கயத்தாறு அருகே நூற்றாண்டு காலப் பொதுப்பாதையை ரயில்வே நிர்வாகம் திடீரென இரும்புவேலி அமைத்து மூடியுள்ளது. இதைக் கண்டித்து ஒட்டுமொத்தக் கிராமத்தினரும் திரண்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பும் பதற்றமும் நிலவி வருகிறது.
தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே உள்ள கடம்பூர் பேரூராட்சி கோடாங்கால் பகுதிகளில் சுமார் 430-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இப்பகுதி மக்கள் சுமார் 5,000 ஏக்கருக்கும் அதிகமான நஞ்சை நிலங்களிலும், 7,000 ஏக்கர் புஞ்சை நிலங்களிலும் மானாவாரி விவசாயம் செய்து வருகின்றனர்.
இங்குள்ள 80 சதவீத மக்கள் விவசாயத்தையே நம்பி வாழ்ந்து வரும் நிலையில், தங்களது விளைநிலங்களுக்குச் செல்லவும், வெளியூர்களுக்குப் பயணிக்கவும் கடந்த நூறு ஆண்டுகளுக்கும் மேலாக இப்பகுதியில் உள்ள ரயில்வே தண்டவாளத்தைக் கடந்து செல்லும் பாதையையே பொதுமக்கள், டிராக்டர்கள் மற்றும் அறுவடை எந்திரங்களுடன் பயன்படுத்தி வந்தனர்.
இதனிடையே, கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இப்பகுதியில் ரயில்வே நிர்வாகம் சார்பில் சுரங்கப்பாதை ஒன்று அமைக்கப்பட்டது. ஆனால், அந்தச் சுரங்கப்பாதையின் அருகே குளம் மற்றும் ஊரணி அமைந்துள்ளதால், வருடத்தில் 8 மாதங்கள் சுரங்கப்பாதைக்குள் 10 அடி முதல் 12 அடி உயரத்திற்குத் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் மற்றும் பொதுமக்கள் வாகனங்களுடன் இந்தச் சுரங்கப்பாதையைப் பயன்படுத்த முடியாத அவல நிலை நீடித்து வந்தது.
சுரங்கப்பாதையில் தண்ணீர் தேங்குவதைக் கண்டித்துக் கடந்த காலங்களில் பொதுமக்கள் நடத்திய தொடர் போராட்டங்கள் மற்றும் மாவட்ட ஆட்சியர், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களிடம் அளித்த மனுக்களின் பேரில், ரயில்வே மண்டல மேலாளர் ஒப்புதலுடன் தண்டவாளத்தின் அருகே ஒரு கிலோமீட்டர் தூரத்திற்கு தற்காலிக மெட்டல் சாலை அமைக்கப்பட்டது. இதன் வழியாகவே லாரி, கார் மற்றும் இருசக்கர வாகனங்கள் சென்று வந்தன.
இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு ரயில்வே நிர்வாகத்தினர் எவ்வித முன்னறிவிப்புமின்றி அந்த மெட்டல் சாலையின் இருபுறமும் ஆழமான பள்ளங்களைத் தோண்டி, பழைய தண்டவாள இரும்புக் கம்பிகளைக் கொண்டு சாலையை முற்றிலுமாக அடைத்துள்ளனர். மேலும், இருசக்கர வாகனங்கள் கூடச் செல்ல முடியாதவாறு இரும்பு முள்வேலிகளையும் அமைத்துள்ளதால், கிராம மக்கள் வெளியுலகத் தொடர்பின்றித் தவிக்கும் அவல நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
ரயில்வேயின் இந்த அதிரடி நடவடிக்கையைக் கண்டித்துக் கோடாங்கால் கிராமத்தைச் சேர்ந்த ஆண்களும் பெண்களும் ஊரின் பொது இடத்தில் கம்மாவர் சங்கத் தலைவர் கனகராஜ் தலைமையில் அவசரத் தர்ணா போராட்டத்தில் குதித்தனர். இப்போராட்டத்தில் சென்னை பல்கலைக்கழகக் குற்றவியல் துறைப் பேராசிரியர் திலகராஜன் கலந்துகொண்டு பொதுமக்களின் கோரிக்கைக்கு ஆதரவு தெரிவித்தார்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கடம்பூர் காவல் நிலையச் சார்பு ஆய்வாளர் ரவிச்சந்திரன், போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தினார். ரயில்வே மற்றும் மாவட்ட நிர்வாகத் துறை மூலம் இப்பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காண ஏற்பாடு செய்வதாக அவர் உறுதி அளித்தார்.
இருப்பினும், தங்களது வாழ்வாதாரப் பாதை உடனடியாகத் திறக்கப்படாவிட்டால், வரும் ஜூன் 15-ஆம் தேதி கோடாங்கால், கோடாங்கால் காலனி, கொல்லங்கிணறு, தங்கம்மாள்புரம் உள்படச் சுற்றியுள்ள பத்துக்கும் மேற்பட்ட கிராமப் பொதுமக்களை ஒட்டுமொத்தமாகத் திரட்டி, கடம்பூர் பகுதியில் பிரம்மாண்ட ரயில் மறியல் போராட்டம் நடத்தப்போவதாகக் கிராம மக்கள் ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றி அறிவித்துள்ளனர். இதனால் மாவட்ட நிர்வாகமும் ரயில்வே துறையும் உடனடியாகத் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


