தூத்துக்குடி அருகே செப்டிக் டேங்கில் தவறி விழுந்த நாய், மற்றும் அதன் 4 குட்டிகளை தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக மீட்டனர்.
தூத்துக்குடி மாவட்டம், புதுக்கோட்டை வஉசி நகரில் புதியதாக கட்டப்பட்டு வரும் வீட்டின் செப்டிக் டேங்கில் நாய் தவறி விழுந்த விட்டதாக வீட்டின் உரிமையாளர் சிப்காட் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் தீயணைப்பு நிலைய அலுவலர் கார்த்திகேயன் தலைமையில் வீரர்கள் விரைந்து சென்றனர்.
அங்கு மூடி போடப்படாத செப்டிங் டேங்கில் நாய் மற்றும் குட்டிகளின் சத்தம் கேட்டதை கண்டு, மிகவும் குறுகலான ஓட்டைப் பகுதியில் தீயணைப்பு வீரர் சக்திவேல் உள்ளே இறங்கி கயிறுகள் மூலம் முடிச்சுகள் போட்டு வெகு நேரமாக போராடி நாய் மற்றும் 4 குட்டிகளையும் மீட்டு மேலே கொண்டு வந்தார். பின்னர் தீயணைப்பு வீரர்கள் நாயையும் அதன் 4 குட்டிகளையும் பாதுகாப்பான இடத்தில் கொண்டு வைத்தனர். மேலும், செப்டிங் டேங்கில் மூடி போடுமாறும் வீட்டு உரிமையாளருக்கு அறிவுரை வழங்கினர்.


