நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தை வளப்படுத்தும் தாமிரபரணி ஆறு மாசு பட்டு இருப்பது, அந்த பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கு கவலையை ஏற்படுத்தி உள்ளது. அதனை சுத்தப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரி வருகிறார்கள்.
இந்த நிலையில் திருநெல்வேலி தொகுதி எம்.பி.யான ராபர்ட் புரூஸ் இது தொடர்பாக மக்களவையில் கேள்வி கேட்டிருந்தார். அதாவது, தாமிரபரணி ஆறு மாசுபட்டிருப்பதை மத்திய அரசு அறிந்து இருக்கிறதா?, அதனை சுத்தப்படுத்தி, புத்தாக்கம் செய்வதற்கு அரசிடம் ஏதேனும் பரிந்துரைகள் உள்ளதா?, நாட்டில் உள்ள முக்கிய நதிகளை தூய்மைப்படுத்தும் திட்டங்கள் என்ன? என்பன போன்ற கேள்விகளை அவர் கேட்டார்.
இதற்கு மத்திய நீர்வளத்துறை இணை மந்திரி ராஜ் பூஷண் சவுத்ரி நேற்று எழுத்துப்பூர்வமாக பதில் அளித்தார். அந்த பதிலில் கூறப்பட்டு இருப்பதாவது:-
2022-ம் ஆண்டு நவம்பர் மாதம் வெளியிடப்பட்ட மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அறிக்கையின்படி, தாமிரபரணி ஆற்றில் பாப்பான்குளம் முதல் ஆறுமுகநேரி வரையிலான பகுதி மாசுபட்டதாக அடையாளம் காணப்பட்டது. ஆறுகளில் கழிவுநீர் மற்றும் தொழிற்சாலை கழிவுகளை சுத்திகரித்து கலக்கச்செய்வதை உறுதி செய்வது மாநிலங்கள் மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் பொறுப்பு ஆகும்.
தேசிய நதிகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 2001-ம் ஆண்டு முதல் 2007-ம் ஆண்டுவரை தாமிரபரணியில் மாசுபாட்டை குறைப்பதற்கான திட்டங்களை அமைச்சகம் செயல்படுத்தியது. ஆனால் தற்போது எந்த திட்டமும் அமைச்சகத்தின் பரிசீலனையில் இல்லை.
ஆறுகளை பராமரிப்பதற்காக மாநிலங்கள் மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு நமாமி கங்கை, தேசிய நதிகள் பாதுகாப்பு திட்டம் , புத்துணர்வு மற்றும் நகர்ப்புற மாற்றத்துக்கான அடல் மிஷன் போன்ற பல்வேறு திட்டங்களின் கீழ் இந்திய அரசு நிதி மற்றும் தொழில்நுட்ப ஆதரவை வழங்குகிறது.
நாட்டில் கங்கை நதி மற்றும் அதன் துணை நதிகளின் மாசுபாட்டைக் குறைப்பதற்காக நீர்வளத்துறை அமைச்சகத்தால் நமாமி கங்கை என்ற மத்தியத்துறைத் திட்டம் தற்போது செயல்படுத்தப்படுகிறது. அதேநேரம் மத்திய அரசு வழங்கும் திட்டமான “தேசிய நதிகள் பாதுகாப்புத் திட்டம்” மாநிலங்களின் முயற்சிகளுக்கு ஆதரவாக செயல்படுத்தப்படுகிறது. தேசிய நதிகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் இதுவரை, 17 மாநிலங்களில் 57 ஆறுகளில் தூய்மைப்பணிக்கு ரூ.8931.49 கோடி அனுமதிக்கப்பட்டு உள்ளது.
இவ்வாறு பதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.