கதைகளின் உலகம் இந்த பூமி.
இதன் படிமங்கள் கனத்தக் கதைகளால் ஆனவை.
பருப்பொருள் பெரும்பூமியின் பிள்ளைகளான மனிதனும் ஓர் ஆகச்சிறந்த கதைசொல்லி.
அந்த கதைசொல்லிகளின் வரிசையின்
ரத்தக்கவுச்சி வீசும் வேர்வை வரிகளால்
தனது சந்தனத்தம்மை கதையை மனதின் குரலாக விவரித்திருக்கிறார், எழுத்தாளர் எம்எம். தீன்.
தெரிந்தே குற்றமிழைத்துவிடும் தனிமனிதனின் ஓரிரவு மனப்போராட்டமே
எழுத்தாளர் எம்.எம். தீன் அவர்களின் ‘#சந்தனத்தம்மை’ நவலின் ஒருவரிக்கதை.
ஆனால், கதைத் தொடங்குகிற இடத்தில் நிகழ்கிற அதிர்ச்சியுறச் செய்யும் சம்பவத்தின் வழி நெஞ்சுநடுங்க நகர்த்திச் செல்லப்படுகிற எழுத்து, கண்ணீர் பிசுக்க, கனக்கும் இதயத்தை இருமடங்காய் துடிக்கச் செய்கிற நடையில் நம்மை விடியல் வரைக் கொண்டுவந்து நிறுத்துகிறது.
தண்டனையைவிட இதயமுள்ள ஒரு மனிதனை, குற்றவுணர்வு தயவு தாட்சன்யமின்றி கொன்றுவிடுகிறது.
தனது தேர்ந்த எழுத்தின் மூலம் அத்தகைய கொடுங்கோன்மைமிகு மனசாட்சியை
அந்திக் கருக்கல் தொடங்கி இளங்காலைப் பொழுதுவரை கண்களில் முள் தைக்கக் அடர்காட்டுப் பாதையில் அலைகழிக்க வைக்கி்றார் நாவலாசிரியர்.
சந்தேகத்தின் பெயரில் பொடனியில் அடித்து மனைவியைச் சரித்து விட்டு கண்ணீர் மல்கும் சாமான்யனானக் கட்டிடத் தொழிலாளி மேஸ்திரியின் மனதில் பின்னோக்கி விரிகிறாள், மரகதநாச்சியாள்.
செல்வாந்திர வாழ்வுக்கு விடையிறுத்து மலைக்கோயிலில் மேஸ்திரியை மணம்முடித்த நாச்சியாள், பண்ணைக் குடும்பத்துச் சகோதரர்களுடன் பிறந்த செல்வச் சீமாட்டி.
தங்கையின் பிடிவாதம் வென்றுவிட
மேஸ்திரியை மணக்கச் சம்மதித்து அவளை வெறுங்கையோடு அனுப்பிவிடுகின்றனர், அண்ணன்மார்கள்.
நாச்சியாளின் பேரன்பில் மனமொன்றியத் தாம்பத்தியத்தில் அவள் மடிசாய்ந்துத் திளைக்கும் மேஸ்திரிக்கு அவள் வயிற்றில் நெளியாத புழுப்பூச்சி குறித்த வருத்தம், அவனை மதுவின் மடியில் சாய்கிகிறது.
தன் தெய்வாம்சம் பொருந்திய வடிவத்தாலும் குணத்தாலும் ஊரையே வணங்கவைத்தவள்
தன் வயிறு விளங்கவேண்டி கணவனோடு கோயில், குளமென இறங்கி ஏறுகிறாள்.
இதயங்கள் இணக்கமுற்ற எளிய வாழ்வில் காற்றுவாக்கில் கல்லெறிந்த ஊர்ச்சொல்லொன்றில் காயம்பட்டு,
கம்பியாலடித்து நாச்சியாளைச் சரித்து விடுகிறவனின் அடுத்தக்கணங்கள் ஒரு நெடுங்கதைக்கு நெய்வார்த்திருக்கிறது.
அந்திக்கருக்கல் தொடங்கி யாமங்கள் கடந்து விடிபகலில் முடிவுறுகிற நாவலின் அத்தியாயங்களை எண்களால் அளக்காமல் பொழுதுகளால் புலர்த்தியிருப்பது எழுத்தாளரின் சொல்லாண்மைச் சிறப்பு.
காட்டையும் கருங்குன்றுகளையும் மலைவழிச் சாலையையும் ஊளையிடும் நாய்நரிகளையும் வானெரியும் நிலவை சாட்சியாய் வைத்து கதைமொழிந்து மனதைக் கனக்கவைத்திருக்கிறார், நாவலாசிரியர்.
ஊர் கொண்டாடும் சந்தனத்தம்மையான தன் மனைவி மரகதநாச்சியாளை ரத்தச் சகதியில் சாய்த்துவிட்டு துயருறும் ஒரு சரசரியின் மனசாட்சியை துலாக்கோலேந்திய வெள்ளுடை தரித்த நீதிதேவதையின் கண்கள்வழி இரவிலும் ஒளிரவிட்டிருக்கிறார், எழுத்தாளர் எம்.எம். தீன்.
முழுக்க முழுக்க ஆசிரியரின் கூற்றுவழி
விரிகிற கதையில் பிணமாய் விழுந்துகிடக்கும் நாச்சியாளின் சந்தனத் தேகம் காடுமுழுக்க ரத்தம்கமழ பரந்துபட்டு வாசிப்பைக் கோரி நீண்டுகிடக்கிறது.
ஆத்திரத்தில் அறிவிழந்துவிட்டு குற்றவுணர்வில் குமுறும் ஒரு பாமரமனதை
பதைபதைக்க விவரிக்கும் ஓரிரவுக்கதையான எழுத்தாளர் எம்.எம். தீன் அவர்களின் இந்த சந்தனத்தம்மை, மனதின் மாசறுக்கும் யுகக்காவியம் என்றால் அது மிகையில்லை.
*
சந்தனத்தம்மை
(நாவல்)
ஆசிரியர்: எம்.எம். தீன்
சந்தியா பதிப்பகம்
பக்கம்:138
₹ 140
(*’ரத்தசந்தனப்பாவை’, கவிஞர் என்.டி. ராஜ்குமாரின் கவிதைத்தொகுப்பின் பெயர்.
நன்றி:என்.டி. ராஜ்குமார்.)


