திருநெல்வேலி மாவட்டம் முக்கூடல் அருகே உள்ள சிங்கம்பாறை சேர்ந்தவர் ராசா சேவியர் மகன் மில்டன். இவர் நேற்று இரவு தூத்துக்குடியில் இருந்து தனது லோடு வேனில் மீன் ஏற்றிக்கொண்டு திருநெல்வேலியை நோக்கி வந்து கொண்டிருந்தார்.


இரவு 11 மணியளவில் வல்லநாடு துப்பாக்கி சுடுதளம் அருகே வந்து கொண்டிருந்தபோது முன்னால் சென்று கொண்டிருந்த கேஸ் டேங்கர் லாரியை முந்தி இடது புறமாக திருப்பி உள்ளார். அப்போது டேங்கர் லாரியின் முன்புறத்தில் மோதி மீன் ஏற்றி வந்த லோடு வேன் சாலையின் ஓரமாக கவிழ்ந்தது. இதில் லோடு வேனில் பின்புறமாக பயணம் செய்த கோபாலசமுத்திரம் அகதிகள் முகாமைச் சேர்ந்த லெட்சுமணன் மகன் செல்வராஜ்(62) என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் திருநெல்வேலி மாவட்டம், சிங்கம்பாறை சேர்ந்த ஆரோக்கிய ரூபன், இலந்தைகுளத்தை சேர்ந்த வர்கீஸ், திருவேங்கடநாதபுரம் பாலாஜி நகரை சேர்ந்த சந்திரன், திருவேங்கடநாதபுரத்தைச் சேர்ந்த பெரியதுரை ஆகிய ஐந்து பேர் படுகாயம் அடைந்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்தவுடன் முறப்பநாடு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, படுகாயம் அடைந்த ஐந்து பேரையும் திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் டேங்கர் லாரியை ஓட்டி வந்த புதுக்கோட்டை மாவட்டம் கீரனூரை சேர்ந்த சின்னையா மகன் சண்முகம் என்பவரை பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


