காயல்பட்டினத்தில் துணை குடியரசுத் தலைவர் வேட்பாளரை வாழ்த்தி வைக்கப்பட்டிருந்த பேனரை கிழித்த மர்ம நபர்களை கைது செய்ய வேண்டும் என்று பாஜகவினர் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தூத்துக்குடி மாவட்டம், காயல்பட்டினம் மெயின் பஜார் சந்திப்பில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் துணை குடிரசுத் தலைவர் பதவிக்கு போட்டியிடும் சி.பி.ராதாகிருஷ்ணனை பாராட்டி ஒன்றிய பாஜக சார்பில், பேனர் வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் நேற்று அதிகாலை இந்த பேனரை மர்ம நபர்கள் கிழித்துவிட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் தூத்துக்குடி மாவட்ட பா.ஜனதா தலைவர் சித்ரங்கதன், மாவட்டத் துணைத் தலைவர் நவமணிகண்டன், பொதுச் செயலாளர் கனல் ஆறுமுகம், மாநில வர்த்தக அணி தலைவர் ராஜ கண்ணன், ஆறுமுகநேரி, காயல்பட்டினம் நகர பா.ஜனதாவினர் அங்கு திரண்டனர்.
மேலும் இதுகுறித்து ஆறுமுகநேரி போலீசாருக்கு தகவல் தெரிவித்ததோடு, மறியலில் ஈடுபடப்போவதாகவும் கூறினர். இதனால் சம்பவ இடத்திற்கு ஆறுமுகநேரி போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் தங்கராஜ், ஆத்தூர் பிரபாகரன், ஆறுமுகநேரி சப்-இன்ஸ்பெக்டர் வாசுதேவன் ஆகியோர் தலைமையில் 20-க்கும் மேற்பட்ட போலீசார் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது, பேனரை கிழித்த மர்ம நபர்களை இப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகள் மூலம் உடனடியாக கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்தனர். இல்லையென்றால் பல்வேறு போராட்டங்கள் நடத்தப்படும் என தெரிவித்தனர். இதையடுத்து திருச்செந்தூர் போலீஸ் துணை சூப்பிரண்டு மகேஷ்குமார் விரைந்து வந்து பா.ஜ.க நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
உடனடியாக விசாரணை நடத்தி குற்றவாளிகள் கண்டுபிடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார். மேலும் அதே இடத்தில் மீண்டும் அதே வாசகங்கள் கொண்ட பேனர் வைக்கப்பட்டது. இதையடுத்து பா.ஜனதாவினர் அங்கிருந்து கலைந்து சென்றனர். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறனர். பா.ஜனதா பேனர் கிழிக்கப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


