தூத்துக்குடியில் காணாமல் போன மீனவரை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவரது மனைவி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்துள்ளார்.
தூத்துக்குடி தாளமுத்துநகர் சுனாமி காலனியைச் சேர்ந்த குமரவேல் மனைவி முத்துமாரி (32) என்பவர் மாவட்ட ஆட்சியரிடம் அளித்த மனுவில், ” எனக்கு திருமணம் ஆகி 15 வருடம் ஆகின்றது. எங்களுக்கு 2 மகன்கள் ஒரு மகள் உள்ளனர். எனது கணவர் குமரவேல் மீன்பிடி தொழில் செய்து வருகின்றார். நான் தேவா அண்ட் கோ கம்பெனியில் வேலை செய்து வருகின்றேன்.
எனது கணவர் குடித்து விட்டு அடிக்கடி என்னிடம் சண்டை போட்டுக் கொண்டு அவர் அம்மா வீட்டிற்கு சென்று விடுவார். அதுபோல ஒரு வருடம் ஆக எனது மாமியார் வீட்டில் இருந்து கொண்டு கடலுக்கு தொழிலுக்கு சென்று வருவார். மேலும் தூத்துக்குடி மாதவ நாயர் காலனியை சேர்ந்த தங்கவேல் மகன் இசக்கிமுத்துவிற்கு சொந்தமான நாட்டு பைப்பர் படகில் கடந்த நான்கு மாதங்களாக வேலை பார்த்து வருகிறார்.
அதுபோல் கடந்த 6.01.2025 ஆம் தேதி இரவு 10 மணி அளவில் திரேஸ்புரம் கடற்கரையில் இருந்து மேற்கண்ட படகில் மாப்பிள்ளையூரணியைச் சேர்ந்த சௌந்தர்ராஜ் மகன் பிரவீன், பாம்பனை சேர்ந்த டொமினிக் மகன் ஜோசப் விஜய், மாதவ நாயர் காலனியை சேர்ந்த சேது முத்து மகன் தங்கவேல், பூபால்ராயர்புரத்தைச் சேர்ந்த தேர்ச்சாமி முக்குயூரை சேர்ந்த கருப்பசாமி மகன் முத்து, மேல சண்முகபுரத்தைச் சேர்ந்த சூசையா மகன் ஜெயக்குமார், மற்றும் எனது கணவர் குமரவேல் 7 நபர்களுடன் திரேஸ்புரம் கடற்கரையில் இருந்து மேற்கு கிழக்கில் 47 மையில் தொலைவில் வந்து தங்குகடல் தங்கி மீன்பிடிப்பதாக ஒனர் இசக்கி முத்து மூலம் அறிந்து கொண்டேன்.
பின்பு கடந்த 10.01.2025 தேதி இரவு 11 மணி அளவில் எனது கணவர் இயற்கை உபாத கழிக்க படகின் பின்புறம் சென்றவர் நிலை தடுமாறி கடலுக்குள் விழுந்து விட்டதாகவும் உடனே படகை திருப்பி அதை இடத்தில் தேடிப் பார்த்தும் கிடைக்காததால் அங்கிருந்து மீனவர்கள் உதவியோடு தேடியும் அப்பால் அங்கிருந்தவர்களின் கைபேசி மூலம் ஓனருக்கு தகவல் தெரிவித்து அதன் பேரில் எனது கணவர் கடலில் விழுந்து விட்டதாகவும் கூறினார்கள்.
மேலும் பஞ்சாயத்தார் மூலமாக அங்கிருக்கும் மீனவர்களை வைத்து இரண்டு நாட்கள் தேடி பார்த்தும் கண்டுபிடிக்க முடியவில்லை என்றும் எனது கணவர் கடலில் விழும்போது கருப்பு கலர் முழு சட்டையும் பச்சை கலர் பேண்டும் அணிந்து இருந்ததாக சக மீனவர்கள் கூறியதன் பேரில் கடந்த 12.01.2025-ம் தேதி சுமார் 6:30 மணிக்கு தூத்துக்குடி தருவைகுளம் மரைன் காவல் நிலையத்தில் இது சம்பந்தமாக புகார் மனு கொடுத்திருந்தேன்.
மேற்படி புகார் மனு மீது மேற்படி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு இன்று வரை எனது கணவரை கண்டுபிடித்து தரவில்லை. மேலும் இது சம்பந்தமாக படகு ஒனரிடம் கேட்டபோது அவர் முன்னுக்கு பின் முரணான தகவலை சொல்லி வருகிறார். மேலும் அவருடன் சென்றவர்களிடம் இது பற்றி விசாரித்த போது ஒவ்வொருவரும் முரண்பாடான தகவல்களை கூறி வருகின்றனர். ஆதலால் எனது கணவர் காணாமல் போனது சம்பந்தமாக மேற்படி நபர்களிடம் சந்தேகமாக உள்ளது.
மேலும் எனது கணவர் காணாமல் போய் 17 நாட்கள் ஆகியும் எந்த ஒரு தகவலும் தெரியவில்லை. எனது கணவர் தற்பொழுது உயிருடன் இருக்கிறாரா அல்லது இறந்து விட்டாரா எந்த ஒரு தகவலும் எனக்கு தெரியவில்லை. இது சம்பந்தமாக படகு ஒனரிடம் போய் நான் கேட்டபோது மேற்படி நபர் உனது கணவருக்கு கருமாதி செய் என்று என்னிடம் கூறினார். மேலும் நான் எனது கணவர் இறந்து விட்டார் என்று எப்படி உங்களுக்கு உறுதியாக தெரியும் என்று கேட்டதற்கு அவர் சரியான பதில் அளிக்கவில்லை.
மேலும் தூத்துக்குடி தருவைகுளம் மரைன் காவல் நிலையத்தில் மேற்படி நபர்கள் கூறியது போல் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. மேற்படி நபர்கள் என்னிடம் முதலில் எனது கணவருக்கு பைத்தியம் பிடித்தது போல் இருந்ததாகவும் அவரது கை கால்களை கட்டி போட்டதாகவும் பின்னர் சாப்பாடு கொடுப்பதற்கு அவிழ்த்து விடும் போது கடலில் பாய்ந்து விட்டார் என்றும் கூறினார்கள்.
ஆனால் முதல் தகவல் அறிக்கையில் அதற்கு நேர்மாறாக கூறியுள்ளார்கள். இது சம்பந்தமாக மேற்படி நபர்களிடம் தனித்தனியாக விசாரித்தால் உண்மை தன்மை புலப்படும். ஆகையால் கணவரை கண்டுபிடித்து தருவதற்கு மாவட்ட ஆட்சியர் உதவி செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.


