இர்பான் கான் பதான் பிறப்பு: 27 அக்டோபர் 1984) இந்தியத் துடுப்பாட்ட அணி வீரர் ஆவார். இவர் இந்திய அணிக்காக ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம், தேர்வுத் துடுப்பாட்டம், பன்னாட்டு இருபது20 ஆகிய மூன்று வடிவங்களிலும் விளையாடியுள்ளார். 2003- 2004 ஆண்டில் நடைபெற்ற பார்டர்- சுனில் காவஸ்கர் கோப்பைக்கான போட்டியில் அறிமுகம் ஆனார். ஏப்ரல் 2008 இல் இவர் கடைசியாக தேர்வுத் துடுப்பாட்டத்தில் விளையாடினார்.
துவக்கத்தில் இவர் துயல்பந்து வீசல் மற்றும் விரைவு வீச்சு போன்றவற்றால் அறியப்பட்டார். இவர் வசீம் அக்ரம் போன்றே பந்து வீசுகிறார் என்ற ஒப்பீடு இருந்தது. 2006 ஆம் ஆண்டில் கராச்சியில் பாக்கித்தான் துடுப்பாட்ட அணிக்கு எதிரான தேர்வுத் துடுப்பாட்ட போட்டியில் அறிமுகம் ஆனார். முதல்போட்டியில் முதல் ஓவரில் ஹாட்ரிக் இலக்குகள் வீழ்த்தியவர் எனும் சாதனையைப் படைத்தார். பின் இவரின் நிலையில்லாத விளையாட்டுத் திறனால் இந்திய அணியில் இவருக்கு இடம் கிடைக்கவில்லை. பின் 2007 ஐசிசி உலக இருபது20 தொடரில் இவர் இந்திய அணியில் இடம் பிடித்தார்.
இர்பான் பதான், வினோத் காம்ப்ளி மற்றும் லட்சுமண் சிவராமகிருஷ்ணன் ஆகியோர் இந்தியாஸ் லாஸ்ட் பாய்ஸ் என சசி தரூர் குறிப்பிடுகிறார்.
2004 ஆம் ஆண்டில் இந்தியத் துடுப்பாட்டக் கட்டுப்பாடு வாரியம் இவரை ஆண்டின் சிறந்த வீரராக அறிவித்தது. மேலும் 2004 ஆம் ஆண்டில் பாக்கித்தான் துடுப்பாட்ட அணிக்கு எதிரான தேர்வுத் துடுப்பாட்டம் மற்றும் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டத் தொடரை இந்திய அணி வெற்றி பெறுவதற்கு மிக முக்கியமான காரணியாக இருந்தார். ஊடகங்களால் இவர் இதியத் துடுப்பாட்ட அணியின் புளூ ஐய்ட் பாய் எனப் புகழப்பட்டார். 2004 ஆம் ஆண்டின் இறுதியில் வங்காளதேச துடுப்பாட்ட அணிக்கு எதிரான போட்டித் தொடரின் இரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் 18 இலக்குகள் எடுத்தார். ஆனால் 2005 ஆம் ஆண்டின் துவக்கத்திலிருந்து சரியான திறனை வெளிப்படுத்தத் தவறினார்.
2005 ஆம் ஆண்டில் கிறெக் சப்பல் இந்தியத் துடுப்பாட்ட அணியின் தலைமைப் பயிற்சியாளராக ஆன பின்பு பதானின் திறமையைக் கண்டறிந்தார். அதன் பின் பந்து வீச்சு மற்றும் துடுப்பாடுவது என இரண்டிலும் கவனம் செலுத்தி சகலத் துறையினராக ஆனார். டிசம்பர் 10,2005 இல் இலங்கைத் துடுப்பாட்ட அணிக்கு எதிராக புது தில்லியில் நடைபெற்ற தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் 93 ஓட்டங்கள் எடுத்தார். கிறெக் சப்பலின் தலைமையின் கீழ் சகலத் துறையராக சிறப்பாக செயல்பட்டார். மேலும் எதிரணியின் முக்கிய வீரர்களின் இலக்கினைக் கைப்பற்றினார். பன்னாட்டுத் துடுப்பாட்ட அவையின் சகலத் துறையினருக்கான தரவரிசைப் பட்டியலில் இரண்டாவது இடமும், தேர்வுத் துடுப்பாட்ட பந்து வீச்சாளர் தரவரிசையில் முதல் ஐந்து இடத்திற்குள்ளும் இடம்பிடித்தார். இதனால் துடுப்பாட்ட விமர்சகர்கள் இவரை இந்திய அணியின் முன்னாள் தலைவர் (துடுப்பாட்டம்) மற்றும் பந்து வீச்சாளர் கபில்தேவ் உடன் ஒப்பிட்டனர்.


