ஸ்ரீவைகுண்டம் அருகே கணவன், மனைவி இடையே ஏற்பட்ட குடும்ப தகராறில் பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தை அடுத்த செய்துங்கநல்லூர் அருகே உள்ள விட்டிலாபுரம் வள்ளுவர் காலனியை சேர்ந்தவர் சண்முகம். இவருக்கு ஈஸ்வரி (50) என்ற மனைவியும், ஒரு மகனும், 2 மகள்களும் உள்ளனர். நேற்று இரவு ஈஸ்வரி திடீரென வீட்டில் இருந்த மண்எண்ணையை எடுத்து தலையில் ஊற்றி தீவைத்துக்கொண்டார். உடனே உறவினர்கள் அங்கு வந்து ஈஸ்வரியை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் இன்று அதிகாலையில் அவர் பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து செய்துங்கநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். சண்முகத்தின் மூத்த மகளுக்கு திருமணம் முடிந்து தற்போது நிறைமாத கர்ப்பிணியாக உள்ளார். இதனால் அவர் தற்போது தனது பெற்றோர் வீட்டிற்கு வந்துள்ளார்.
அவருக்கு வளைகாப்பு நடத்துவது குறித்து நேற்றிரவு கணவர் சண்முகத்திடம் ஈஸ்வரி பேசியுள்ளார். அப்போது கணவன், மனைவி இடையே குடும்ப தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அதில் மனம் உடைந்து காணப்பட்ட ஈஸ்வரி தீக்குளித்து தற்கொலை செய்திருக்கலாம் என்று போலீசார் தெரிவித்தனர்.


