திருச்செந்தூர் வீரபாண்டியபட்டணம் இடையை கடற்கரை ஓரத்தில் 200 மீட்டர் நீளத்திற்கு கண்டுபிடிக்கப்பட்ட பழங்கால சுவர்& சுமார் 700 ஆண்டுகளுக்கு முன்பு சேர மன்னரால் உருவாக்கப்பட்ட துறைமுகம் இருந்த பகுதி என தகவல் தெரிய வந்துள்ளது.
திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக தொல்பொருள் ஆராய்ச்சி மைய இயக்குநர் பேராசிரியர் சுதாகர் சிவசுப்பிரமணியம் என்பவர் கடந்த 18ம் தேதி திருச்செந்தூரில் இருந்து வீரபாண்டியபட்டணம் கடற்கரை வழியாக தனது மாணவர்களுடன் கள ஆய்வு மேற்கொண்டார். அப்போது திருச்செந்தூருக்கும், வீரபாண்டிய பட்டணத்திற்கும் இடையே சுமார் 200 மீட்டரில் தூரத்துக்கு சுவர் போன்ற அமைப்பை கண்டுபிடித்தார். இந்த செய்தி பல்வேறு ஊடகங்களில் வெளிவந்தது. இவ்விடத்தினை மாவட்ட ஆட்சி தலைவர் மரு.கி.செந்தில்ராஜ் நேரிடையாக சென்று பார்வையிட்டார். இதற்கிடையில் இதுகுறித்து இந்த பகுதியில் முறையாக தொல்லியல் ஆய்வுகள் மேற்கொள்ள வேண்டும் என்ற தொல்லியல் ஆர்வலர்கள் கோரிக்கையை எழுப்பினர்.

இந்த நிலையில் இந்த செய்தியை பார்த்த திருநெல்வேலி மாவட்டம், பாவூர்சத்திரம் பகுதியைச் சேர்ந்த ஸ்டீபன் என்பவர் இதுகுறித்து வரலாற்றுத் தகவல்களை பத்திரிக்கையாளர்களுக்கு வழங்கினார்.
அந்த குறிப்பில் 500 ஆண்டுகள் பழமையான வரைபடம் உள்ளது. அந்த வரைபடத்தில் காயல்பட்டினத்திற்கும் வீரபாண்டியபட்டணத்திற்கும் இடையில் உள்ள கொம்புதுறை பற்றிய வெளியே தெரியாத தகவல் ஒன்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பகுதிகளுக்கு ஆரம்பகால பெயர் சோனாடு கொண்டான் பட்டணம். கடல் வாணிபத்துக்கு இந்த துறைமுகம் பயன்படுத்தப்பட்டுள்ளது. கிபி.1388 ஆம் ஆண்டு இந்த பகுதியை ஆண்ட உதய மார்த்தாண்டவர்மன் என்ற சேர மன்னன் இந்த சோனாடு கொண்டான் பட்டணத்திலிருந்து ஏற்றுமதியாகும் சரக்கு மதிப்பில் 100 பணத்துக்கு கால் பணம் ஜமாத் நிர்வாகியான அபுபக்கருக்கு மானியம் கொடுக்க உத்தரவிட்டுள்ளான்.
அதன்பின் இப்பகுதிக்கு வந்த போர்ச்சுகீசியர்கள் உதயமார்த்தாண்டனின் வாரிசான உன்னி கேரள வர்மனிடம் அப்பகுதியை குத்தகைக்கு எடுத்து துறைமுகமாக பயன்படுத்தினார்கள். அந்த காலத்தில் கடல் கூம்பு வடிவில் இருந்ததால் இதற்கு கூம்புத்துறை என்று பெயரிட்டார்கள். இந்த கூம்புத்துறை தான் நாளடைவில் கொம்புதுறை ஆகிவிட்டது. அந்த காலத்தில் வந்த சுனாமியால் கூம்பு வடிவம் அழிக்கப்பட்டு கொம்புத்துறை அழிந்து கல்வெட்டு மண்ணில் புதைந்து கடல் ஒரு கிலோமீட்டர் உள்வாங்கி சென்று விட்டது. இயற்கை துறைமுகமான காயல்பட்டிணம் துறைமுகம் அழிந்து கடற்கரை நகராகிவிட்டது.

ஏற்கனவே தமிழர்களின் பாரம்பரியம் மிக்க கொற்கை துறைமுகம் 2500 வருடங்களுக்கு முன்பு பிரபலமாக இருந்துள்ளது. இந்த துறைமுகம் கடல் உள்வாங்கிய பிறகு பழைய காயலுக்கும், தொடர்ந்து தூத்துக்குடிக்கும் நகர்ந்து விட்டது. இதற்கிடையில் இதே போன்ற பல துறைமுகங்கள் பழைய காயலை சுற்றியுள்ள பகுதியில் இருந்துள்ளது. அதில் கொம்புத்துறை அருகில் உள்ள துறைமுகத்தைப் பற்றிய ஸ்டீபன் என்பவர் வைத்திருக்கும் ஆவணம் ஒத்துப்போவதாக தெரிகிறது. தற்போது கடல்சார் ஆய்வு மேற்கொண்டு வரும் மாநில தொல்லியல் துறை கொம்புத்துறை பகுதியில் உள்ள இந்த பகுதியை முழுவதுமாக ஆய்வு செய்து உண்மைத் தகவலை வெளிக்கொண்டு வர வேண்டும் என்பதே அனைத்து தொல்லியல் ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.
விரைவில் இவ்விடத்தினை ஆய்வு செய்வார்கள் என தொல்லியல் ஆர்வலர்கள் நம்பிக்கையுடன் உள்ளனர்.
&&&&



