7போதைப்பொருள் பயன்பாடு மற்றும் கடத்தலை முற்றிலும் ஒழிக்கும் விதமாக, ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 26 ஆம் திகதி போதைப்பொருள் மற்றும் சட்ட விரோத கடத்தல் ஒழிப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது.
போதை இல்லாத ஒரு சமூகத்தை உருவாக்குவோம் என்ற எண்ணக்கருவின் கீழ் 1987 ஆம் ஆண்டு ஐக்கியநாடுகள் பொதுச்சபையினால் அங்கீகரிக்கப்பட்ட நாளாக இது கருதப்படுகிறது.
“போதை” சமூகத்தை அழிக்கும் ஒரு “அரக்கன்’. போதைப்பொருளால், அவர் மட்டுமின்றி, அவரது குடும்பம் மற்றும் சமுதாயமும் சீரழிந்து போகிறது. இதுதான் அனைத்து வகையான நோய்களுக்கும் முன்னோடி. சிலர் இதற்கு அடிமையாகவே மாறிவிட்டனர். போதைப்பொருள் பயன்பாடு எந்தளவுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறதோ, அதைவிட சட்டவிரோதமாக கடத்தல்களில் ஈடுபட்டு அதன் மூலம் பணம் ஈட்டப்படுவதாலும் பாதிப்பு ஏற்படுகிறது.
போதைப்பொருள் என்றவுடன் தனித்து சிகரெட் மதுபானத்தினை மட்டுமே அனைவரும் கருதுகின்றனர். அதை விடுத்தும் கஞ்சா, கொகைன், பிரவுன் சுகர், ஹெராயின், அபின் , புகையிலை, மது , ஊக்க மருந்து, ஒயிட்னர் மற்றும் சில மருந்துகள், ஆகியவை இளைஞர்களிடம் வேகமாக பரவும் வருகின்றன. உடலை மட்டுமின்றி, மனதையும் சிதைத்து, குடும்ப வாழ்க்கையையும் அழித்து, முடிவில் மரணத்துக்கே அழைத்து செல்பவை இவை.
ஆகவே இந்த போதைப்பொருளை ஒழிப்போம் நிம்மதியான வாழ்வை வாழ்வோம் என்ற எண்ணக்கருவின் கீழ் “போதை பாவனையற்ற வாழ்க்கை – ஜீவன் நிறைந்த வாழ்க்கை” என்ற தொனிப்பொருளின் கீழ் இம்முறை தேசிய போதை பொருள் ஒழிப்பு வாரம் அனுஷ்டிக்கப்படுகிறது.
இன்றைய சூழலில் இளைஞர்கள் மட்டுமல்லாமல், பள்ளி மாணவர்களும் போதைப்பொருளுக்கு அடிமையாவது வருந்தத்தக்க விஷயமாகும். இம்மாதிரியான மாணவர்களுக்கு சரியான விழிப்புணர்வு வழங்கி அப்பழக்கத்தில் இருந்து அவர்களை விடுவிக்க வேண்டும் என்பது எமது கடமையாகும்.


