நமது சமூகத்தின் ஆணிவேராக விளங்கும் மனிதவளம் உருவாகும் முதன்மை தளம் பள்ளிகளே.
இன்றைய குழந்தைகளே நாளைய மனிதவளத்தின் விதைகள். ஒட்டுமொத்த மனிதவளமும் பள்ளி எனும் சமூக அமைப்பிற்குள் இருந்தே வடிவெடுக்கிறது.
அந்த விதைகள் சரியான பாதையில் வளர வேண்டுமெனில், ஆசிரியர்களும் பெற்றோர்களும் இணைந்து பொறுப்புணர்வுடன் செயல்பட வேண்டும். அதே நேரத்தில், சமூக ஊடகங்களின் பங்களிப்பும் மிக அவசியமானது.
அதற்காக, மாணவப் பருவத்தினரை எளிதில் ஈர்க்கும் தன்மை கொண்ட சமூக ஊடகங்களை முற்றிலும் தவிர்ப்பது தீர்வல்ல. அவ்வாறு செய்வது, அவர்களிடையே வேறு விதமான மனஅழுத்தங்களையும் குழப்பங்களையும் உருவாக்கலாம்.
அதே சமயம், கட்டுப்பாடின்றி பயன்படுத்த அனுமதிப்பதும் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தும். அவர்களை அறிவார்ந்த முறையில் வழிநடத்துதல் மட்டுமே சரியான அணுகுமுறையாகும்.
பெற்றோர்களின் பங்கு
**********
“எல்லாரும் பயன்படுத்துகிறார்கள்; என் குழந்தையை மட்டும் நான் என்ன செய்ய முடியும்?” என்ற அளவுக்கு மீறிய சுதந்திரப் போக்கு, குழந்தைகளின் எதிர்கால வாழ்வை மிக மோசமாகப் பாதிக்கும் என்பதை பெற்றோர் உணர வேண்டும்.
இன்றைய டிஜிட்டல் காலகட்டத்தில், சமூக ஊடகங்கள் மனித வாழ்க்கையின் ஒரு அங்கமாக மாறிவிட்டன. குறிப்பாக, பள்ளிப் பருவத்தினர் அவற்றில் அதிகமாக மூழ்கி வருகின்றனர்.
தகவல் பரிமாற்றம், பொழுதுபோக்கு, கற்றல் கற்பித்தல் போன்ற பல நன்மைகள் அதில் இருந்தாலும், அளவுக்கு மீறிய பயன்பாடு கவனம் சிதறல், கற்றலில் ஆர்வமின்மை, வாசிப்பு பழக்கக் குறைவு, தூக்கமின்மை, மனஅழுத்தம் போன்ற பிரச்சினைகளை சிறுவயதிலேயே உருவாக்குகிறது.
மேலும், சமூக ஊடகங்களில் உள்ள Likes, Followers போன்றவை குழந்தைகளின் சுயமதிப்பீட்டை நிர்ணயிக்கும் அளவைகளாக அவர்களை இட்டுச் செல்கின்றன. இதன் விளைவாக, வளரும் பருவத்தினரின் இயல்பான ஆளுமை மங்கிப் போய், போலியான வாழ்க்கைமுறைகள் உருவாகின்றன.
இது அவர்களின் வாழ்க்கைமுறைகளில் ஏற்படும் அபாயங்கள். இதை கருத்தில் கொண்டு, பெற்றோர்கள் குழந்தைகளின் சமூக ஊடகப் பயன்படுத்துதலை முறையாகக் கண்காணித்து, நெறிப்படுத்த வேண்டும். அது ஒவ்வொரு பெற்றோரின் கடமையாகும்.
இதில் பெற்றோர்களும் முன்மாதிரியாக இருப்பது மிக அவசியம். தாங்கள் ஊடகங்களுக்குள் மூழ்கியபடியே அவர்களை அதிலிருந்து வெளியில் வரச் செய்யும் உபாயங்கள் எதுவும் செல்லுபடியாகாது.
ஆசிரியர்களின் பங்கு
*********
ஆசிரியர்கள் மாணவர்களின் சிந்தனையையும் ,சமூக உணர்வுகளையும் வடிவமைக்கும் முக்கியப் பங்கு வகிக்கிறார்கள்.
மனிதவள மேம்பாடு என்பது குடும்பத்திலும் பள்ளிகளிலும் தான் அதிகளவில் நிகழ்கிறது.
குழந்தைகள் குடும்பச் சூழலிலிருந்து சமூகத்திற்குள் நுழையும் போது,
புரிதல் குறைவால்
தாழ்வு மனப்பான்மை,
மன அழுத்தம்,
தனிமை உணர்வு,
போன்ற மனநலச் சிக்கல்களை சந்திக்கிறார்கள்.
மேலும் Cyber Bullying, தவறான உள்ளடக்கங்கள், தவறான தொடர்புகள் போன்ற இணைய அபாயங்களுக்கும் எளிதில் இப்பருவத்தினர் எளிதில் ஆளாகின்றனர்.
இவை குறித்து சரியான புரிதலை ஏற்படுத்துவது கல்வியின் முக்கிய அங்கம் என்பதை ஆசிரியர்களும் பெற்றோர்களும் உணர வேண்டும்.அதற்காக,
வகுப்பறை கற்பித்தலில் டிஜிட்டல் விழிப்புணர்வு பாடங்களை இணைத்தல்
சமூக ஊடகங்களில் காணப்படும் உள்ளடக்கங்களில் எது உண்மை, எது வணிக நோக்கம் கொண்டது என்பதை விவாதங்கள் மூலம் விளக்குதல் வேண்டும்
ஆனால், அறிவுரை அல்லது கடும் கட்டுப்பாடு இன்றி, எதார்த்தமான உரையாடல்களால்
வழிநடத்துதலே நேர்மறை பயன்களை விளைவிக்கும்.
பள்ளி மற்றும் கல்லூரிகளில் கருத்தரங்குகள், விவாதங்கள் மூலம் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி, மாணவர்களின் நடத்தை மாற்றங்களை கவனித்து பெற்றோர்களுடன் இணைந்து செயல்படுவதே சிறந்த அணுகுமுறை.
ஊடகங்களின் பொறுப்பு
*”*********
சமூக ஊடகங்கள் சமூகத்தை வடிவமைக்கும் சக்திவாய்ந்த கருவிகள். அதனால் சமூகத்தின் மீதான அவற்றின் பொறுப்பும்மிகப்பெரியது.
குழந்தைகளுக்கேற்ற நெறிமுறைகளை உருவாக்குதலில் கவனம் செலுத்த வேண்டும்.
வன்முறை, தவறான வாழ்க்கைமுறை, பொய்யான புகழ் ஆகியவற்றை மிகைப்படுத்தி காட்டுவதை தவிர்த்தல் அவசியம்.
சமூக ஊடக அடிமைத்தனம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளைத் திட்டமிட்டு வழங்குதல் ,கல்வி,
அறிவியல், கலை சார்ந்த பயனுள்ள உள்ளடக்கங்களை சுவாரசியமான காட்சியமைப்புகளுடன் அதிகரித்தல் போன்றவற்றை “ஊடகத் தர்மமாக” எண்ணி செயல்படுதலே சமூகத்தை சீரமைக்கும் சரியான முயற்சி.
குழந்தைகளின் எளிதில் ஈர்க்கப்படும் மன இயல்பை ஊடகங்கள் தவறாக பயன்படுத்தும்போது, அவர்களின் படைப்பாற்றல், ஆராய்ச்சி மனப்பாங்கு, இயல்பூக்கங்கள் ஆகியவை வளரும் பருவத்திலேயே முடங்கி போகும் அபாயம் உருவாகிறது. இதனால் ஏற்படும் மனிதவள குன்றல் எதிர்கால சமூகத்திற்கான பெரும் எச்சரிக்கையாகும்.
குழந்தைகளுக்கான திரைப்படங்கள், நிகழ்ச்சிகளின் இடையே சிறிய டிஜிட்டல் கல்வி காணொளிகள், விழிப்புணர்வு குறும்படங்கள், போன்ற சிறந்த நிகழ்ச்சிகளை அடிக்கடி வழங்கி, அவர்களையே தேடிப் பார்க்க வைக்கும் முயற்சிகளை ஊடகங்கள் முன்னெடுக்க வேண்டும்.
பெற்றோர், ஆசிரியர்கள், ஊடகங்கள் இந்த மூன்றும் இணைந்து செயல்படும் போது மட்டுமே சமூக ஊடகங்கள் பள்ளிப்பருவ மாணவர்களுக்கு அபாயமல்ல; வாய்ப்பாக மாற்ற முடியும்.இன்றைய சரியான வழிகாட்டலே நாளைய தலைமுறையின் சிறந்த வாழ்விற்கான சொத்து எனலாம் .எனவே பெரும் பொறுப்புணர்வோடு அனைத்துத் தரப்பினரும் நடந்து கொண்டால் மட்டுமே நமது எதிர்கால இளைஞர்களின் வாழ்வை நல்வழிப் படுத்த இயலும்.


