எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு, தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் லெட்சுமி பதியிடம் மனு ஒன்றுகொடுத்திருந்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது.
ஸ்ரீவைகுண்டம் புதுக்குடி & ஆழ்வார் திருநகரி இடையே தாமிரபரணி ஆற்றில் தூரம் 4 கிலோ மீட்டர் தான். இதில் ஏற்கனவே ஸ்ரீவைகுண்டம் அணையில் இருந்து பாலம் வரை அரைகிலோ மீட்டர் சுத்தப்படுத்தி வைத்துள்ளோம். மீதி இருப்பது சுமார் 3.5 கிலோ மீட்டர் தான். கரை இருபுறமும் சுத்தப்படுத்தி மரங்கள் நட இவ்விடம் தகுதி உள்ளதாக இருக்கிறது. இந்த இடத்தில் பல மண்டபங்கள் புதர் மண்டி கிடக்கிறது. அந்த மண்டபத்தினை நாம் சுத்தப்படுத்தினார் நமது முன்னோர் பாராம்பரியம் வெளிப்படும். ஆழ்வார்திருநகரியில் ஒரு இடத்தில் சாக்கடை தாமிரபரணியில் கலந்து வருகிறது. அதை சுத்தப்படுத்த ஆழ்வார்திருநகரி பேரூராட்சி மூலம் ஏற்பாடு செய்து விடலாம் .
எனவே தாமிரபரணியில் முதல் கட்டமாக நாலு கிலோ மீட்டர் சுத்தப்படுத்தி மரம் நட்டு மாதிரியாக காட்டி விடலாம். ஏற்கனவே இருக்கும் கரைகளை செம்மைபடுத்தியது போலவும் இருக்கும். மாவட்ட ஆட்சி தலைவராக சந்தீப் நந்தூரி அவர்கள் பணியின் போது மாவட்டம் முழுவதும் 40 ஜே.சி.பி இயந்திரத்தினை ஸ்பான்சர் வாங்கி மாவட்டம் முழுவதும் தாமிரபரணி கரையில் 40 கிலோ மீட்டரும் சுத்தப்படுத்த முயற்சி செய்யப்பட்டது. கல்லூரி மாணவ மாணவிகள் தொண்டு நிறுவனங்களை மரம் நட பயன்படுத்தினார்கள். ஆனால் தூரம் அதிகமாக இருந்த காரணத்தினால் இந்த திட்டம் தூத்துக்குடி மாவட்டத்தில் வெற்றியடையவில்லை.
முதல் கட்டமாக இந்த நான்கு கிலோ மீட்டரில் 1 வார முகாம் இந்த நாலு கிலோ மீட்டரில் மட்டும் பயன்படுத்தினால் இவ்விடம் சுத்தமாகி விடும். அதன் பின் 3 மாதத்துக்கு ஒருமுறை நாலு கிலோ மீட்டர் சுத்தப்படுத்தினால் மூன்று வருடத்தில் தாமிரபரணி முழுவதும் சுத்தமாகி விடும். பொதுப்பணித்துறை அதிகாரிகள், வனத்துறை அதிகாரிகள், ஏரல் ஸ்ரீவைகுண்டம் தாசில்தார், ஸ்ரீவைகுண்டம் பிடிஓ, ஆழ்வார்திருநகரி பேரூராட்சி அதிகாரி, தொண்டு நிறுவனங்களை இந்த பணிக்கு பயன்படுத்தலாம் என்று கூறியிருந்தார். மாவட்ட ஆட்சித்தலைவர் லெட்சுமி பதி இந்த மனுவை பொதுப்பணித்துறை அதிகாரிக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்க ஆணையிட்டார்.
இதற்கிடையில் தூத்துக்கடி கீழ் தாமிரபரணி மற்றும் கோரம்பள்ளம் ஆறுவடிநில கோட்ட செயற்பொறியாளர் முத்தாலங்குறிச்சி காமராசுவுக்கு பதில் அனுப்பியுள்ளார். அந்த பதிலில் கூறியிருப்பதாவது. தாங்கள் திருவைகுண்டத்தில் இருந்து ஆழ்வார்திருநகரி வரை தாமிரபரணி ஆற்றில் முட்செடிகளை அகற்றி மரம் நட்டுத்த்ர ஆவண செய்ய வேண்டி இருந்தீர்கள். இந்த பணியை எக்னேரோ நிறுவனம் மற்றும் தொண்டு நிறுவனங்கள் மூலம் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று பதிலளித்தனர்.
இதனால் விரைவில் தாமிரபரணி ஆற்றில் திருவைகுண்டம் முதல் ஆழ்வார்திருநகரி வரையுள்ள நதி சுத்தப்படுத்தபடும் என பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


