ஆத்தூர் அருகே மனைவியுடன் ஏற்பட்ட குடும்பத் தகராறில் வாட்ஸ் அப்பில் மெசேஜ் அனுப்பி விட்டு வாலிபர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தூத்துக்குடி மாவட்டம், ஆத்தூர் அருகே முக்காணி, ஜெயராமச் சந்திரபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராகவன் மகன் காசி (38). இவரது மனைவி சுபா. இந்த தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளனர். காசி மது போதையில் அடிக்கடி வீட்டிற்கு வந்துள்ளார். இதனை மனைவி கண்டித்ததால் குடும்பத் தகராறு ஏற்பட்டுள்ளது.
மேலும், அடிக்கடி தான் தற்கொலை செய்து கொள்ளப் போவதாக கூறினாராாம். இதுபோல் நேற்று இரவும், அவர் குடிபோதையில் தான் சாகப் போவதாக மனைவி மற்றும் அவரது உறவினர்களுக்கு வாட்ஸ்அப் மூலம் வாய்ஸ் மெசேஜ் அனுப்பிவிட்டு அங்கு தடுப்பனை அருகில் புளியமரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த ஆத்தூர் காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று அவரது உடலை மீட்டு பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது சம்பந்தமாக வழக்குப் பதிந்து, விசாரணை நடத்தி வருகிறார்கள்.


