வல்லநாடு அருகே ஓய்வுபெற்ற போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தீயில் கருகி உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு அருகே வசவப்பபுரம் பசும்பொன் நகரைச் சேர்ந்தவர் முருகன் (65). ஓய்வுபெற்ற போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர். இவருக்கு மனைவி மற்றும் 4 மகன்கள் உள்ளனர். முருகன் கடந்த சில மாதங்களாக பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவில் வசவப்பபுரத்தில் கோவில் கொடை விழா நடந்தது. எனவே, முருகனின் குடும்பத்தினர் கோவிலுக்கு சென்றனர்.
முருகன் மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். அப்போது அவர் சிகரெட் பிடித்தபோது, சிகரெட்டில் இருந்த நெருப்பு தணல் எதிர்பாராதவிதமாக சட்டையில் விழுந்து தீப்பற்றியதாக கூறப்படுகிறது. மேலும், பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட அவரால் எழுந்து செல்ல முடியாததால் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பரிதாபமாக இறந்தார். கோவிலுக்கு சென்று திரும்பி வந்த குடும்பத்தினர், முருகன் தீயில் உடல் கருகி இறந்து கிடந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் முறப்பநாடு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, இறந்த முருகனின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சிகரெட் பிடித்த ஓய்வுபெற்ற போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தீயில் கருகி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.


