தூத்துக்குடி அருகே கோவில் சாமக்கொடை விழாவில் வேட்டைக்குச் சென்ற சாமியாடி கிணற்றில் விழுந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகேயுள்ள எல்லை நாயக்கன்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள கருப்பசாமி கோவிலில் நேற்று கொடை விழா நடைபெற்றது. நேற்று இரவு 1.30 மணி அளவில் சாமக்கொடை நடைபெற்றது. அப்போது சாமியாடி தெய்வச் செயல்புரத்தைச் சேர்ந்த வேல் மகன் முருகன் (65) என்பவர் வேட்டைக்குச் சென்றுள்ளார். சுமார் 2 மணி நேரமாகியும் அவர் திரும்பி வரவில்லை. இதையடுத்து அப்பகுதி மக்கள் அவரை தேடி காட்டுப் பகுதிக்குச் சென்றனர்.
அப்போது அங்குள்ள கிணற்றில் சாமியாடி விழுந்து உயிரிழந்தது தெரியவந்தது. இதுகுறித்து புதுக்கோட்டை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து இன்ஸ்பெக்டர் ரமேஷ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று முருகன் சடலத்தைக் கைப்பற்றி பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கோவில் கொடை விழாவில் சாமியாடி கிணற்றில் விழுந்து உயிரிழந்த சம்பவம் அந்த கிராமத்தில் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.


