திருச்செந்தூரில் கந்தசஷ்டி விழாக்காலத்தில் உணவு பாதுகாப்பு உரிமமின்றி தற்காலிக உணவுக் கடைகள் இயங்கினால் கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் கி.செந்தில்ராஜ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கந்தசஷ்டி விழாக் காலத்தின் போது திருச்செந்தூரில் தற்காலிக உணவுக் கடைகள் அதிகரிக்கவும், அன்னதானங்கள் அதிகளவில் நடைபெறவும் வாய்ப்புள்ளது. ஆனால், அவையாவும் உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டம், 2006-ன் கீழ் உணவு பாதுகாப்பு உரிமம் பெற்றும், உரிய விதிமுறைகளைப் பின்பற்றி உணவுப் பொருட்களின் தரம் மற்றும் பாதுகாப்பினை உணவு வணிகர்கள் உறுதி செய்திடவும் வேண்டும் என அறிவுறுத்துவதுடன், சட்ட விதிமுறைகளைப் பின்பற்ற தவறினால் கடும் சட்ட நடவடிக்கைக்கு உள்ளாக நேரிடும் எனவும் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ், எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: திருச்செந்தூர் அருள்மிகு சுப்ரமணியசுவாமி திருக்கோவில் கந்தசஷ்டி விழாவின் போது, தற்காலிக உணவுக் கடைகள் அதிக அளவில் தோன்றவும், அன்னதானங்கள் அதிக அளவில் நடைபெறவும் வாய்ப்புள்ளது. எனவே, தற்காலிக மற்றும் நிரந்த உணவுக் கடைகள், ஹோட்டல்கள், ரெஸ்டாரண்டகள் மற்றும் அன்னதானங்கள் நடத்துபவர்கள் பின்வரும் உணவு பாதுகாப்பு நிபந்தனைகளைப் பின்பற்றி தரமான மற்றும் பாதுகாப்பான உணவு நுகர்வோரைச் சென்றடைவதை உறுதி செய்ய வேண்டியது கட்டாயமாகும்.
1. அன்னதானங்கள் மற்றும் தற்காலிக உணவுக் கடைகள் உள்ளிட்ட அனைத்து வகையான உணவு வணிகர்களும் உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டம் 2006-ன் கீழ் தங்களது வணிகத்திற்கு உரிமம் பெற்றுக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இதற்கான இணையத்தளம்: https://foscos.fssai.gov.in ஆகும். உணவு பாதுகாப்பு உரிமமின்றி, அன்னதானம், தற்காலிக உணவுக் கடை உள்ளிட்ட உணவு வணிகம் நடத்துவது என்பது, மேற்கூறிய சட்டத்தின் பிரிவு 63-ன் கீழ் தண்டனைக்குரியதாகும்.
2. சாப்பாடு போன்ற உடனே உண்ணக்கூடிய உணவு வகைகளை, உணவு பாதுகாப்பு உரிமம் பெற்ற தரமான மூலப்பொருட்களைக் கொண்டு சுகாதாரமான முறையில் தயாரித்து, பாதுகாப்பான உணவுப் பொருட்களாக மக்களுக்கு வழங்க வேண்டும்.
3. உணவு தயாரிப்பில் தரம் குறித்து சந்தேகத்திற்கிடமாக உள்ள மூல உணவுப் பொருட்களையோ, அனுமதிக்கப்பட்ட செயற்கை நிறமிகளை அனுமதிக்கப்பட்ட அளவிற்கு அதிகமாகவோ உபயோகிக்கக் கூடாது.
4. ஒருமுறைப் பயன்படுத்தி ஆறவைத்த சமையல் எண்ணெயை, மறுபடியும் சூடுபடுத்தி பயன்படுத்தக் கூடாது. மேலும், எண்ணெய் கொதிநிலையில் இருக்கும் பொழுது, புதிய சமையல் எண்ணெயை அதனுடன் கலக்கக்கூடாது. ஒருமுறைப் பயன்படுத்தி ஆறிய நிலையில் உள்ள சமையல் எண்ணெயை பயோ-டீசல் தயாரிப்பிற்கு FSSAI-ல் அங்கீகரிக்கப்பட்ட சேகரிப்பு நிறுவனத்திடம் ஒப்படைத்து, அதற்கு உரிய விலையைப் பெற்றுக்கொள்ளலாம்.
5. பேக்கிங் செய்யப்பட்ட உணவு பொருட்களுக்கு, விபரச்சீட்டு இடும்போது அதில், தயாரிப்பாளரின் முழு முகவரி, உணவு பொருளின் பெயர், தயாரிப்பு (அ) பேக்கிங் செய்யப்பட்ட தேதி, சிறந்த பயன்பாட்டு காலம் (காலவதியாகும் காலம்) சைவ மற்றும் அசைவ குறியீடு, உள்ளீட்டுப் பொருட்கள், ஊட்டச்சத்து விபரம், FSSAI உரிமம் ஆகியனவற்றை அவசியம் குறிப்பிட வேண்டும்.
6. காலாவதியான பிஸ்கட், குளிர்பானங்கள் மற்றும் தண்ணீர் பாட்டில்கள் போன்ற பொட்டலமிடப்பட்ட உணவுப் பொருட்களை விற்பனை செய்யக்கூடாது
7. உணவு பொருட்களை ஈக்கள், பூச்சிகள் மொய்க்காவண்ணம் மூடி வைத்தும், கிருமி தொற்று ஏற்படாத சுகாதாரமான சூழலில் வைத்தும் பொது மக்களுக்கு விற்பனை செய்திடல் வேண்டும்.
8. உணவகங்களில் உள்ள பணியாளர்களுக்கு, தொற்றுநோய்த் தாக்கமற்றவர் என்பதற்கான ஆதாரம் வைத்திருக்க வேண்டும். உணவகங்களில் பணியாற்றும் பணியாளர்கள் தலைத்தொப்பி, கையுறை, ஏப்ரன் உள்ளிட்ட பாதுகாப்பு கவசங்கள் அணிந்திருக்க வேண்டும்.
9. அனைத்துப் பணியாளர்களும் கொரணா தடுப்பூசி மற்றும் டை/பாய்டு தடுப்பூசி ஆகியவற்றை அவசியம் செலுத்தியிருக்க வேண்டும்.
10. டைனிங் டேபிளை சுத்தம் செய்யும் நபர்கள் சாப்பாடு பரிமாறக்கூடாது.
11. உணவு பாதுகாப்பு துறையில் உரிமம்/பதிவு பெற்ற நிறுவனங்களில் அல்லது அன்னதானங்களில் மட்டுமே பொதுமக்கள் உணவு உண்ணவும் அல்லது உணவுப் பொட்டலங்களை வாங்கவும் வேண்டும் எனவும், பேக்கிங் செய்யப்பட்ட பொருட்களானது, உண்ணத் தகுந்த காலத்திற்குள் இருந்து, போதிய விபரச்சீட்டு இருந்தால் மட்டுமே வாங்கி உபயோகிக்குமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும், இது தொடர்பான புகார்கள் ஏதும் இருப்பின், தூத்துக்குடி மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை அலுவலகத்திற்கு 0461-2900669 அல்லது 9444042322 என்ற மாநில உணவு பாதுகாப்புத் துறை ஆணையர் அலுவலகக் கட்செவி எண்ணிற்கு புகார் தெரிவிக்கலாம்.
12. வணிகர்களும் அன்னதானங்கள் நடத்துபவர்களும் சட்ட நெறிமுறைகளைப் பின்பற்ற தவறினால், மேற்கூறிய சட்டத்தின் கீழ் பறிமுதல், வியாபாரம் நிறுத்தம், வருவாய் அலுவலரிடத்தில் அல்லது நீதிமன்றத்தில் வழக்கு போன்ற கடும் சட்ட நடவடிக்கைகளுக்கு உள்ளாக நேரிடும் என்றும் கடுமையாக எச்சரிக்கப்படுகின்றது.


