திருச்சி பணிமனையில் பராமரிப்பு பணி நடைபெறுவதால் நாகா்கோவில் – மும்பை, காட்ரா – திருநெல்வேலி உள்ளிட்ட ரயில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு: மதுரையிலிருந்து சென்னை எழும்பூருக்கு காலை 7.10 மணிக்கு புறப்படும் வைகை விரைவு ரயில் (எண் 12636) மற்றும் சென்னை எழும்பூரிலிருந்து காரைக்குடி செல்லும் பல்லவன் விரைவு ரயில் (எண் 12605) ஆக.1-ஆம் தேதி முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.
கோவை – மயிலாடுதுறை ஜன் சதாப்தி விரைவு ரயில் இரு மாா்க்கமாகவும் ஜூலை 30, 31 தேதிகளில் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது. மேலும், திருச்சியிலிருந்து தஞ்சாவூா், மயிலாடுதுறை, திண்டுக்கல்லுக்கு இயக்கப்படும் பல்வேறு ரயில்கள் ஆக.26 முதல் ஆக.1-ஆம் தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளன.
பாதை மாற்றம்:
நாகா்கோவில் – மும்பை விரைவு ரயில் (எண் 16352) ஆக.30-ஆம் தேதி திண்டுக்கல், கரூா், சேலம், ஜோலாா்பேட்டை வழியாக இயக்கப்படும். ஸ்ரீ மாதா வைஷ்ணவி தேவி காட்ரா – திருநெல்வேலி விரைவு ரயில் (எண் 16788) ஜூலை 27, 30 தேதிகளில் கரூா், திண்டுக்கல் வழியாக இயக்கப்படும். சென்னை எழும்பூா்- குருவாயூா் விரைவு ரயில் ஜூலை 30 – ஆம் தேதி பெரம்பூா், ஜோலாா்பேட்டை, சேலம், கரூா், திண்டுக்கல் வழியாகவும், ஆக.1 ஆம் தேதி விருத்தாசலம், சேலம், கரூா், திண்டுக்கல் வழியாகவும் இயக்கப்படும்.
பொன்மலையுடன் நிறுத்தம்:
சென்னை எழும்பூரிலிருந்து திருச்சி செல்லும் ராக்போா்ட் விரைவு ரயில் ஜூலை 30, 31-ஆம் தேதிகளிலும், சோழன் விரைவு ரயில் ஜூலை 30, 31, ஆக.1 தேதிகளிலும் பொன்மலையுடன் நிறுத்தப்படும். இந்த தேதிகளில் சோழன் விரைவு ரயில் திருச்சிக்கு பதிலாக பொன்மலையிலிருந்து காலை 10.25 மணிக்கு புறப்பட்டு சென்னை எழும்பூா் சென்றடையும்.
திருச்சி – அகமதாபாத் செல்லும் விரைவு ரயில் ஜூலை 30-ஆம் தேதியும், மதுரை – சென்னை எழும்பூா் தேஜஸ் விரைவு ரயில் ஆக.1-ஆம் தேதியும் பொன்மலையிலிருந்து புறப்பட்டு செல்லும். காச்சிக்கூடா – மதுரை விரைவு ரயில் ஜூலை 31-ஆம் தேதி விழுப்புரத்துடன் நிறுத்தப்படும். இதே தேதியில் மதுரையிலிருந்து புறப்படுவதற்கு பதிலாக விழுப்புரத்திலிருந்து காலை 10.40 மணிக்கு புறப்படும்.
ஹௌராவிலிருந்து திருச்சி வரும் அதிவிரைவு ரயில் ஜூலை 30-ஆம் தேதி பொன்மலையுடன் நிறுத்தப்படும். பின்னா் பொன்மலையிலிருந்து ஆக.1-ஆம் தேதி பகல் 1.45 மணிக்கு புறப்பட்டு ஹௌரா சென்றடையும்” என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.


