தூத்துக்குடியில் இருந்து மும்பை செல்லும் பயணிகள் பயன்பெறும் வகையில் சாளுக்யா எக்ஸ்பிரஸ் நேரத்தை மாற்றி அமைக்க வேண்டும் என தூத்துக்குடி வேலவன் ஸ்டோர்ஸ் அதிபர் த.ஆனந்த் வலியுறுத்தியுள்ளார்.
தூத்துக்குடி வேலவன் ஸ்டோர்ஸ் அதிபர் த.ஆனந்த், மத்திய அமைச்சர் எல் முருகனை மரியாதை நிமித்தமாக சந்தித்தார். அப்போது அவர் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தார். அதில், திருநெல்வேலியில் இருந்து திங்கள், வியாழன், வெள்ளி ஆகிய நாட்களில் மும்பை தாதர் வரை செல்லும் சாளுக்யா எக்ஸ்பிரஸ் (11022) 15.25 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை SMVT பெங்களூரு ரயில் நிலையத்தில் சுமார் இரண்டு மணி நேரம் நிறுத்தி வைக்கபடுகிறது.
அதற்கு பதிலாக திருநெல்வேலியில் இருந்து 17.40மணிக்கு புறப்பட்டால் தூத்துக்குடியில் இருந்து மும்பை செல்லும் பயணிகள் வாஞ்சி மணியாச்சி அல்லது கோவில்பட்டி வரை மைசூர் செல்லும் ரயிலில் வந்து சாளுக்யா எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்ய முடியும்.
கேரளா வழியாக திருநெல்வேலி வரை இயக்கப்படும் வண்டி எண் 19577-19578, 20923-20924 ரயில்களை வாஞ்சி மணியாச்சி பைபாஸ் வழியாக தூத்துக்குடி வரை நீட்டிப்பு செய்து இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். திருநெல்வேலியில் ஏற்படும் நடைமேடை பற்றாக்குறை குறையும். ரயில்கள் பராமரிப்பு செய்யும் பணிகள் செய்ய மீளவிட்டான் ரயில் நிலையம் அருகே அதிகமான இடம் வசதி உள்ளதால் பராமரிப்பு செய்யும் பணிகளை மீளவிட்டான் ரயில் நிலையத்திற்கு மாற்ற வேண்டும் என வலியுறுத்தினார்.


