கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோவில் கந்தசஷ்டி திருவிழாவில் நேற்று சூரசம்ஹாரம் கோலாகலமாக நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டம், கழுகுமலை கழுகாசலமூர்த்தி குடவரை கோவிலில் கடந்த 22-ஆம் தேதி காப்பு கட்டுதலுடன் கந்தசஷ்டி திருவிழா தொடங்கியது. விழா நாட்களில் தினமும் காலை, மாலையில் முருகப்பெருமான் வள்ளி, தெய்வானையுடன் பல்வேறு வாகனங்களில் வீதியுலா சென்று பக்தர்களுக்கு அருள் பாலித்தார். நேற்று முன்தினம் சூரபத்மனின் தம்பியான தாரகாசூரனை சுவாமி வதம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது.
நேற்று திருவிழாவின் உச்ச நிகழ்வான சூரசம்ஹாரத்தயொட்டி நேற்று அதிகாலை 5 மணியளவில் கோவில் நடை திறக்கப்பட்டது. காலை 6 மணியளவில் திருவனந்தல் பூஜை, விளா பூஜை மற்றும் காலசந்தி பூஜைகள் நடந்தது. காலை 7 மணியளவில் சுவாமிக்கு சிறப்பு அபிஷைகம், அலங்காரம் தீபாராதனை நடைபெற்றது
மதியம் 12 மணிக்கு கோவிலில் சண்முகர் அர்ச்சனை வழிபாடு நடைபெற்றது. மதியம் 1 மணியளவில் கழுகுமலை பெரியவன் பத்திர எழுத்தகம் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. அன்னதானத்தை கழுகுமலை பேரூராட்சி மன்றத் துணைத் தலைவர் சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். மாலை 5 மணியளவில் சுவாமி வீரவேல் ஏந்தி வெள்ளி மயில் வாகனத்தில் எழுந்தருளி போர்க்களத்தில் எழுந்தருளினார். மாலை 6 மணியளவில் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து சுவாமிக்கு சிறப்பு தீபாராதனை நடந்தது. இதில் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
நாளை திருக்கல்யாணம்
இரவு 7 மணியளவில் கோவில் சீர்பாதம் தாங்கிகள் சார்பில் முருகப் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது. இன்று (செவ்வாய்க்கிழமை) இரவு 7 மணியளவில் சுவாமி வள்ளி தெய்வானையுடன் வசந்த மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். நாளை(புதன்கிழமை) இரவு 7 மணியளவில் திருக்கல்யாணம் நிகழ்ச்சியும், வரும் 31 ம் தேதி பட்டின் பிரவேசம் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. அடுத்த மாதம் (நவம்பர்) 1-ஆம் தேதி இரவு 7 மணிக்கு மஞ்சள் நீராட்டு விழாவுடன் கந்த சஷ்டி விழா நிறைவு பெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி கார்த்தீஸ்வரன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.
கோவில்பட்டி செண்பகவல்லியம்மன்
கோவில்பட்டி செண்பகவல்லியம்மன் உடனுறை பூவனநாத சுவாமி கோவிலில் உள்ள சுப்பிரமணிய சுவாமி சன்னதியில் கந்தசஷ்டி விழாவில் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நேற்று நடைபெற்றது. மாலை 5 மணிக்கு கோவிலில் இருந்து சுப்பிரமணிய சுவாமி அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் திருவீதி உலா சென்று போர்க்களத்தை அடைந்தார். இரவு 7 மணிக்கு சூரசம்ஹாரம் தொடங்கியது. கஜமுகன், சிங்க முகன், தாரகாசூரன் ஆகியோரை வதம் செய்த பின்னர் கடைசியாக சுவாமி, சூரபத்மனை வதம் செய்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு “வெற்றி வேல், வீர வேல்” என கோஷங்கள் எழுப்பி வழிபட்டனர். விழாவில், இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை 6 மணிக்கு திருக்கல்யாணம் நடைபெறுகிறது.
சொர்ணமலை கதிர்வேல் முருகன் கோவில்
இதேபோன்று சொர்ணமலை கதிர்வேல் முருகன் கோவிலில் கந்த சஷ்டி விழா கடந்த 22-ஆம் தேதி தொடங்கி நடந்து வருகிறது. தினமும் காலை 8 மணி முதல் 10 மணி வரையும், மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரை மூலவர் கதிர்வேல் முருகனுக்கு லட்சார்ச்சனை நடக்கிறது. விழாவின் 6-வது நாளான நேற்று காலை 10.30 மணிக்கு கோவில் சஷ்டி மண்டபத்தில் உற்சவர் கார்த்திகேயர், வள்ளி தெய்வானைக்கு சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் அலங்கார தீபாராதனை நடந்தது.
இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். மேலும், தென்காசி மாவட்டம் ஊர்மேல் அழகியான் கிராமத்திலிருந்து கடந்த வெள்ளிக்கிழமை புறப்பட்ட பாதயாத்திரை பக்தர்கள் நேற்று காலை கோவிலை வந்தடைந்தனர். அவர்கள் நாளை (புதன்கிழமை) வரை கோவிலில் தங்கியிருந்து வழிபாடு செய்கின்றனர்.


