தாமிரபரணி ஆற்றில் மிகவும் பழமையான அணைக்கட்டான மருதூர் அணைக்கட்டின் நடுவே பாறையின் மேல் செங்கல் கட்டுமான அமைப்பை கள ஆய்வில் மனோண்மணியம் சுந்தரனார் பல்கலைகழக பேராசிரியர் சுதாகர் கண்டுபிடித்தார். முற்காலத்தில் வெள்ள அளவை கணக்கீடு செய்ய இந்த கட்டிடம், பயன்படுத்தபட்டிருக்கலாம் தற்போது பராமரிப்பு இன்றி இந்த கட்டிடம் இடிந்து விழுந்திருக்கலாம் என பக்கத்தில் இடிந்து கிடக்கும் கட்டிடத்தினை அவர் காட்டி, தகவல் தெரிவிக்கிறார்.
இதுபற்றிய செய்தி தொகுப்பு வருமாறு.
தாமிரபரணி நதி வற்றாத ஜுவநதி. பொதிகைமலையில் உருவாகி புன்னக்காயலில் கடலில் கலக்கும் அற்புதமான நதி. இந்த ஆற்றில் திருநெல்வேலி மாவட்டத்தில் 6 தடுப்பணைகளும், தூத்துக்குடி மாவட்டத்தில் 2 தடுப்பணைகளும் உள்ளது. இதில் ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டு ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்டது. மற்ற அனைத்து அணைகளும் நமது முன்னவர்களால் கட்டப்பட்டதாகும். பலநூற்றாண்டுகளை கடந்து இந்த அணைக்கட்டு பல வெள்ளங்களை எதிர்த்து கம்பீரமாக காட்சியளிக்கிறது.
தூத்துக்குடி மாவட்டத்தில் மருதூர் அணைக்கட்டு, ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டு என இரண்டு கால்வாய்கள் உள்ளன. தாமிரபரணி ஆற்றிலேயே மிகவும் பழமையான அணைக்கட்டு மருதூர் அணைக்கட்டு. இந்த அணை 1507 ஆம் ஆண்டு பாண்டியர் ஆட்சிகாலத்தில் 60,122 ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டுள்ளதாக வரலாறு கூறுகிறது. இந்த மருதூர் அணைக்கட்டு 4 ஆயிரம் அடி நீளம் கொண்டது. இதனை பாம்பனை என்றும் கூறுவார்கள். தாமிரபரணியில் மிக நீளமான தடுப்பணை இதுதான்.
தாமிரபரணியிலுள்ள எல்லா அணைக்கட்டுகளிலும் அதிகப்படியான நெல் விளைச்சலுக்குத் தேவையானத் தண்ணீரைக் கொடுப்பது மருதூர் அணைக்கட்டேயாகும். இது பாளையங்கோட்டைக்குக் கிழக்கே சில மைல் தூரத்திலிருக்கிறது. திருநெல்வேலி சரித்திரம் எழுதிய கால்டுவெல் அவர்கள், “இந்த அணைக்கட்டு எப்போது கட்டப்பட்டது என்று தெரியவில்லை. ஆனால் 1792 இல் ஏறக்குறைய முற்றும் இடிக்கப்பட்டு திரும்பகட்டப்பட்டது. கல்வெட்டொன்றில் கூறப்பட்டபடி இது டோரின் என்பவர் கலெக்டராய் இருந்த காலத்தில் புதுப்பிக்கப்பட்டது. கர்னல் கால்டு வெல்லினால் மறுபடியும் அவ்வணைக்கட்டில் அதிகமானத் திருத்தங்கல் செய்யப்பட்டுள்ளன என்று எழுதியுள்ளார்.

மருதூர் அணையில் கீழக்கால்வாய், மேலக்கால்வாய் என இரண்டு உள்ளது. இதில் கீழக்கால்வாயில் 4,815 குளத்து பாசனம் உள்பட 7785 ஏக்கர் பாசன வசதி பெறுகிறது. மேலக்கால்வாயில் 8,208 குளத்துப் பாசனம் உள்பட 12,762 ஏக்கர் பாசன வசதி பெறுகிறது. அதோடு மட்டுமல்லாமல் நாசரேத்தை சுற்றியுள்ள ஐந்து குளங்கள், சடையநேரி கால்வாய் மூலம் வெள்ளகாலங்களில் தண்ணீரை சாத்தான் குளம் பகுதிக்கு கொண்டு செல்லும் சடையநேரி கால்வாய் போன்றவை மருதூர் மேலக்கால் மூலமாகவே கொண்டு செல்லப்படுகிறது.
இந்த அணைக்கட்டில் கார், பிசானம், முன்கார் என்னும் பழந்தொழி சாகுபடி ஆகிய மூன்று போகம் விளைந்து வந்தது.
இந்த அணைக்கட்டில் மொத்த நீளம் 4097 அடி. தரை மட்ட லெவல் 67.78 பீட் ஆகும்.அணையில் நீர் விழும் வளைவு 172 பீட் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. அணையில் நீர் விழும் வளைவு மேல் மட்டம் 75.96 ஆகும் அணையில் கல்கட்டம் உள்ள உயரம் 777.96 அடி. அணைமேல் மட்ட இடது புறம் 77.30 அடி ஆகும். மத்திய புரம் 77.78 அடியாகும். வலது புரம் 78.90அடி எனக்குறிப் பிடப்பட்டுள்ளது. மொத்த நீர் பிடிப்பின் மொத்த உயரம் வலது புறம் 97.28 ஆகும். இடது புறம் 89 வெளியேறும் தண்ணீரின் அளவு 775 சிஎஸ் என்பதாகும். அணையில் உள்ள மொத்த மணல் வாரி 12 ஆகும்.
இந்த அளவுக்கு பிரமாண்டமாக உள்ள உள்ள அணை போதிய பராமரிப்பு இல்லாமலேயே உள்ளது.
மருதூர் இருந்து பிரிக்கப்பட்ட ஆர்ச் போன்ற கல் தூண்கள் கிடக்கிறது. இதை இவ்வளவு தூரம் யாரும் கல் தூணை கொண்டு போட்டிருக்க முடியாது. அப்படியென்றால். இங்கு மிகப்பெரிய கோயில் இருந்து இருக்க வேண்டும். அந்த கோயில் கோட்டைச் சுவரைக் கொண்டு இந்த அணைக்கட்டு கட்டப்பட்டிருக்க வேண்டும். எனவே தான் இங்குள்ள கல்வெட்டுகளை ஆய்வு செய்ய வேண்டும் என்று மதுரை உயர்நீதி மன்றத்தில் எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசுமனுதாக்கல் செய்துள்ளார். அந்த மனு நிலுவையில் உள்ளது.
இந்தநிலையில் இந்த மருதூர் அணைக்கட்டு பகுதியில் திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக தொல்பொருள் ஆராய்ச்சி மைய இயக்குநர் பேராசிரியர் சுதாகர் சிவசுப்பிரமணியம் கள ஆய்வு மேற்கொண்டார். அப்போது மருதூர் அணைக்கட்டின் கீழ்பகுதியில் ஆற்றின் நடுப்பகுதியில் ஒரு சிறு மலை போன்ற பகுதி உள்ளது. அந்த பாறையின் நடுவே செங்கல் கட்டுமான அமைப்பு ஒன்றை கண்டுபிடித்துள்ளார். அந்த செங்கல் கட்டுமானம் 6 செங்கல் அகலத்திலும், 20 செங்கல் நீளத்திலும் அந்த கட்டுமான அமைப்பு உள்ளது. மேலும் அதில் இருந்து உடைந்து விழுந்த செங்கல் கட்டுமான அமைப்பு பாறைக்கு அருகிலேயே கிடக்கிறது. அது 40 அடுக்கில் பிரமாண்டமாக காட்சி அளிக்கிறது.

இதுகுறித்து பேராசிரியர் சுதாகர் சிவசுப்பிரமணியம் கூறும்போது,
தாமிரபரணி ஆற்றில் மிகவும் பழமையான அணைக்கட்டு இந்த மருதூர் அணைக்கட்டு. இந்த அணைக்கட்டு பாண்டியர் காலத்தில் கட்டப்பட்ட அணைக்கட்டு. இன்று கள ஆய்வு மேற்கொண்ட போது ஆற்றின் நடுவே கீழ்பகுதியில் சுண்ணாம்பு பாறையின் மேல் 6 அடுக்கு அகலத்திலும், 20 அடுக்கு நீளத்திலும் ஒரு செங்கல் கட்டுமான அமைப்பு காணப்பட்டது. இது மழைக்காலங்களில் வரும் வெள்ள அளவை கணக்கீடு செய்வதற்காக பயன்படுத்தப்பட்டதாக இருக்கலாம் என்று தெரிகிறது. எனவே இந்த பகுதியில் தொல்லியல் துறையினர் முறையாக ஆய்வு மேற்கொண்டால் மேலும் பல வரலாறுகள் வெளியில் தெரிய வாய்ப்பு உள்ளதாக அவர் தெரிவித்தார்.
தொடர்ந்து பழமையான மருதூர் அணையில் தொல்லியல் ஆய்வாளர் ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்பது தொல்லியல் ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.
பாக்ஸ் போடலாம்
இந்த அணைக்கட்டு பூதம் கட்டிய அணைக்கட்டு என்றும் கூறுவார்கள். இந்த இடத்தில் அணைக்கட்டவேண்டும் என்று ஒரு சிற்றரசர் முயற்சி செய்தும் முடியவில்லை. எனவே யாராவது இந்த அணைக்கட்டைக் கட்டி முடித்தால் அவர்களுக்கு வேண்டிய பொருளை நான் தருவேன் என்று கூறினாராம். அப்போது அங்கு வந்த முதியவர் இரவோடு இரவாகப் பெரியப் பூதப்படைகளைக் கொண்டு வந்து இந்த அணையைக் கட்டினாராம். மறுநாள் அரசன் என்ன வேண்டும் என்று கேட்ட போது அவருடைய மகள்களான சோழ வல்லி, மருத வல்லியை மணமுடித்துத் தர கேட்டாராம். வேறு வழியில்லாமல் மகள்கள் இருவரையும் அரசன் அந்த முதியவருக்கு மணமுடித்துக் கொடுத்தாராம்.
ஆனால் இந்தத் திருமணம் மீது வெறுப்பு கொண்ட இளவரசிகள் இந்த அணையில் இருந்து குதித்து இறந்து விட்டார்கள் என்று கர்ண பரம்பரை கதை ஒன்று கூறுவார்கள்.
தற்போது அந்தச் சகோதரிகளுக்கான கோயில் மேலக்கால்வாய் ஓரத்தில் உள்ளது. தற்போதும் இங்கு மழை பெய்யவில்லை என்றால் விவசாயிகள் இந்த அம்மன்களுக்குப் பூஜை செய்து கிடா வெட்டி பொங்கலிடுகிறார்கள். அந்தச் சமயத்தில் மழை பெய்கிறது என்பது ஐதீகம்.
பாக்ஸ் போடலாம்
கடந்த 1996 ல் டாக்டர் கலைஞர் முதல்வராக இருந்த போது 12 அரை கோடி ரூபாய் செலவில் சடையநேரி கால்வாய் திட்டம் விரிவாக்கப்பட்டது. இந்த திட்டத்தின் போது மருதூர் அணையில் உள்ள 12 மணல் வாரி தூர்வாரப்பட்டு, அணை உயர்த்தப்பட்டது. அந்த பணி முடிவடைந்த பிறகு கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அணையை மேம்படுத்த பணிகள் நடந்தது. ஆனாலும் இந்த பணிகள் முழுமை யடையவில்லை. இந்த அணையை பழமை மாறாமல் புதுப்பிக்க வேண்டும் என பல கோரிக்கை விடுக்கப்பட்டும் கான்கிரிட் போட்டு பழமையை மறைத்துவருகிறார்கள். எனவே இங்கு பணி செய்யும் போது பழமை மாறாமல் புதுப்பிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.


