தூத்துக்குடி மாவட்டம், நாசரேத் அருகே உள்ள கொம்பன்குளத்தைச் சேர்ந்தவர் நயினார் மகன் செந்தாமரைக்கண்ணன்(56). இவர் ஸ்ரீவைகுண்டம் ரயில்வே நிலையத்தில் சூப்பிரண்டாக பணியாற்றி வருகிறார். பணி காரணமாக அவர் திருநெல்வேலி கே.டி.சி நகரில் குடும்பத்துடன் இருந்து வருகிறார்.
கடந்த 16ம் தேதி பணி முடித்து விட்டு கருங்குளம் அருகே உள்ள புளியங்குளத்தின் அருகே வரும் போது ஒரு கார் இவர் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் படுகாயம் அடைந்த செந்தாமரைக்கண்ணன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது தொடர்பாக செய்துங்கநல்லூர் போலிசார் சாலை விபத்து என வழக்கு பதிவு செய்து, தப்பியோடிய காரை தேடி வலை வீசி வந்தனர்.
இந்த நிலையில் கொம்பன்குளத்தைச் சேர்ந்த பாஸ்கர் என்பவருக்கும் செந்தாமரைக்கண்ணனுக்கும் இடப்பிரச்சனை இருந்து வந்துள்ளது. இதற்கிடையில் பாஸ்கரனின் மருமகன் சாம்ராட் என்பவர் கோவா சென்ற போது விபத்தில் உயிரிழந்துள்ளார். இதற்காக பாஸ்கர் மற்றும் அவரது நண்பர்கள் தங்களது போனில் கண்ணீர் அஞ்சலி போஸ்டர் வைத்துள்ளனர். அதற்கு பதில் அளித்த செந்தாமரைக்கண்ணன் இது கடவுள் கொடுத்த தண்டனை என்று பதில் அனுப்பியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பாஸ்கர் நண்பர்கள் வல்லநாடு கந்தகுமார், வல்லநாடு மகேஷ் பாபு, மார்த்தாண்டம், ஜெகன், சுடலைமணி ஆகிய 5 பேரும் சேர்ந்து செந்தாமரைக்கண்ணணை கார் ஏற்றி கொலை செய்தது தெரிய வந்துள்ளது.
இது தொடர்பாக செய்துங்கநல்லூர் போலிசார் மகேஸ்பாபு மற்றும் சுடலைமணி ஆகிய 2 பேரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கொலை செய்ய பயன்படுத்தப்பட்ட காரை போலிசார் கைப்பற்றினர்.