தூத்துக்குடியில் விற்பனைக்காக காரில் கஞ்சா கடத்தி வந்தவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து, 1 கிலோ 100 கிராம் கஞ்சா மற்றும் கார் பறிமுதல் செய்தனர்.
தூத்துக்குடியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் உத்தரவின்படி ஊரக உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் சுரேஷ் மேற்பார்வையில் சிப்காட் காவல் நிலைய ஆய்வாளர்சண்முகம் தலைமையிலான போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டபோது, ராஜகோபால்நகர் பகுதியில் காருடன் சந்தேகத்திற்கிடமான முறையில் நின்று கொண்டிருந்தவரை பிடித்து விசாரணை செய்ததில், அவர் அதே பகுதியைச் சேர்ந்த அய்யாதுரை மகன் விக்னேஸ்வரன் (எ) விக்கி (33) என்பதும் அவர் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்ததும் தெரியவந்தது.
உடனே போலீசார் விக்னேஸ்வரன் (எ) விக்கி என்பவரை கைது செய்து அவரிடமிருந்த 1 கிலோ 100 கிராம் கஞ்சா மற்றும் காரையும் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து சிப்காட் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கைது செய்யப்பட்ட விக்னேஸ்வரன் (எ) விக்கி மீது ஏற்கனவே தென்பாகம் காவல் நிலையத்தில் திருட்டு உட்பட 4 வழக்குகளும், சிப்காட் காவல் நிலையத்தில் ஒரு கொலை வழக்கும், புதுக்கோட்டை காவல் நிலையத்தில் ஒரு கஞ்சா விற்பனை வழக்கும், மெஞ்ஞானபுரம் காவல் நிலையத்தில் ஒரு கொலை முயற்சி வழக்கும் என 7 வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது


