பாதிக்கப்பட்டவர்கள் நுகர்வோர் ஆணையங்களை அணுக தயங்க கூடாது என தூத்துக்குடி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணைய உறுப்பினர் ஆ.சங்கர் தெரிவித்தார்.
திருச்செந்தூர் கொம்மடிக்கோட்டை சங்கர பகவதி கல்லூரி மற்றும் எம்பவர் இந்தியா நுகர்வோர் கல்வி மற்றும் சுற்றுச்சூழல் ஆராய்ச்சி நடுவம் ஆகியவற்றின் சார்பாக நுகர்வோர் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட தூத்துக்குடி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணைய உறுப்பினர் ஆ.சங்கர் கூறியதாவது :
பாதிக்கப்பட்டவர்கள் நுகர்வோர் ஆணையங்களை அணுக தயங்க கூடாது. பொருள்கள் மற்றும் சேவைகளில் ஏற்படும் குறைபாடுகளுக்கு நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் வழியாக நிவாரணம் பெறலாம். நுகர்வோரின் நலனை பாதுகாக்க மாவட்ட அளவிலும், மாநில அளவிலும், தேசிய அளவிலும் நுகர்வோர் குறைதீர் ஆணையங்கள் செயல்படுகின்றன.
பாதிக்கப்பட்ட நுகர்வோர்கள் நுகர்வோர் குறைதீர் ஆணையங்களை அணுக தயங்கக் கூடாது. மாணவர்கள் பொருட்களை வாங்கும் போது அதன் தரம், விலை, தயாரிப்பு மற்றும் காலாவதி தேதி ஆகியவற்றை பார்த்து வாங்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். அதோடு பொருட்களையோ, சேவைகளையோ பெறும் போது அவசியம் ரசீது கேட்டுப் பெற வேண்டும். மேலும் பொதுமக்களுக்கு நுகர்வோர் விழிப்புணர்வை ஏற்படுத்த மாணவர்கள் அனைவரும் முன்வர வேண்டும் என்றும் கூறினார்.
இந்நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் அருள்ராஜ் பொன்னுதுரை தலைமை தாங்கினார். கல்லூரி குடிமக்கள் நுகர்வோர் மன்ற ஒருங்கிணைப்பாளர் முனைவர். தமயந்தி முன்னிலை வகித்தார். முன்னதாக மூன்றாமாண்டு மாணவி சரண்யா வரவேற்புரை ஆற்றினார். மூன்றாமாண்டு மாணவி லிசா ஸ்வீட்டி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். இறுதியாக மூன்றாமாண்டு மாணவி அகிலாண்டேஸ்வரி நன்றியுரை கூறினார்.


