தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகேயுள்ள திருப்புளியங்குடி தெற்கு தெருவைச் சேர்ந்த பண்டாரம் மகன் மாரிமுத்து (30). இவருக்கு சீத்தா என்ற மனைவியும் சாமுவேல் என்ற 3 வயது மகனும் உள்ளனர். இவர் திரைப்பட இயக்குநர் மாரி செல்வராஜிடம் உதவி இயக்குநராக வேலை பார்த்து வந்தார்.
இவர் இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளிவந்த கர்ணன் படத்தில் நடிகராக அறிமுகம் ஆனார். அதைத் தொடர்ந்து மாமன்னன் மற்றும் வாழை உள்ளிட்ட படத்தில் உதவி இயக்குனராக பணி புரிந்து வந்தார். இந்த நிலையில் இவர் தனியாக கதை எழுதி படம் எடுக்க பணிகளை மேற்கொண்டு வந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் இவருக்கு சிகரெட் பிடிக்கும் பழக்கம் இருந்துள்ளது. அளவுக்கு அதிகமாக சிகெரட் பிடித்ததால் நேற்று நள்ளிரவு அவருக்கு மூச்சித்திணறல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து உறவினர்கள் அவரை ஸ்ரீவைகுண்டம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவர் உயிரிழந்தார்.
இந்த சம்பவம் குறித்து ஸ்ரீவைகுண்டம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் அன்னராஜ் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றார்.
ஸ்ரீவைகுண்டம் அருகே திரைப்பட உதவி இயக்குனர் திடீரென உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


