத்தில் உள்ள மணமேடைக்கு திருக்கல்யாண கோலத்தில் சுப்பிரமணிய சுவாமியும், அம்பாள்களும் எழுந்தருளினர். இரவு 7.45 மணிக்கு சுப்பிரமணிய சுவாமி திருக்கல்யாணம் கோலாகலமாக நடந்தேறியது. தொடர்ந்து சுவாமி, அம்பாள்களுக்கு சிறப்பு தீபாராதனை நடந்தது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் வள்ளி, தெய்வானையுடன் சுப்பிரமணிய சுவாமி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
அங்கிருந்து சுவாமி வள்ளி, தெய்வானையுடன் சுவாமி மயில் வாகனத்தில் திருவீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதே போன்று சொர்ணமலை கதிரேசன் கோவிலிலும் திருக்கல்யாண விழா விமரிசையாக நடந்தது. இதி்ல் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


