கோவில்பட்டி எஸ்.எஸ். துரைச்சாமி நாடார் மாரியம்மாள்கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 25-வது ஆண்டு விளையாட்டு விழா நடைபெற்றது.
விழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக உடற்கல்வி இயக்குனர் ஆறுமுகம் பேசுகையில், “தினமும் 45 நிமிடம் விளையாடுவது உடல் ஆரோக்கியத்திற்கு அவசியம். விளையாட்டு மாணவர்களுக்கு ஒழுக்கத்தைக் கற்றுக்கொடுப்பதோடு, தீய பழக்கங்களிலிருந்து அவர்களைக் காக்கும். இந்திய அளவில் நமது பல்கலைக்கழகம் விளையாட்டுத் துறையில் 4-வது இடத்தில் உள்ளது பெருமைக்குரியது,” எனத் தெரிவித்தார்.
பத்திரகாளி அம்மன் கோவிலில் இருந்து கல்லூரி வரை மாணவர்கள் தொடர் ஓட்டமாக வந்து ஜோதியை ஏற்றி வைத்தனர். ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை ஆண்கள் பிரிவில் துரைராஜ் மற்றும் பெண்கள் பிரிவில் சரண்யா வென்றனர். 2025-26ஆம் ஆண்டின் சிறந்த விளையாட்டு வீரராக மாணவர் விஷால் தேர்வு செய்யப்பட்டார்.

நாடார் உறவின்முறை சங்கத் தலைவர் ஆர்.எஸ். ரமேஷ் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில், கல்லூரிச் செயலாளர் கண்ணன் வரவேற்றார். உடற்கல்வித் துறைத் தலைவர் செல்லத்துரை ஆண்டறிக்கை வாசித்தார்.நிகழ்ச்சியில் நாடார் உறவின்முறை சங்க நிர்வாகிகள் செல்வராஜ், ஜெயபாலன், மாரியப்பன், வழக்கறிஞர்கள் அரவிந்த், செல்வம் மற்றும் கல்லூரி நிர்வாகக் குழு உறுப்பினர்கள், பேராசிரியர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர். கல்லூரி முதல்வர் செல்வராஜ் நன்றியுரை ஆற்றினார். உடற்கல்வித் துறை பேராசிரியர்கள் ஜெயசிவா, ரமேஷ் பாண்டியன், வெங்கடேஷ் ஆகியோர் விழா ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.


