லோன்துரை முன்வாசலை நெருங்கும் சமயம் எதிர்பாராத விதமாக தன் கையிலிருந்த குண்டுகளைத் தவற விட்டுவிட்டார். உடனே அவர் தனக்குப் பின்னால் வந்து கொண்டிருந்த முத்துசாமிப் பின்ளையிடம் தவறிவிழுந்த குண்டுகளை எடுத்து வருமாறு கூறிவிட்டு முன்வாசலை நோக்கிச் சென்று கொண்டே இருந்தார். முத்துசாமிப் பிள்ளை கீழே விழுந்த குண்டுகளை எடுப்பதற்காகக் குனிந்த சமயம் முன்வாசலுக்கு வெளியே முன்புதருக்குள் மறைந் திருந்தவர்களில் சிலர் ஓடிவந்து முத்துச்சாமிப் பிள்ளையை அடித்து உதைத்தனர். நாராயணன் பிள்ளை தன்னிடம் இருந்த கயிற்றால் முத்துசாமிப் பிள்ளையின் கைகளைப் பின் புறமாகக் கட்டினார். நாராயணன் பிள்ளையுடன் வந்தவர்கள் முத்துசாமிப் பிள்ளையை எழும்பவிடாமல் அழுத்திப் பிடித்துக் கொண்டனர். முத்துசாமிப் பின்ளைத் தாக்கப்படுவதைக் கவனிக்காமல் லோன்துரை முன்வாசலைச் சென்றடைந்தார். அதுசமயம் கல்லுக்குப் பின்னால் மறைந்திருந்த சிலர் கிழக்குப் புறமாக உள்ள முள் வேலிக்குள் ஓடி மறைந்தனர். அவர்கள் ஒளிந்ததைப் பார்த்த லோன்துரை அவர்களை விரட்டினார். தன்னிடமிருந்த சுத்தி மாட்டிய துப்பாக்கியால் கைக்கு எட்டிய தூரத்தில் பதுங்கியவர்களைக் குத்த முயன்றார். எவர்மீதும் குத்து சரியாகப் படவில்லை. பதுங்கியவர்கள் லோன்துரையை எதிர்த்துத் தாக்க முயன்றனர். அப்போது மந்திரக்கோன் கால் இடறி கீழே விழுந்தார். கீழேவிழுந்த மந்திரக்கோனை லோன்துரை மாற்றி மாற்றி குத்தினார். கைகலப்புக் கிடையே குத்தியதால் லோன்துரையால் வேகமாக குத்த முடியவில்லை.
லேசான குத்துக்காயங்கள்தான் மந்திரக்கோன் மீது விழுந்தது. லோன்துரை கடைசியாகக் குத்திய குத்து மந்திரக்கோனின் சட்டையைப் பிய்த்துக் கொண்டு தரையில் பதிந்தது. அப்போது வேலிக்குள் பதுங்கி இருந்தவர்களும் முத்துசாமிப் பிள்ளையைத் தாக்கிக் கொண்டிருந்தவர்களும் ஒட்டுமொத்தமாக வந்து லோன்துரையைத் தாக்கத் தொடங்கினர்.
காசிராஜன் தன் கையிலிருந்த கண்டக் கோடாரியால் லோன்துரையின் வலது கையில் ஓங்கி வெட்டினார். அந்த வெட்டு லோன்துரையின் வலது கை துண்டாகும் அளவிற்குப் பதிந்தது. அதேசமயம் இ.பி.தங்கவேல் தன்ளிடம் இருந்த வேல்கம்பால் லோன் துரையின் விலாப் பகுதியில் குத்தினார். அது லோன்துரையின் உடலை ஊடுகுவி மறுபுறம் வந்தது, அப்போது லோன்துரை கத்தியவாறு தரையில் சாய்ந்தார். இராஜகோபால் மந்திரக்கோனைத் தூக்கினார். அப்போது ஆளுக்கு ஆள் தங்களிமிருந்த ஆயுதங்களால் லோன்துரையின் மீது தாக்குதல் நடத்தினர். லோன்துரை சில நிமிடங்களில் பினமானார். லோன்துரை இறந்த பின்னும் சிலர் கோபம் அடங்காமல் பிணத்தை வெட்டுவதும் குத்துவதுமாக இருந்தனர், இந்தத் தாக்குதலின் போது கும்பலாகச் சென்றவர்களில் சிலருக்கும் காயம் ஏற்பட்டது. அவர்களையும், கையில் கிடைத்த துப்பாக்கி மற்றும் சில பொருட்களையும் தூக்கிக் கொண்டு கொட்டங்காடு வழியாக சித்தன்விளை பெரியநாடார் தோட்டத்திற்கு அருகேயுள்ள ஒரு காட்டிற்குச் சென்றனர். அந்த காட்டிற்குள் தங்களிடமிருந்த ஆயுதங்கள் மற்றும் உப்பளத்தில் கைப்பற்றிய ஆயுதங்கள் ஆகியவற்றைப் புதைத்து வைத்தனர்.
சித்தன்விளை பெரியநாடார் தோட்டத்திற்குச் சென்று தங்கள் மீது பட்டிருந்த இரத்தக் கறைகளையெல்லாம் கழுவி விட்டு. பெரிய நாடாரிடம் சென்று நடந்த விவரங்களையெல்லாம் கூறினர். அதற்குள் நன்றாக விடிந்து விட்டது. (அதாவது 20.09.1942 அதிகாலை) பெரியநாடார் இவர்களுக்குக் காலை உணவளித்து கையில் பணமும் கொடுத்து இங்கிருந்து தலைமறைவாகி விடுங்கள் இல்லையேல் உங்களை போலீஸ் கைது செய்து விடும் எனக்கூறி அனுப்பி விட்டார். உப்பளத்திலிருந்து வீரர்களின் கும்பல் வெளியே சென்ற பின்னர், முத்துசாமிப் பிள்ளை தானே கட்டுகளை விடுவித்துக் கொண்டு உப்பளத்திற்குள் நுழைந்தார். உள்ளே லோன்துரை கொலை செய்யப்பட்டு பிணமாகக் கிடந்தார். உப்பளத்தின் ஊழியர்கள் அனைவரும் கைகள் கட்டப்பட்ட நிலையில் கிடந்தனர்; குடிசை தீப்பற்றி எரிந்து கொண்டிருந்தது. முத்துசாமிப் பிள்ளை, கைகள் கட்டப்பட்டு தரையில் கிடந்த வேதமணி. பெரியநாயகம். இராமசாமிதாஸ், சுப்பிரமணிய பண்டிதன். வேலுக்கோனார் ஆகியோரின் சுட்டுகளை அவிழ்த்தார். இதற்குள்ளாக லோன்துரையின் உத்தரவால் காவல் நிலையம் சென்ற பெரிய வேல்நாடார் குலசேகரன்பட்டினம் காவல்நிலையம் சென்று காங்கிரஸ் காரர்கள் உப்பளத்தைத் தாக்குகிறார்கள். பெரிய கலவரமே நடக்கிறது உடனே வந்து நடவடிக்கை எடுங்கள்” எனப் புகார் கொடுத்தார். புகாரைப் பெற்றுக் கொண்ட காவல்துறை உதவி ஆய்வாளர் இராமலிங்கம் பிள்ளை காவல்நிலையத்திலிருந்து 1/2 பர்லாங் தூரத்திலிருந்த மருத்துவ அதிகாரி குலங்காத்த அய்யங்கார் மற்றும் போலீஸ்காரர்களையும், சில தனிப்பட்ட நபர்களையும் அழைத்துக்கொண்டு உப்பளத்திற்குச் சென்றார்.
அங்கே முன்வாசல் சின்னா பின்னமாக்கப் பட்டிருந்தது. உள்ளேயிருந்த குடிசை தீக்கிரையாக்கப்பட்டு தீயும் எரிந்து கொண்டிருந்தது. குடிசைக்கு 20 அடி கிழக்கே உப்பளத் தொழிற்சாலையின் அதிகாரி லோன்துரை கொலை செய்யப்பட்டு இரத்த வெள்ளத்தில் பிணமாகக் கிடந்தார். வேதமணி, பெரியநாயகம். இராமசாமிதாஸ், சுப்பிரமணியபண்டிதன், வேலுக்கோனார், முத்துசாமிப் பிள்ளை ஆகியோர். செய்வதறியாமல் திகைத்த வண்ணம் அங்கேயே இருந்தனர். அவர்களில் சிலருக்குக் காயம் இருந்தது. காயம்பட்டவர் களைக் கண்காணிப்பு அறைக்கு எடுத்துச் சென்று மருத்துவ அதிகாரி குலங்காத்த அய்யங்கார் மூலம் சிகிச்சை அளித்தனர். பின்னர் உயர் அதிகாரிகளும் வந்து பிரேத விசாரணை நடத்தினர். அதனைத் தொடர்ந்து லோன்துரையின் உடல் பிரேத பரிசோதனைக்காக செய்யது லால்சாகிப் என்ற போலீசார் மூலம் மருத்துவ மனைக்கு எடுத்துச் செல்லப்பட்டது.
பிரேத பரிசோதனையில் லோன்துரையின் உடம்பில் 16 காயங்கள் இருந்ததாக அறிவிக்கப்பட்டது. ஒவ்வொரு காயத்திற்கும் எண் கொடுத்து குறித்தனர் முதல் காயம் உடம்பிள் இடது பக்கத்தில் ஏற்பட்டு 5வது எலும்பை வெட்டியுள்ளது; 2வது காயம் உடம்பின் இடது பக்கம் ஏற்பட்டு 9வது எலும்பை வெட்டியுள்ளது; 3வது காயம் மிகப்பெரிய வெட்டுக்காயம் ஆகும். அதன் வழியாக குடல் வெளியே வந்துள்ளது; அந்த ஒருகாயமே லோன்துரையின் மரணத்தை உண்டு பண்ணப் போதுமானதாகும்.
4வது காயம் இடது கையில் ஐந்து அங்குல நீளமுடைய வெட்டுக்காயம் ஆகும். இக்காயம் இடது கையின் பின்பக்கத்தில் ஏற்பட்டு கை முட்டுக்களை வெட்டியுள்ளது. 6வது காயம் இடது முழங்கையிலுள்ள சிறிது வளைவான வெட்டுக்காயம் ஆகும். இது மேலிருந்து கீழாக வெட்டப்பட்டிருந்தது. 7வது காயம் வலது முழங்கையில் ஏற்பட்டுள்ள இரண்டு எலும்பு முறிவுகளாகும். 8வது காயம் வலது முழங்கைக்கு மேலே ஏற்பட்டிருந்த வெட்டுக்காயம் ஆகும். 9வது காயம் (மிகப் பெரிய காயம்) உடம்பில் வலது பக்கத்தின் மத்தியில் ஏற்பட்டுள்ள குத்துக்காயம் ஆகும், அது ஈரலையும் புடைத்து விட்டது. 10வது காயம் இரண்டாவது விலாஎலும்பை வெட்டியுள்ளது. 11.12வது காயங்கள் வலது
தோளுக்கு முன்னும் பின்னும் ஏற்பட்டுள்ள வெட்டுக்காயங்கள் ஆகும். 13,14வது காயங்கள் வலது கையில் ஏற்பட்டுள்ள. இரண்டு வெட்டுக் காயங்களாகும். 15,16வது காயங்கள் தலையின் பின்பக்கமுள்ள ஆழமான வெட்டுக் காயங்களாகும். இந்த வெட்டுக் காயங்களில் காயம் எண்கள் 3.7,9 ஆகியன ஏற்பட்டபிள் சில வினாடிகளே லோன்துரை உயிரோடு இருந்திருக்க முடியும் என பிரேத பரிசோதனை அறிக்கை கூறியது. பிரேத பரிசோதனை நிறைவுற்ற பின்னர் லோன்துரையின் உடல் குலசேகரள்பட்டினம் வடக்கூரிலுள்ள சி.எஸ்.ஐ. கல்லறைத் தோட்டத்தில் அடக்கம் செய்யப்பட்டது.
(தொடரும்)


