தூத்துக்குடியில் இன்று (நவம்பர் 28) காலை 8 மணி முதல் பெய்து வரும் தொடர் மழையால் மாநகரின் பல்வேறு பகுதிகளில் சாலைகள் வெள்ளக்காடாக மாறியுள்ளன.
காலை முதல் இடைவிடாமல் பெய்து வரும் மழையின் காரணமாகத் தூத்துக்குடி மாநகரின் பல்வேறு பகுதிகளில் மழைநீர் குளம்போல் தேங்கி நிற்கிறது. குறிப்பாக நகரின் முக்கியச் சாலைகள் வெள்ளக்காடாக மாறியுள்ளதால், பள்ளி மற்றும் கல்லூரிகளுக்குச் செல்லும் மாணவ, மாணவியர்களும், அலுவலகங்களுக்குச் செல்லும் பணியாளர்களும் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
மேலும், ஏற்கெனவே பழுதடைந்து குண்டும் குழியுமாக உள்ள சாலைகளில் மழைநீர் தேங்கி நிற்பதால், பள்ளம் தெரியாமல் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் தடுமாறி விழுந்து விபத்துக்குள்ளாகும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது.
தொடர் மழை காரணமாகக் குடிநீர் கலங்கலாக வருவதாகவும், தாழ்வான பகுதிகள் மற்றும் சாலைகளில் தேங்கும் மழைநீர் வடிவதற்குப் போதிய வசதிகள் இல்லை எனவும் மாநகராட்சி நிர்வாகத்தின் மீது பொதுமக்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
எனவே, மாநகராட்சி நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து, மழைநீர் வடிகால் வசதிகளை உடனடியாகச் சீரமைத்து, பழுதடைந்த சாலைகளைச் செப்பனிட வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதனிடையே, மழை தொடர்ந்து பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளதால், பொதுமக்கள் பாதுகாப்பாகவும் எச்சரிக்கையுடனும் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.


