விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில், நடமாடும் டிஜிட்டல் எக்ஸ்ரே வாகனம் மூலம் தூய்மைப் பணியாளர்களுக்கு தீவிர காசநோய் கண்டறியும் சிறப்பு முகாம் நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்டத் தேசிய காசநோய் ஒழிப்புத் திட்டம் மற்றும் பேரிலோவன்பட்டி காசநோய் பிரிவு சார்பில், விளாத்திகுளம் பேரூராட்சியில் பணிபுரியும் தூய்மைப் பணியாளர்களுக்கு நடமாடும் டிஜிட்டல் எக்ஸ்ரே வாகனம் (MDU ACF) மூலம் தீவிர காசநோய் கண்டறியும் சிறப்பு முகாம் நடைபெற்றது.
விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் நடைபெற்ற இந்த முகாமிற்கு முன்னதாக, காசநோய் ஒழிப்பு உறுதிமொழி எடுத்துக்கொள்ளப்பட்டது. தொடர்ந்து நடைபெற்ற சிறப்பு முகாமை விளாத்திகுளம் பேரூராட்சித் தலைவர் அயன்ராஜ் மற்றும் துணைத் தலைவர் வேல்ச்சாமி ஆகியோர் தலைமை தாங்கித் தொடங்கி வைத்தனர்.
நிகழ்ச்சியில் தூய்மைப் பணியாளர்களுக்குக் காசநோய் விழிப்புணர்வுத் துண்டுப் பிரசுரங்கள் வழங்கப்பட்டன. பேரூராட்சிச் செயல் அலுவலர் சுப்பிரமணியன் முன்னிலை வகித்தார்.
இம்முகாமில் நடமாடும் மருத்துவக் குழு மருத்துவ அலுவலர் சுபலட்சுமி, வட்டாரச் சுகாதார மேற்பார்வையாளர் கற்பகம், சுகாதார ஆய்வாளர் ராஜபிரியன், பேரூராட்சி அலுவலர்கள், முதுநிலை சிகிச்சை மேற்பார்வையாளர் கணேசமூர்த்தி, சுகாதாரப் பார்வையாளர் அமுதா ஆகியோர் பங்கேற்றனர்.
மேலும், நடமாடும் மருத்துவக் குழுவினர், பேரிலோவன்பட்டி அரசு ஆரம்பச் சுகாதார நிலையத்திற்குட்பட்ட அனைத்து MLHP மற்றும் WHV பணியாளர்கள் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள் முகாமில் கலந்து கொண்டு பரிசோதனை செய்து கொண்டனர்.


