ஓட்டப்பிடாரம் பகுதியில் படைப்புழு தாக்குதலால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தமிழர் விடியல் கட்சியின் மாவட்ட பொறுப்பாளர் சந்தனராஜ் தலைமையில் நிர்வாகிகள் மற்றும் விவசாயிகள் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் அளித்துள்ள மனுவில், “ஓட்டப்பிடாரம் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சுமார் 3ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் மக்காச்சோளம், உளுந்து, பாசி, கம்பு போன்ற பயிர்கள் விவசாயம் செய்யப்பட்டு வருகிறது.
நல்ல விளைச்சல் கண்ட பயிர்களை அறுவடை செய்யும் நேரத்தில் படைப்புழுக்கள் தாக்குதலால் பயிர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் பருவம் தவறி பெய்த மழையால் பயிர்கள் அழுகிவிட்டன. ஏக்கருக்கு 60ஆயிரம் செலவு செய்துள்ள விவசாயிகள் நஷ்டம் அடைந்துள்ளனர். அவர்களுக்கு அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.


