உலக நாகரீகத்தின் தொட்டில் என அழைக்கப்படும் ஆதிச்சநல்லூரில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்று மத்திய பட்ஜெட்டில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த 2020ம் ஆண்டு அறிவித்தார். இதையடுத்து மத்திய தொல்லியல் துறை திருச்சி மண்டல இயக்குநர் அருண்ராஜ் மற்றும் ஆய்வாளர் எத்திஸ்குமார் ஆகியோர் அதற்கான பணிகளில் ஈடுபட்டு வந்தனர்.
இதற்காக ஆதிச்சநல்லூர் பரம்பு பகுதியில் முதல்கட்டமாக அகழாய்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டது. இதில் 100க்கும் மேற்பட்ட முதுமக்கள் தாழிகள், இரும்பு பொருட்கள், மண்பாண்டங்கள், தங்கத்தால் ஆன நெற்றிப்பட்டயம், வெண்கலப்பொருட்கள் என ஏராளமான பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டது.
இதற்கிடையில் ஆதிச்சநல்லூர் பரம்பில் அகழாய்வு பணியின் போது கண்டுபிடிக்கப்பட்ட முதுமக்கள் தாழிகளை அந்த இடத்திலேயே காட்சிப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இதற்காக ஆதிச்சநல்லூர் பரம்பில் தோண்டப்பட்ட குழியின் மேல் உடைக்கமுடியாத தரத்தால் ஆன கண்ணாடி பேழைகள் அமைக்கப்பட்டது. எடுத்த பொருட்களை எடுத்த இடத்திலேயே காட்சிப்படுத்துவதற்கு சைட் மியூசியம் என்று பெயர். இவ்வாறாக அமைக்கப்பட்ட இந்த சைட்மியூசியத்தினை கடந்த மாதம் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் திறந்து வைத்தார்.
இந்த சைட் மியூசியம் திறக்கப்பட்ட நாளில் இருந்தே ஏராளமானோர் வந்து பார்வையிட்ட வண்ணம் உள்ளனர். மேலும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவிகளும் இதை பார்வையிட வருகை தருகின்றனர்.
இந்த நிலையில் இன்றைய தினம் திருநெல்வேலி ரோஸ்மேரி மாடல் பப்ளிக் பள்ளியில் 50க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் ஆதிச்சநல்லூரில் அமைந்துள்ள சைட் மியூசியத்தினை பார்வையிட வருகை தந்தனர். அவர்கள் சைட்மியூசியம் மற்றும் அகழாய்வு பணியில் கண்டுபிடிக்கப்பட்ட பொருட்களை பார்வையிட்டனர். மாணவ மாணவிகளுக்கு எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு, ஆய்வு மாணவர் ராஜேஸ் ஆகியோர் விளக்கமளித்தனர். பள்ளி தாளாளர் சுஜித்ரா ஜெயரஸ், தலைமை ஆசிரியை மாலின் பிரமிளா, வரலாற்று ஆசிரியர் நிர்மலா, தமிழ் ஆசிரியர் லில்லி திவ்யா ஆகியோர் உடன் வந்தனர்.


