(ஆரம்ப காலத்தில் மேடை நாடகம் எழுதி இயககுவதிலும், நடிப்பதிலும் ஆர்வம். தொடர்ந்து திருநெல்வேலி வானொலியில் கதையையும் , நாடகத்தினையும் எழுதி வந்தேன். தாமிரபரணியை பற்றி அறிந்த போது தான் முழுநேர வரலாற்று தகவலை திரட்டி எழுதும் எழுத்தாளராகி விட்டேன். ஆனாலும் கூட நாவல் எழுத வேண்டும் என்ற ஆசை என் மனதுக்குள் எப்போதுமே இருந்து கொண்டே இந்தது. ஆகவே தான் தற்போது முத்துக்கிளி என்ற நாவலை எழுதிக்கொண்டிருக்கிறேன். ஆனாலும் வரலாறு முக்கியம் அரசே என்று சொல்வதுபோல நெல்லை டைம்ஸ் பொருப்பாசிரியர் தம்பான் அவர்கள் கடந்த தொடரை போலவே இந்த தொடரும் தாமிரபரணி கரை வரலாற்றை சொல்வதாகவே அமையட்டும் என கூறியிருந்தார். எனவே தான் இந்த தொடர் தாமிரபரணி கரையில் உள்ள வரலாறு சம்பந்தப்பட்ட கதைகளை கூறும் தொடராக அமைத்தோம். ஆனாலும் என்னுடைய கதை சொல்லும் தாக்கத்தினால் ஆச்சி கதை சொல்வதாக இந்த தொடரை அமைத்தோம். அதிலும் நெல்லை ஆச்சி தனது நெல்லை மொழியில் கதை சொன்னால் எப்படியிருக்கும் என கற்பனை செய்தோம். ஆகவே தான் ஆச்சி சொன்ன ஆத்தோரக் கதைகள் உருவானது. இந்த கதைகளில் சில என் பாட்டி எனக்கு சொன்ன கதைகள் தான். மற்ற கதைகள் பிற்காலத்தில் நான் களப்பணிக்கும் ஒவ்வொரு ஊராக சென்றபோது எனக்கு அங்குள்ள பாட்டிகளும் தாத்தாக்களும் சொன்ன கதைகள். அதை உங்களிடம் சொல்வதில் பெருமை கொள்கிறேன். இந்த தொடருக்கு அருமையான படம் வரைந்து கொடுப்பதாக நண்பர் ஓவியர் வள்ளி நாயகம் ஒப்புதல் அளித்ததோடு மட்டுமல்லாமல் முதல் படத்தினை வரைந்தும் தந்து விட்டார். தொடர்ந்து வாரம் தோறும் படம் தருவதற்கு ஆயத்தமாகி விட்டார். எனவே இந்ததொடர் மிகச்சிறப்பாக அமையும் என நம்புகிறேன். தொடர்ந்து ஆதரவு தரும் நெல்லை டைம்ஸ் வாசகர்களுக்கும், நிறுவனர் முன்னாள் எம்.எல்.ஏ மாலை ராஜா அவர்களுக்கும், பொறுப்பாசிரியர் தம்பான் அவர்களுக்கும், ஆசிரியர் குழுவிற்கும் மிக்க நன்றி – எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு)
தொடர்ந்து ஆச்சி சொன்ன ஆத்தோரக கதையை கேட்போம்).
“ஏலே. ராசுக்குட்டி”
பார்வதி ஆச்சியின் குரல் கேட்டு ஓடோடி வந்தான் ராசுக்குட்டி.
“என்ன ஆச்சி”.
“அங்க என்னல பண்ணிக்கிட்டு இருக்க”
“கோலிக்கா விளையாடுதேன்”.
“இங்க வாய்யா. ஆச்சிக்கு குறுக்கு வலிக்கு கொஞ்சம் தடவி விடுதீயா”.
“போ ஆச்சி. உனக்கு வேறே ஜோலி கிடையாது”.
எரிச்சலுடன் ராசுக்குட்டி திரும்பினான். எப்போதும் சுறுசுறுப்பாய் இருப்பவன்.ஓட்டமும் நடையுமாய் திரிவான்.
“மாச்ச பாடதலே. நல்லா இருப்ப. புல் அறுக்கும் போது குறுக்கு பிடிச்சிக்கிட்டு கொஞ்சம் தடவி விடுய்யா”.
ஆச்சி. பார்வதி ஆச்சி. நல்ல கறுமையான நிறம். காதில் தங்க பாம்படம். நரைத்தும் நரையாமலும் இருக்கும் தலை முடி. மிகவும் நீளமான மூடி. கறுத்த தேகத்தில் சாக்கெட் போடமல் இருந்தாலும். ஆச்சி சேலை கட்டியிருப்பதே ஒரு அழகுதான். வயசானலும் ஆச்சியின் அழகும் அறிவும் குறைவில்லாமல் இருப்பார்.
வீட்டில் நாலு மாடு வளர்க்கிறார். தினமும் அதற்கு புல் அறுக்க வயல்காட்டுக்கு போவார். வேலையெல்லாம் முடித்து விட்டு தாமிரபரணி ஆற்றில் அப்படியே ஒரு குளியலை போடும் போதே அயிரை மீனை பிடிக்க ஆரம்பித்து விடுவார். தனது சேலை முந்தானையில் தான் மீன் பிடிப்பார். வீட்டுக்கு வரும் முன்பே ஒரு முந்தியை உடுத்தி கொண்டு மறு முந்தியை காயப்போடுவார்.
ஆயிரை மீன், அவள் மண் சட்டியில் வைத்து சமைத்தால் திங்கும் போது மிச்சரை நரநரவென்று கடித்து தின்பது போல இருக்கும் அவ்வளவு சுவை. மனமோ தெருவை தூக்கும். ஆச்சியின் சமையலுக்கும், அவள் சொல்லும் கதைக்கும் அந்த தெருவே அடிமை. அதில் ராசுக்குட்டியும் அடிமை.
ராசுக்குட்டி, 5 வகுப்பு படிக்கும் சிறுவன். பார்வதி ஆச்சியின் மகன் பிள்ளை பேரன். ஆச்சிக்கு மிகவும் பிடித்த பேரன். ஆச்சியை போல அவன் கறுப்பு இல்லை. நல்ல சிகப்பு கலர். அம்மா மாதிரி. தாத்தா பெருமாள் ஆசான் மாதிரி.
பெருமாள் ஆசான் சிவப்பு கலரில் கிள்ளினா ரத்தம் வரும் படி இருப்பார். அவரின் வெள்ளை மீசை முறுக்கிய படி இருபுறம் மிகவும் டெம்பராக இருக்கும். அவர் இரண்டு எலுமிச்சை பழத்தினை மீசை நுனியில் நிறுத்தி விடுவார். அவரை போல அவரது மீசையும் மிகவும் ஸ்டிராங். சிலம்பு சுற்றினால் அவரை யாரும் வெற்றி கொள்ள முடியாது. அந்தஅளவுக்கு சிலம்பு வரிசையில் பெயர் பெற்றவர்.
தாத்தா சிலோன் வாசி. அங்கு போயிருக்கும் போது ஒரு படம் எடுத்து இருந்தார். அந்த கறுப்பு வெள்ளை படத்திலேயே தாத்தா மிகவும் மிடுக்காக இருக்கும் காட்சியும், அவரது மீசையும், போட்டிருக்கும் கை இல்லா சட்டையும், தோளில் போட்டிருக்கும் நேரியல் துண்டும் அவரை மைனர் போலவே காட்டும். கறுப்பு வெள்ளையிலேயே அவர் சினிமா கதாநாயகன் போல இருப்பார்.
ஆச்சியும் தாத்தாவும் திமுக போல கறுப்பு சிவப்பு கலர். இரண்டு பேருக்கும் எப்போது சண்டைத்தான்.
“எழவெடுத்த மனுசனை எங்க அய்யன் என் தலையில கட்டிட்டு போயிட்டானே” என ஆச்சி அடிக்கடி அங்கலாய்த்து கொள்வார்.
தாத்தாவுக்கு அது எல்லாம் கவலையில்லை.
எப்போதும் ஜாலிதான்.
அந்த காலத்தில் மிகவும் பிரபலமாய் இருந்த “உச்சிவகுந்தெடுத்து பிச்சி பூ வச்ச கிளி” என்ற பாடலை மிகவும் ரம்பியமாக பாடுவார்.
வயலுக்கு போய் விட்டு, புல் கட்டோடு வரும் ஆச்சி. இவர் மீது உள்ள கோபத்தினை புல் கட்டை கீழே போடுவதில் காட்டு வார். “எழவு மனுசனுக்கு ஏழு கழுதை வயசாவுது. பாட்டு சொகுசை பாரு”. வெவ்வெவ்வே என அழகு காட்டி விட்டு செல்வார்.
தாத்தா கோயில் திருவிழா, ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் பிடிககும். ஆச்சிககும் பிடிககும். ஆனால் தாத்தாவை பிடிக்காத காரணத்தினால் திருவிழாவில் ஆட்டம் பார்க்க ஆச்சி போக மாட்டார். ஆனால் ஊர் கதை, உலக கதை எல்லாம் ஆச்சிக்கு அத்து பிடி.
ஆனால் பேரன் ராசுக் குட்டிக்கும் ஆச்சி பார்வதிக்கும் மட்டும் நன்றாக பிடிக்கும்.
“ஆச்சி. சும்மா தடவுனா குறுக்குவலி கேட்காது. நல்லா நல்லெண்ணையை கொதிக்க வைச்சி. அப்புறம் அதை ஆரவச்சி தேய்சு விட்டா கேக்கும்” என்றான் மழலையாக.
அவனுக்கு ஆச்சிக்கு சேவகம் செய்ய மனசில்லை. விளையாட போக ஆசை.
ஆனாலும் ஆச்சி சொல்லை தட்ட இயலவிலை. காரணம் ஆச்சி தினமும் ராத்திரி சொல்லும் கதை. அது ராசுக் குட்டிக்கு ரொம்ப பிடிக்கும்.
ராத்திரி 8 மணிக்கு மேல் மொட்டை மாடியில் ஆச்சி மடியில் படுத்து கொண்டு, நிலாவை பார்த்த படியே கதை கேட்பான். இது அவனுக்கு ரொம்ப பிடிக்கும். பாட்டிக்கு உதவாட்டி கதை சொல்ல மாட்டாளே.
ஆகவே ஆச்சி குறுக்கு வலியை போக்க தடவி விட வந்தான்.
“ஆச்சி. நான் இப்போ உனக்கு தடவி விடுவனாம். நீ. எனக்கு ராத்திரி நல்ல கதை சொல்லுவீயா?”.
ஆச்சி சிரித்தார்.
“ஏலே பொசங்கெட்ட பயலே. நீ. தடவினாலும் தடவாட்டாலும் நான் கதை சொல்வேன்டே”.
சிரித்தார்.
ஆச்சிக்கும் கதை சொல்வதில் அலாதி பிரியம்.
நல்லெண்ணையை எடுத்து ஆச்சி குறுக்கில் தடவி விட்டான்.
அந்த பிஞ்சி விரல்கள் ஆச்சி குறுக்கில் பட்டு , வலி எங்கே குணமாக போகிறது. ஆனாலும் ஆச்சிக்கு ஒரு ஆனந்தம்.
சிறிதுநேரம் தடவி விட்டு விட்டு, விளையாட ஓடினான் ராசுக் குட்டி.
அங்கு ஆற்று மணலில் குழந்தைகள் எல்லாம் விளையாடிக்கொண்டே இருந்தனார்..
இவனை யாரும் சேர்ப்பதாகவே தெரியவில்லை.
சிலர் கபடி விளையாடிக்கொண்டிருந்தனர். இரண்டு புறமும் அணிக்கு தேவையானவர்கள் சரியாக இருந்த காரணத்தினால் இவனை சேர்க்க வில்லை.
குச்சி கம்பு விளையாடி கொண்டிருந்தவர்களும் இவனை கண்டு கொள்ளவில்லை.
கிலியான் தட்டு விளையாடியவர்களும் இவனை கண்டுகொள்ளவே இல்லை.
ஆச்சியை கவனிக்க வரும் முன்பு தான் விளையாடி இடையில் விட்டு விட்டு வந்த கோலிகாய் விளையாடிய குழுவை தேடினான் . அவர்களையும் காணவில்லை.
சரி வீட்டில் போய் பம்பரத்தினை எடுத்து வந்து நாமே விளையாடுவோம் என முடிவு செய்தான்.
அப்போது தான் பக்கத்து வீட்டு பாப்பாத்தியக்கா வந்தார்.
“என்னலே ராசுக்குட்டி பேக்லேண்டு மாரி முழிக்க” என்றார்.
ராசுக்குட்டிக்கு சுர் என்றுகோபம் வந்தது.
பேகலேண்டு கெட்டை வார்த்தை. பாப்பாத்தி அக்கா என்னை பார்த்து சொல்றா. என மனக்குறைப்பட்டான். சிறு கல்லை எடுத்தான். குறிபார்த்து அக்காவை தாககி விடலாம் என நினைத்தான். பெரியவள் வேண்டாம். நாம தப்பு பண்ணினா பாட்டி வாரியளால சாத்தி புடுவா என மனம் சொன்னது. எனவே கல்லை கீழே போட்டான்.
ஏற்கனவே நண்பர்கள் விளையாட்டில் சேர்க்க வில்லை. இந்த அக்கா வேற பேக்லேண்டு என்று சொல்லி விட்டாள். ராசுக்குட்டிக்கு அழுகை முட்டிக்கொண்டு வர வீட்டுக்கு ஓடியே வந்தான்.
ஆச்சி ஒரு ஆட்டை பிடித்துக்கொண்டு வயலுக்கு கிளம்பு கொண்டிருந்தாள்.
ஆச்சியை பார்த்த வுடன் அவனுக்கு ஆளுகை அதிகரிச்சது.
“ஆச்சி. ஆச்சி. என்ன பேக்லேண்டுன்னு பாப்பாத்தியக்கா சொல்லுதா.. என்னென்னு கேட்க வா ஆச்சி” என அழுதான். ஆச்சியின் சேலையை பிடித்து இழுத்தான்.
“ராஸ்கோல் படுவா இதுக்கா அழுவாவ”. என்று ஆச்சி கூறி விட்டு, “அழாத. ஆச்சி. உனக்கு நுங்கு வெட்டி வச்சிருக்கேன் தின்னு” என்றார்.
ஆளுகையை அடக்கி கொண்டான். இதற்குள் மூக்கு சளி வேறு வந்து விட்டது. இடது புறங்கையால் மூக்கில் உள்ள சளியை துடைத்தான்.
“எனக்கு ஒண்ணும் வேணாம். என்னை கெட்ட வார்த்தை சொல்லி திட்டுதா பாப்பாத்தியக்கா அவளை என்ன எதுன்னு கேளு. வா”.
சிரித்தார். “ஏலேய் உன்னை வேறெ ஏதாவது சொல்லியிருந்தா அவளை வில்லை வில்லையா நறுக்கி புடுவேன். பாத்தியா கையில பண்ணறுவா வச்சிருக்கேன்.ஆனா நல்லாத்தான் சொல்லியருக்கா”.
“பேக்லேண்டுன்னு சொன்னா நல்லதா?”
“ஆமா. தினமும் ராத்திரி தான் உனக்கு நிலாவை பாத்துகிட்டு கதை சொல்லுவேன். உனக்கு இப்பவே இங்கேயே பேக்லேண்டு கதை சொல்லுதேன். என மாட்டு தொழுவத்தில் அமர்ந்தாள். கையில் பிடித்திருந்த ஆட்டுகுட்டியை அருகில் உள்ள கல்தூணில் கட்டினாள். அதன் பின் கால் நீட்டி அமர்ந்து விட்டு, “ஏலே ராசுக்குட்டி வெத்தலை கல்லை எடுத்துட்டு வாலே” என்றாள்.
ராசுக்குட்டி ஓடிப்போய் வெத்தலை கல்லையும், வெற்றிலை குத்தும் கல் குழவியையும் எடுத்து வந்து கொடுத்தான்.
ஆச்சி, இடுப்பில் இருந்து வெற்றிலை பையை எடுத்து, கொஞ்சம் பாக்கு, வெற்றிலையை எடுத்து போட்டு இடித்து, அதை லாவகமாக எடுத்து வாயில் வைத்து மென்றாள். அதன் பின் நன்கு சிவந்த நாக்கை சுழற்றி தனது கண்களால் நாக்கு சிவந்து இருக்கிறதா என பார்த்தாள். வெற்றிலை உமிழ் நீரை இரு விரலை வாயில் வைத்து கொண்டு அதன் இடைவழியாக லாகவமாய் துப்பினாள்.
ராசுக்குட்டிக்கு அது வேடிக்கையாக இருந்தது.
திருநெல்வேலி காரர்கள் அடிக்கடி உச்சரிக்கும் பேக்லேண்டு கதையை எப்போது ஆச்சி சொல்லுவாள் என ராசுக்குட்டி காத்திருந்தான்.
நாமும் தான்.
( ஆத்தோரக்கதைகளை ஆச்சி தொடர்ந்து சொல்லுவாள்)


