குன்னத்தூர் பொத்தையை சுற்றி கிரிவலம் வருவதற்கான காரணம் பல உண்டு. திருவேங்கடநாதபுரம் கோயிலுக்கு ராஜகோபுரம் கட்டுவதற்காக வந்தவர்கள், இந்த மலையில் சித்தர்கள் வாசம் அதிகமாக உள்ளது. பல சித்தர்கள் இங்கே வாழுகிறார்கள். பூஜை செய்கிறார்கள். அதை ஆன்மிக அன்பர்கள் மட்டுமே அறியமுடியும் என்றார். அந்த பொறியாளர் கூற்றை கேட்டு பொத்தையை சுற்றி வலம் வரலாம் என நினைத்தனர். ஏற்கனவே வல்லநாடு சித்தர் சாது சிதம்பர சுவாமி நிறுவிய தீப தண்டில் பூஜை நடைபெற்று வந்தது. அதை ஈஸ்வர மூர்த்தி அய்யா நடத்திக்கொண்டிருந்தார்.
இதற்கிடையில் கொரனா காலம் வந்தது. அப்போது மொத்தமாக பக்தர்கள்கூட இயலாது. ஆனாலும் பௌர்ணமியில் இந்த பொத்தையை வலம் வரலாம் முடிவு செய்து அதற்கான நாள் பொத்தையை சுற்றி வந்தனர்.குற்றாலநாதர் தலைமையில் பக்தர்கள் 25 பேர் கிரிவலம் வர துவங்கினர். ஆனால் மக்கள் கூடக்கூடாது. அப்படி கூடினால் சுத்தமல்லி போலிசார் அவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுத்தனர். ஆனால் சமூக இடைவெளி விட்டு நாங்கள் கிரி வலம் வருவோம் என பக்தர்கள் முதலில் கிரிவலத்தினை துவங்கினார்கள். தற்போது இந்த கிரிவலம் மிகச்சிறப்பாக நடைபெற்று வருகிறது.
இந்த இடம் செம்மண் நிறத்தில் உள்ளது. ஆகவே செங்காணி என்று அழைக்கப்பட்டு வருகிறது என நாம் ஏற்கனவே பேசி வருகிறோம். அதே வேலையில் இங்கு வந்த பொறியாளர் சித்தர்கள் வாழும் இந்த இடத்தினை அறிய வேண்டும் என்றால் இங்கே பச்சை வெட்டுக்கிளி இருக்கும் என்றார். அதுபோலவே கோயில் அருகே பச்சை வெட்டுக்கிளி பக்தர்கள் கண்ணில் பட்டது. இதனால் பக்தர்கள் மிகவும் சந்தோசப்பட்டனர்.
கிரிவலம் ஆரம்பிக்க நமக்கு தற்போது வழிகாட்டியாக இருக்கும் தினமலர் சீனிவாசன் தான் மக்களைகூப்பிட்டு ஆலோசனை கூட்டம் போட்டார். ஈஸ்வர அய்யா,வெதர்மேன் கணேசன், கவுன்சிலர் சோமு, வெங்கட சுப்பிரமணியன் உள்பட பல முக்கிய பிரமுகர்கள் ஒன்று சேர்ந்தனர். அவர்கள் ஆலாசனை படியே தற்போது பௌர்ணமி கிரிவலம் நடந்துவருகிறது. தற்போது குன்னத்தூர் பொத்தை கிரிவலம் என்றால் மிகவும்பிரபலமாகி விட்டது. தற்போது 600 பேர் வரை இந்த கிரிவலத்தில் பங்கு கொள்கிறார்கள். சமார் 5 மணிக்கு கிரிவலத்தினை ஆரம்பித்தால் 6.15 மணிக்கு முடிந்துவிடும். பஞ்சாயத்து சார்பில் இவர்களுக்கு டீ, காபி போன்றவை வழங்கப்படும்.
தற்போது இந்த கிரிவலத்தினை பற்றி கேட்டபோது தினமலர் சீனிவாசன் சுவாமி இந்த பொத்தையை சுற்றி 108 சிவலிங்கம் பிரதிட்சை செய்யவேண்டும். அதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறோம் என்று கூறினார்.
அதோடு மட்டுமல்லாமல் குன்னத்தூர் அபூர்வ லிங்கம் ஒன்று உள்ளது என எங்களை அழைத்துச் சென்றார்.
குன்னத்தூர் ஊருக்குள் திருநெல்வேலி கால்வாயில் மேற்கு கரையில் அந்தலிங்கம் மிக பிரமாண்டமாக அமைந்து உள்ளது.
பெரும்பாலுமே தெற்கு இருந்து வடக்கு நோக்கி ஒரு நீர்நிலை இருந்தால் அந்த இடம் காசிக்கு ஒப்பானதாகும். இங்கே மிகப்பிரமாண்டாக உள்ள சங்கர மகாலிங்கம் மிகப்பெரியவர். சதுரகிரி மலையில் உள்ளவரை போல் உள்ளார்.
ஆனால் மிகச்சிறிய கோயிலுக்குள் இவரை வைத்துள்ளார்கள். பரிவார தெய்வங்கள் பெரிய அளவில் இல்லை. இரண்டு நந்தி இந்த கோயில் முன்பு உள்ளது. ஒரு நந்தி மிகப்பெரியதாக உள்ளது. மற்றொரு நந்தி மிகச்சிறியதாகும்.
குன்னத்தூர் பொத்தையில் ஒரு லிங்கம் இருந்தாகவும், அதன் பின் நாளடைவில் அந்த லிங்கம் மண்ணில் புதைந்தாகவும், அந்த லிங்கம் இருந்த இடத்தில் மேய்ச்சலுக்கு வந்த பசு பால் சுரந்த காரணத்தினால் லிங்கம் வெளியே தெரிந்து, மன்னர் வழிப்பாட்டுக்கு கொண்டு வந்ததாகவும் நாம் ராகு தலமான கோதபரமேஸ்வரர் ஆலயத்தினை கூறுவோம். இந்த ஆலயமும் அதுபோலவே மண்ணில் புதைந்த ஆலயமாகி விட்டது.
பிற்காலத்தில் இந்த கோயிலை கட்டி அதில் அம்பாள், நந்தி உள்பட பரிவாரதேவதைகளை வைத்து அரசன் பெரிய கோயிலை கட்டியுள்ளார். இந்த கோயிலில் தெப்ப உச்சவம் நடக்க தெப்பக்குளமும் அமைத்து உள்ளான். நாளடைவில் ஏற்பட்ட இயற்கை பேரிடரால் அந்த கோயில் இடிந்து விட்டது.
ஆனால் இந்த இடத்தில் உள்ள லிங்கம் மட்டும் மிகப்பிரமாண்டமாக இருந்துள்ளது. எனவே அந்த லிங்கத்தினை சுற்றி பிற்காலத்தில் வந்தவர்கள் கோயிலை கட்டி வணங்க ஆரம்பித்து விட்டனர். அவருக்கு முன்பு மிகப்பிரமாண்டமான நந்தி சிலையும் உள்ளது.
பிற்காலத்தில் இங்குள்ள தெப்பக்குளமும் பராமரிப்பு இன்றி போய் விட்டது. இதற்கிடையில் தாமிரபரணியில் சுத்தமல்லி அணைக்கட்டு கட்டும் போது இந்த வழியாக திருநெல்வேலி கால்வாய் பாயத்துவங்கியது. எனவே இந்தகோயில் தனது பரப்பை சுருக்கி கொண்டது.
ஒரு காலகட்டத்தில் இந்த பகுதியில் புதைந்து கிடந்த நந்தியை பக்தர்கள் இந்த சிவன் முன்பு பிரதிட்சை செய்து வணங்கி வருகிறார்கள். இதனால் இரண்டு நந்தியுடன் இந்த கோயில் உள்ளது. இந்த கோயிலில் உள்ள அம்பாள் சிலையும் மற்றொரு இடத்தில் வைத்து வணங்கப்பட்டு வருவதாக கூறுகிறார்கள்.
இந்த லிங்கம் சங்கர மகாலிங்கம். செந்தூர மகாலிங்கம் எனவும் அழைக்கப்படுகிறது. இந்த லிங்கத்தின் ஆவுடை மண்ணால் செய்யப்பட்டது. தற்போது இந்த கோயிலில் பூஜைகள் மிகச்சிறப்பாக நடைபெற்று வருகிறது. பிரதோசம், சிவராத்திரி, மகாசிவராத்திரி உள்பட சிவனுக்கு உரிய அனைத்துப்பூஜைகளும் நடைபெறுகிறது. அதோடு மட்டுமல்லாமல் தினசரி பூஜைகளும் உண்டு.
இந்த ஆலயத்தில் வந்து வணங்கி நின்றால் பூர்வ ஜென்ம பாவங்கள் தொலையும் என்கிறார்கள் ஆன்றோர்கள். குறிப்பாக நாள்பட்ட நோய், மனநோய், கண்களில் ஏற்படும் நோய், நாம் செய்த பாவத்தினால் வரும் அனைத்து நோய்களும் தீரும். திருமண தடை நீங்கும், பொருள் வளங்கள் வந்து சேரும். எனவே இந்த சிவனை வணங்க பக்தர்கள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறார்கள்.
குறிப்பாக சதுரகிரி மலைக்கு சென்று சங்கர மகாலிங்கத்தினை தரிசிக்க முடியாதவர்கள் இங்கு வந்து செந்தூர லிங்கத்தினை தரிசித்து அருள் பெறலாம்.
கோயில் முன்புள்ள ஆலமரம் பல கிளைகளை கொண்டு இருப்பதால் இதன் பழமைய பறை சாற்றப்பட்டு வருகிறது. தற்போது தெப்பக்குளத்துக்கு கால்வாயில் இருந்து தண்ணீர் பாய ஏற்பாடு செய்துள்ளார்கள்.
கோயிலில் உள்ள பொருள்களை வைக்க பக்கத்தில் ஒரு அறைக் கட்டப்பட்டுள்ளது. இந்த ஆலயத்தினை காட்டிய தினமலர் சாமி எங்களுக்கு திருவேங்கடநாதபுரத்தில் உள்ள பல்கலைகழகம் பற்றி கூறினார். இந்த பல்கலைகழகம் டெல்லி தயாள் பாக்ய ஸ்ரீ இராதா ஸ்வாமி இயக்கம் மூலம் நடந்து வருகிறது.
டெல்லி தயாள் பாக்ய ஸ்ரீ இராதா ஸ்வாமி இயக்கம் நாடு முழுவதும் பரவியுள்ள ஒரு ஆன்மீக அமைப்பாகும். தமிழகத்தில் இவ்வியத்தின் மகானாக விளங்கியவர் சைதன்யானந்த குருதாச சுவாமிகள். இவர் திருநெல்வேலி டவுனைச் சார்ந்தவர். அற்புத சித்திகள் வாய்க்க பெற்றவர். பாடல்கள் இயற்றுவதிலும், இனிமையாக பாடுவதிலும், சிறந்து விளங்கினார். இவர் குன்னத்தூர் பொத்தையில் சில காலம் தங்கி ஆன்மீக அனுபவங்களைப் பெற்றுள்ளார்.
அவர் இந்த ஊர் பிடித்து போகவே இங்கே பல்கலைகழகம் அமைத்துள்ளார் என கூறப்படுகிறது. அதற்கு தயார் பக் நிகர் நிலை பல்கலைகழகம் என பெயர் வைத்துள்ளார். இதற்கு தலைநகர் ஆக்ராவில் உள்ளது. இதைப்பற்றி பெரிய தகவல் விசாரிக்க சென்ற போது இங்கிருந்தவர்கள் தலைமை அலுவலகத்தில் அனுமதி பெற வேண்டும் என்று கூறிவிட்டனர்.
ஆகவே அதிகமான தகவலை என்னால்பெய இயலவில்லை. ஆனாலும் நாம் வழிப்போக்கன். இங்கே ஒரு பல்கலைகழகம் இருந்தது என்பதை பதிவிடாமல் போனால் மிகப்பெரிய வரலாறு ஒன்றை மறைத்தது போல ஆகி விடும். அதுமட்டுமல்லாமல் கொரனா காலம் வரை இந்த பல்கலைகழகத்தில் தங்கி பயின்றவர்கள் நாடு முழுவதும் உள்ளனர். தற்போது அதிகமாக யாரும் பயில வில்லை. ஆனால் விரைவில் பொதுப்பொலிவுடன் இங்கே ஒரு கல்லூரி ஆரம்பிக்கப் படுவதாக பஞ்சாயத்து தலைவர் சேர்மதுரை அவர்கள் மூலம் தெரிந்து கொண்டேன்.
இங்கு இவர்கள் அமைப்பின் சார்பில் ராதா சுவாமி நடுநிலைப்பள்ளியும் இயங்கி வருகிறது. இதில் உள்ளூர் மாணவ மாணவிகள் படித்து வருகிறார்கள்.
சங்காணி கிராமத்தினைசேர்ந்தவர் நெல்லை முன்னாள் துணை மேயர் விஸ்வநாத பாண்டியன். திமுகவின் பராம்பரிய குடும்பமாக இவர் உள்ளார். இவர் நகராட்சி உறுப்பினராக 1991முதல் 96 வரை பணிபுரிந்தார். துணை மேயராக 1996 முதல் 2006 வரை தொடர்ந்து 10 வருடமாக பணிபுரிந்துள்ளார். இதில் ஐந்து வருடம் எதிர்கட்சியாக இருக்கும் போது இவர் துணை மேயராக இருந்துள்ளார்.
நெல்லை மண்டலத் தலைவர் 2006 முதல் 2011 பணியாற்றினார். பொதுக்குழு உறுப்பினர் 1991 முதல் 2018 வரை பணியாற்றினார். திமு.க கழக உறுப்பினராக 1969 முதல் 2018 வரை பணிபுரிந்துள்ளார்.
1996 ல் திருநெல்வேலி மாநகராட்சி அந்தஸ்து பொறுப்பு பெற்ற போது முதல் மேயராக உமாமகேஸ்வரி பொறுப்பேற்ற போது துணைமேயராக பொறுப்பு ஏற்றவர் விஸ்வநாத பாண்டியன். அதன் பிறகு 10 வருடமாக துணை மேயராக இருந்தார்.
இவர் 19.08.1949 ல் கீழ திருவேங்கடநாதபுரம் சங்காணியில் பிறந்தார். இவரது தந்தை சிவசுப்பு தேவர், தாயார் ஜெபஞானத்தம்மாள். விஸ்வநாதபாண்டியனுக்கு இரண்டு மனைவிகள் ஒருவர் லெட்சுமி, மற்றவர் கல்யாணி. இவர் 16.04.2018 அன்று இறந்தார். இவரின் அடக்க ஸ்தலம் சங்காணியில் உள்ளது. வருடந்தோறும் குருபூஜை நடந்து வருகிறது.
இந்த தகவலையெல்லாம் இவரது மகன் எஸ்.வி. பொன்னையா பாண்டியன் தந்து உதவினார். இவரை எனது நண்பர் கால்வாய் சிவா துணையுடன் அணுகினேன். பொன்னையா பாண்டியன் திருநெல்வேலி மத்திய மாவடட்ம் விவசாய அணி அமைப்பாளராக உள்ளார்.