கயத்தாறு அருகே டயர் வெடித்ததில் வேன் சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பெண் உயிரிழந்தார். 9 பேர் காயமடைந்தனர்.
நான்குனேரி வட்டம் இளங்குளம் கிராமத்தைச் சேர்ந்த அழகுதுரை மனைவி ராஜேஸ்வரி (55). இவர், தனது உறவினர்களுடன் வானரமுட்டி கிளிக்கூண்டு கருப்பசாமி கோயிலுக்கு தரிசனம் செய்வதற்காக வேனில் நேற்று முன்தினம் வந்து கொண்டிருந்தார். வேனை சார்லஸ் என்பவர் ஓட்டி வந்தார்.
திருநெல்வேலி – மதுரை தேசிய நெடுஞ்சாலையில் கரிசல்குளம் விலக்கு அருகே சென்றபோது முன்பக்க டயர் வெடித்ததில், வேன் சாலையில் கவிழ்ந்தது. வேனில் பயணம் செய்தவர்களில் 9 பேர் காயமடைந்தனர். அவர்களை போலீசார் மீட்டு, கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு
அனுப்பி வைத்தனர். அவர்களில் பலத்த காயமடைந்த ராஜேஸ்வரி (55), மேல் சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உயிரிழந்தார். இதுகுறித்து கயத்தாறு போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


