தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் மனு கூட்டம் எஸ்பி ஆல்பர்ட் ஜான் தலைமையில் நடைபெற்றது.
தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் உத்தரவின்படி ஒவ்வொரு வாரமும் புதன்கிழமைதோறும் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது. அதன்படி புதன் கிழமையான இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் தலைமையில் குறைதீர்க்கும் மனு கூட்டம் நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்டத்தில் காவல் நிலையங்களில் புகார் அளித்த 4 மனுதாரர்கள் மற்றும் புதிதாக மனு கொடுக்க வந்த 76 மனுதாரர்கள் என மொத்தம் 80 மனுதாரர்கள் புகார் மனு அளித்தனர். பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உடனடியாக விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்குமாறு சம்மந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
வாரந்தோறும் புதன்கிழமைகளில் தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சார்பாக பொதுமக்கள் குறைதீர்க்கும் மனு கூட்டம் மாவட்ட காவல் அலுவலகத்தில் நடைபெறும். இக்கூட்டத்தில் காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட மனுக்களின் விசாரணையில் திருப்தி அடையாத புகார்தாரர்கள் நேரில் ஆஜராகி தங்களின் கருத்துக்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் தெரிவிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


