
செய்துங்கநல்லூரில் அரசு நூலகத்திற்கு புதிய கட்டிடம் கனிமொழி எம்.பி பாராளுமன்ற உறுப்பினர் உள்ளூர் வளர்ச்சி திட்டத்தின் கீழ் 15 லட்சம் செலவில் புதிய கட்டிடம் கட்டி திறப்பு விழா நடந்தது. மாவட்ட ஆட்சித்தலைவர் இளம்பகவத் தலைமை வகித்தார்.தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி, உதவி கலெக்டர் ஐஸ்வர்யா, மாவட்ட நூலகர் மீனாட்சி சுந்தரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு வரவேற்றார். புதிய கட்டிடத்தினை திறந்துவைத்து, குத்து விளக்கு ஏற்றி, மரக்கன்று நட்டு கனிமொழி எம்.பி சிறப்புரையாற்றினார்.
அவர் பேசும் போது, எனது பாராளுமன்ற உறுப்பினர் நிதி உதவியில் 15 லட்சம் செலவில் புதிய நூலக கட்டிடம் கட்டி முடித்து திறந்துள்ளோம். அருகில் டிஜிட்டல் நூலகம் உருவாக்க ஒரு கட்டிடம் கட்டி வருகிறோம். பழைய கட்டிடத்தினை வாசகர் வட்டத்தினர் வேண்டுகோளுக்கு இணங்கி இலவச அரசு தேர்வு பயிற்சி மையம் அமைக்க ஏற்பாடு செய்யப்படும் என்று பேசினார். நிகழ்ச்சியில் புதிய நூலக புரவலராக சேர்ந்த வட்டார வளர்ச்சி அலுவலர் பழனிச்சாமி, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கன்னையா பாண்டியன், உதவி காவல் ஆய்வாளர் பெபின் செல்வ பிரிட்டோ, சார்பதிவாளர் கூட்டுறவு (ஓய்வு) திருச்செல்வம், பரமசிவன், தோணி ஹாலிப் உசேன், பஷிர் இம்ரான் ஆகியோருக்கு கனிமொழி எம்.பி. மரக்கன்று மற்றும் நினைவு பரிசு வழங்கினார். கருங்குளம் ஒன்றிய ஆணையாளர் ஜவகர், வட்டார வளர்ச்சி அலுவலர் பழனிசாமி, நூல் சரி பார்பு அலுவலர் சங்கரன், வாசகர் வட்ட தலைவர் திருமலை நம்பி, நூலகர் சம்சூதின், ஊராட்சி செயலர் சங்கரபாண்டியன், கருங்குளம் தெற்கு மாவட்ட செயலாளர் இசக்கி பாண்டியன், தோணி அப்துல் காதர், முத்துசாமி, வாசகர் வட்ட உறுப்பினர் கோபாலகிருஷ்ணன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
செய்துங்கநல்லூர் சிவன் கோயில் அறங்காவலர் குருமாரியப்பன், கோயில் கும்பாபிசேக அழைப்பிதழை கொடுத்து, கோயிலுக்கு செல்லும் வழியில் உள்ள பாலத்தின் வேலை யை ஆரம்பித்து விட்டார்கள். அந்த வேலையை கும்பாபிசேகத்துக்கு முன்பு முடித்து தர வேண்டினார். பாலக்காடு எக்ஸ்பிரஸ் திருச்செந்தூர் & திருநெல்வேலி இடையே உள்ள 10 ரயில் நிலையத்தில் 8 ரயில் நிலையத்தில் நின்று செல்கிறது. செய்துங்கநல்லூர் தாதன்குளம் ரயில் நிலையத்தில் மட்டும் நின்று செல்லவில்லை. எனவே இந்த இரு நிலையத்திலும் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று செய்துங்கநல்லூர் மக்கள் சார்பில் எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு கோரிக்கை வைத்தார். செய்துங்கநல்லூர் பஸ் நிலையத்தில் கழிவறை வசதி செய்த தரவேண்டும் என்று வேம்பு துரை கோரிக்கை வைத்தார்.
எழுத்தாளர் காமராசு செல்வன், தூத்துக்குடி மாவட்டத்தில 2023 டிசம்பரில் நடந்த மழை வெள்ளம் குறித்து எழுதிய “மாரி எனும் மழை வெள்ளம்” நூலை கனிமொழி எம்.பியிடம் வழங்கினார்.