தூத்துக்குடி அருகே உள்ள சவேரியார்புரம் புனித சவேரியார் ஆலயத்தின் 10 நாள் ஆண்டுத் திருவிழா,ஆண்டுதோறும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி, இந்த ஆண்டிற்கான திருவிழா நேற்று முன்தினம் (நவம்பர் 24) மாலையில் கொடியேற்றத்துடன் தொடங்கியது.

விழாவில் திசையன்விளை பங்குத்தந்தை அந்தோணி டக்ளஸ் தலைமை தாங்கித் திருவிழாக் கொடியினை ஏற்றி வைத்தார். பூச்சிக்காடு பங்குத்தந்தை ஜார்ஜ் ஆலிபன் சிறப்பு மறையுரை நிகழ்த்தினார்; தாளமுத்துநகர் பங்குத்தந்தை செல்வரத்தினம் முன்னிலை வகித்தார். இதில் திரளான இறைமக்கள் கலந்து கொண்டு வழிபாடு நடத்தினர்.

திருவிழா நாட்களில் தினமும் காலையில் திருயாத்திரை திருப்பலியும், மாலையில் ஜெபமாலை, மறையுரை மற்றும் நற்கருணை ஆசீரும் நடைபெற்று வருகின்றன. 9-ஆம் திருவிழாவான வருகிற டிசம்பர் 2-ஆம் தேதி மாலை 6.30 மணிக்கு நற்கருணை பவனி நடைபெறுகிறது.

10-ஆம் திருவிழாவான டிசம்பர் 3-ஆம் தேதி காலை 6 மணிக்கு தூத்துக்குடி மறைமாவட்ட ஆயர் ஸ்டீபன் அந்தோணி தலைமையில் திருவிழா சிறப்புக் கூட்டுத் திருப்பலி நடைபெறுகிறது. அதனைத் தொடர்ந்து காலை 9 மணிக்குப் புனித சவேரியாரின் சப்பர பவனி நடைபெற உள்ளது. விழா ஏற்பாடுகளைப் பங்குத்தந்தை இருதயராஜ் தலைமையில் அருட்சகோதரிகள், ஊர் நிர்வாகிகள் மற்றும் பங்கு மக்கள் சிறப்பாகச் செய்து வருகின்றனர்.